நம்பகரமான உள்ளக பொறிமுறை ஊடாகவே நடவடிக்கை…

மனித உரிமை மீறல் பிரச்சினைகள் குறித்த, சர்வதேச பொறிமுறையை எதிர்ப்பதாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்திடம், அரசாங்கம் முறைப்படி அறிவித்துள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று தமிழ் அரசு கட்சி உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச பொறிமுறை சமூகங்களிடையே தேவையற்ற பிளவுகளை உருவாக்கும்.

சர்வதேச பொறிமுறைக்கு பதிலாக, மனித உரிமை மீறல் கரிசனைகளை நிவர்த்தி செய்வதற்கான நம்பகமான உள்நாட்டு பொறிமுறையை நிறுவுவதற்கு இலங்கை உறுதிபூண்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் இலங்கை குறித்த விவாதத்தின் போது, ​​ உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ​​அறிக்கை தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்.

சர்வதேச தலையீடு தொடர்பாக ஐ.நா அறிக்கையில் உள்ள முடிவுகள் மற்றும் பரிந்துரைகளுடன் அரசாங்கம் உடன்படவில்லை என்று சிறிலங்கா அரசு மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்திடம் தெரிவித்துள்ளது.

நாங்கள் சர்வதேச அமைப்புகளுடன் ஒத்துழைப்போம், ஆனால் மனித உரிமை மீறல்களைக் கையாள்வதற்கான ஒரு உள்நாட்டில் உருவாக்கப்பட்ட செயல்முறையிலேயே எங்கள் கவனம் இருக்கும்.

சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற அரசாங்கம் தயாராக உள்ளது, ஆனால் நாட்டில் நடந்த மனித உரிமை மீறல்களைக் கையாள ஒரு உள்நாட்டு பொறிமுறையில் கவனம் செலுத்தப்படும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.