
திருகோணமலை நீதிமன்ற வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய எம்.எல்.எம்.எம். முன்சித் என்ற பாடசாலை மாணவன், நேற்று திங்கட்கிழமை (26) காலை முதல் காணாமல் போயுள்ளதாக திருகோணமலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை பகுதியில் பிரபலமான வழக்கறிஞர் ஒருவரின் மகனான குறித்த மாணவர், நேற்றைய தினம் காலை 7.00 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறியிருந்ததுடன், மாலை வரை வீடு திரும்பவில்லை.
காணாமல்போன மாணவர், திருகோணமலையில் அமைந்துள்ள கோணேஷ்வரா இந்து கல்லூரியின் மாணவராவார்.
அன்றைய தினம் நடைபெற்ற பரீட்சையில் அவர் பங்கேற்கவில்லை என்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, பாடசாலை நிர்வாகம் இது தொடர்பாக காவல்துறையில் முறைப்பாடு அளித்துள்ளது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, இந்து கல்லூரி மைதானத்திற்கு வெளியே உள்ள சமுத்திரகம கிராமத்திற்கு முன்னால் அமைந்துள்ள பற்றைக்காட்டுப் பகுதியில், குறித்த மாணவனின் சைக்கிள் மற்றும் புத்தகங்களுடன் கூடிய பை ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மாணவர் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
இதே போல், முல்லைத்தீவு -புதுக்குடியிருப்பில் கடந்த ஞாயிறுக்கிழமை காணாமல் போன இளைஞர் ஒருவர், அவரது வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



