‘வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான பாதுகாப்பு விடயத்தில் முன்னைய அரசாங்கங்களை போன்றே தற்போதைய அரசாங்கம் செயற்படுகிறது’ என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கான ஒதுக்கம் தொடர்பில் பாராளுமன்றில் இன்று (28) கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
‘கடந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தை விடவும் இந்த முறை பாதுகாப்பு அமைச்சுக்கான ஒதுக்கம் 3 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டு 434 பில்லியன் ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளது’.
‘பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு 175 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’ என்று பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ‘வடக்கில் காவல்துறை இராணுவத்தின் தூண்டுதலுக்கு அமைய செயற்படுகிறது’. ‘அதன் காரணமாகவே இரு தரப்புக்குமான ஒதுக்கம் தொடர்பில் ஒன்றாக ஆராய வேண்டியுள்ளது’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘அரசாங்கம் இராணுவ கட்டமைப்பை மேம்படுத்த முக்கியத்துவம் வழங்கியமை இதில் புலப்படுகிறது’.
‘யுத்தம் இல்லாத காலகட்டத்தில் இவை நடக்கின்றன’. ‘இதனுடாக சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரை மீறப்பட்டுள்ளது’ என்று பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
‘சமூக நலனை விட பாதுகாப்பு துறை முக்கியத்துவமாக கருதப்படுகிறது’. ‘சமூக நலனுக்கு கடந்த ஆண்டை விட 35 பில்லியன் ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது’ ‘இதன் காரணமாக வடமாகாணமே அதிகளவில் பாதிக்கப்படும்’ என்றும் அவர் கூறியுள்ளார். ‘இலங்கையில் 100 பேருக்கு 1.5 இராணுவத்தினர் உள்ளனர்’. ‘முல்லைத்தீவில் இரண்டு போருக்கு ஒரு இராணுவ உத்தியோகத்தர் உள்ளார்’
‘இலங்கையின் எதிரிகள் தமிழர்கள் என உணர வைக்கும் வகையிலேயே இந்த செயற்பாடுகள் உள்ளன’ என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.



