கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தும் வாய்ப்புகளை ஆராய்வதற்காக அமெரிக்க பசிபிக் கடற்படையின் கட்டளைத் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கேலர், இலங்கை துறைமுக அதிகாரசபை அதிகாரிகளுடன் கொழும்பு துறைமுகத்தில் சந்திப்பு மேற்கொண்டார்.
இந்த சந்திப்பின் போது, இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பு, வர்த்தகப் பாதுகாப்பு மற்றும் துறைமுக ஒத்துழைப்பு குறித்து விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
இலங்கை தனது கடற்பரப்பை பாதுகாப்பாக பராமரிப்பதுடன், சர்வதேச தரத்திற்கு ஏற்ப செயல்திறன் மிக்க சரக்கு மாற்று (Transshipment) மையமாகத் தொடர்வது மிக அவசியமானதாக இதன்போது குறிப்பிடப்பட்டது.
குறிப்பாக, உலகின் மிக முக்கியமான கடல்வழித் தடங்களின் சந்திப்பாக விளங்கும் இலங்கையின் புவியியல் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.
பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான துறைமுக செயற்பாடுகள் உறுதி செய்யப்படும் போது, இலங்கையிலும் அமெரிக்காவிலும் வர்த்தகம் சீராக முன்னேறி, வணிக வளர்ச்சி ஏற்பட்டு, வேலைவாய்ப்புகள் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்கா–இலங்கை பங்காண்மை, வெளிப்படைத்தன்மை, நம்பிக்கை மற்றும் பரஸ்பர நன்மை ஆகிய அடிப்படைகளில் கட்டமைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இந்த ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் நோக்கம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டது.
இந்த சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது.



