ஆயுத யுத்தம் மௌனித்த பின் கலை, இலக்கியங்களும் மூச்சிழந்தது: ஐங்கரநேசன்

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் கலை, இலக்கியங்கள் அளப்பெரிய பணிகளை ஆற்றியிருக்கின்றன. போர்க்களத்தில் ஆயுதங்கள் பேசியபோது மக்கள் களத்தில் நின்று கலை, இலக்கியங்கள் பேசின என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

போராட்டங்களின் நியாயங்களையும், வலிகளையும் சொல்லி மக்களை எழுச்சி கொள்ள வைத்து அவர்களைத் தேசமாக ஒருங்கிணைத்ததில் கலை, இலக்கியங்கள் பெரும் பங்களிப்புகளைச் செய்தன.
ஆனால், முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மௌனித்ததோடு, எமது கலை, இலக்கியங்களும் மூச்சிழந்து விட்டன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கலை, இலக்கியங்கள் பேசவேண்டிய விடயங்கள் இன்னும் ஏராளம் இருக்க, அவை ஊமையாக இருப்பது வருத்தமளிக்கிறது என்றும் பொ.ஐங்கரநேசன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதே தவிர, தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் முடிவுக்கு வரவில்லை.

போராட்டம் முளை கொண்டதற்கான காரணங்கள் இப்போதும் அப்படியே நீடிக்கும் போது, போராட்டம் முடிவுக்கு வர இயலாது. சாத்தியமான வழிகளில் எல்லாம் ஜனநாயகப் போராட்டமாக அது தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என்றும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

துரதிர்ஷ்டவசமாக, இப்போராட்டங்கள் இன்று அரசியல் வாதிகளுக்குரிய ஒரு பணி என்பதாக மாத்திரமே சுருங்கிப் போயுள்ளன. ஆயுதப் போராட்டத்தின் முடிவுடன் தமது பேனாக்களை மூடி வைத்துள்ள கலை, இலக்கியவாதிகள் ஜனநாயகப் போராட்டக்காலத்திலும் தமது பணிகளைத் தொய்வின்றித் தொடரவேண்டும்.
போராட்டக் காலத்தில் பேசாமடந்தைகளாக இருந்த பலர் இப்போது தமிழ்த் தேசிய வாதத்தைக் கேள்விக்குள்ளாக்கத் தலைப்பட்டுள்ளனர்.

போருக்குப் பின்னரான இளைய தலைமுறையைத் தமிழ்த் தேசிய உணர்வில் இருந்தும் மடைமாற்றி, பெருந்தேசிய வாதத்துக்குள் கரைக்கும் நிகழ்ச்சி நிரலை தெரிந்தோ தெரியாமலோ சிலர் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், எமது போராட்டத்தின் நியாயங்களை, போரில் பெற்ற வெற்றிகளை, பட்ட வதைகளை இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லுவது வரலாற்றுக் கடமையாகும் என்றும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.