தமிழர்களின் இருப்பை அழிக்கும் திட்டமிட்ட செயற்பாடுகளைக் கண்டித்து யாழில் போராட்டம்

இன்றைய தினம் பௌத்த ஆக்கிரமிப்புக்கு எதிராக சங்கானையில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டமானது இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தப் போராட்டத்தில் குறுந்தூர் மலையில் நீதிமன்ற தடை உத்தரவை மீறி விகாரை அமைத்தமை, நெடுந்தீவு வெடியரசன் கோட்டை பௌத்த இடம் என காட்சிப்பலகை வைத்தமை, கச்சதீவு பகுதியில் புத்த விகாரை அமைத்தமை உள்ளிட்ட தமிழர் பகுதியில் நடைபெறும் அத்தனை பௌத்த ஆக்கிரமிப்புக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீராவியடி பிள்ளையார் எங்கள் சொத்து, அரசியல் கைதிகளை விடுதலை செய், காவிகளின் அட்டகாசத்திற்கு காக்கிகளே துணை, சுயாட்சியே தமிழரின் தீர்வு, கடன் வாங்கி தமிழர் கழுத்தை அறுக்காதே, வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம், தொல்பொருள் திணைக்கமே அரசின் கைக்கூலி, இராணுவமே வெளியேறு, நிலாவரை எங்கள் சொத்து, நெடுந்தீவு எங்கள் சொத்து, கச்சதீவு எங்கள் சொத்து, கன்னியா வெந்நீர் ஊற்று எங்கள் சொத்து, குருந்தூர் மலை எங்கள் சொத்து, வெடுக்குநாறி மலை எங்கள் சொத்து என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு, கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளரும் முன்னை நாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன், வலி. மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன், மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன், இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள், சமூகமட்ட பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.