இலங்கை – தென்கொரியா இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்த இணக்கம்!

தென்கொரியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, அந்நாட்டின் வெளிவிவகார பிரதி அமைச்சர் யுயி-ஹே சிசிலியா சுங்  ஆகியோருக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று புதன்கிழமை (25) சியோலில் நடைபெற்றது.

இலங்கை மற்றும் தென்கொரியாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயன்முறையின் முன்னேற்றம் மற்றும் பொருளாதார மீட்சிக்கு அமைவாக பொருளாதார ஒத்துழைப்பை ஆழப்படுத்துதல், இலங்கையர்களுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு சந்தையை விரிவுபடுத்துதல், அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை பலப்படுத்துதல் போன்ற விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.

இலங்கை மற்றும் தென்கொரியாவிற்கு இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு அடுத்த வருடத்துடன் (2027) 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த வரலாற்று மைல்கல்லைக் கொண்டாடும் வகையில் உயர்மட்ட விஜயங்கள் மற்றும் நிறுவன ரீதியான தொடர்புகளை அதிகரிப்பது தொடர்பிலும் இரு தரப்பினரும் இணக்கம் கண்டுள்ளனர்.

இச்சந்திப்பின் ஊடாக இலங்கை மற்றும் தென்கொரியாவிற்கு இடையிலான நீண்டகால பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு மீள உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.