அப்பாவி மக்கள்மீது பழிபோடும் கலாசாரம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியையடுத்து கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிராக  காலிமுகத்திடலில் மாபெரும் மக்கள் போராட்டம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய  நாட்டைவிட்டு வெளியேறி  தற்போது நாட்டிற்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் “அரகலய ” போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அகில மஞ்சுளவிடம் இலக்கு ஊடகம் நடத்திய சிறப்பு செவ்வி….

கேள்வி :-

” அரகலய ” போராட்டத்தின் சமகால நிலைமைகள் எவ்வாறுள்ளன?

பதில் :-

இலங்கையின் வரலாற்றில் திருப்பு முனையை ஏற்படுத்திய பெருமை  “அரகலய” என்ற பெயரிலான எமது போராட்டத்திற்குள்ளது.எமது போராட்டம் இலங்கையின் அரசியலில் ஊழல்வாதிகளை களையெடுத் திருக்கின்றது.

ராஜபக்ஷ குடும்பத்தினரின் ஆட்சியில் நாட்டு மக்கள் பல்வேறு துன்ப துயரங்களையும் அனுபவித்து விட்டனர்.சர்வதேசம் இலங்கையை எள்ளி நகையாடும் அளவிற்கு நிலைமைகள் போய்க் கொண்டிருக்கின்றன. “பொன் விளையும் பூமி” என்று பெயரெடுத்து எமது நாடு ஊழல்வாதிகளின் ஆட்சியின் காரணமாக இப்போது நெருக்கீடுகள் பலவற்றுக்கும் முகம் கொடுத்து வருகின்றது.

இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில் சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணித்தாய்மார்கள் போஷாக்கின்மை காரணமாக உடல் உளரீதியான நோய்கள் பலவற்றுக்கும ஆளாகி வருகின்றனர்.ஆட்சியாளர்களின் பிழையான முன்னெடுப்பு காரணமாக நாடு சகல துறைகளிலும் வங்குரோத்து அடைந்துள்ள நிலையில் இப்போது அதன் விளைவுகளை நாட்டு மக்கள் சந்தித்து வருகின்றனர்.இதேவேளை ஊழல்வாதிகளான ஆட்சியாளர்களின் ஊழல்களை மூடிமறைத்து அப்பாவி மக்கள் மீது பழிபோடும் ஒரு கலாசாரம் இப்போது மேலெழுந்து வருகின்றது.இது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.

நாட்டு மக்களின் நலன் கருதியும், தூய்மையான அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்பும் நோக்கிலும் நாம் காலிமுகத்திடலில் எமது போராட்டத்தை ஆரம்பித்தோம்.எமது போராட்டம் இலங்கையின் வரலாற்றில் மட்டுமன்றி உலக வரலாற்றிலும் இடம் பிடித்துவிட்டதை எண்ணி மகிழ்ச்சி அடைகின்றோம்.

ராஜபக்ஷாக்களை பாதுகாக்கும் நோக்கில் இப்போது ரணில் விக்கிரமசிங்க நாட்டின் ஜனாதிபதியாகி இருக்கின்றார்.இவர் பதவிக்கு வந்தது முதல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தேடித்தேடி கைது செய்யும் ந டவடிக்கையை முடுக்கி விட்டிருக்கின்றார். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட எமது சகோதரர்கள் சிறைச்சாலையில் வாடும் நிலைமை மேலோங்கி இருக்கின்றது.

பயரங்கரவாத தடைச்சட்டம் கைது செய்தவர்களை மூன்று மாதத்திற்கு தடுத்து வைப்பதற்கு உந்துசக்தியாகி இருக்கின்றது. இது ஒரு அநீதியான செயலாகும் என்பதனை மறுப்பதற்கில்லை.இந்நிலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் அரசியலமைப்பு உரிமைகள் பறிக்கப்படக் கூடாதென்று பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையின் சமகால நிலைமைகள் குறித்து இச்சங்கம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றது.சட்டத்தின் ஆட்சியுடன் தொடர்புடைய பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ளன. இவ்வாறானதொரு சூழ்நிலையில் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கும் நாட்டின் அரசியலமைப்பின் கீழ் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் இது குறித்தும் கவனம் செலுத்தி வருகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எமது போராட்டத்தை ஒடுக்க நினைத்தபோதும் நாம் ஒரு போதும் வளைந்து கொடுக்கப் போவதில்லை.எமது உரிமைக் கோஷங்களை யாராலும் மழுங்கடிக்க முடியாது.அவ்வாறு யாரும் நினைப்பார்களானால் அது அவர்களின் அறியாமையின் வெளிப்பாடே தவிர வேறொன்றுமில்லை என்றே சொல்லத் தோன்றுகின்றது.

ஜனாதிபதி எமது போராட்டத்தை ஒடுக்குவதை விடுத்து ஏன் இளைஞர்கள் போராட்டக் களத்தில் குதித்தார்கள்? இந்தப் போராட்டத்தின் நியாயத்தன்மை என்ன? இதன் சாதக விளைவுகள் எவை? என்பதனை பூரணமாக ஆராய்ந்து பார்ப்பது அவசியமாகும். இதை விடுத்து எங்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை மேற்கொள்வதையோ அல்லது எமது சகோதர இளைஞர்களின் உணர்வுகளுக்கு முட்டுக்கட்டை இடுவதையோ அல்லது எமது ஒற்றுமையை சீர்குலைக்க முற்படுவதையோ நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

எது எவ்வாறாயினும் நாம் இன்னும் எமது போராட்ட உணர்வை  கைவிடவில்லை. எமது இளைஞர்கள் முன்னிலும் அதிக ஈடுபாட்டுடன் போராடுவதற்கு தயாராக உள்ளார்கள். நாம் எதற்கும் எப்போதும் சளைத்தவர்களல்ல என்பதை முழு உலகமும் நன்கறியும்.எமது போராட்டம் தேவையான போது முன்னெடுக்கப்படும்.இதில் எவ்விதமான சந்தேகமும் கிடையாது.

கேள்வி :- முன்னாள்  ஜனாதிபதி கோட்டாபயவின் மீள் பிரவேசம் தொடர்பில் என்ன நினைக்கின்றீர்கள்?

பதில் :-

நாட்டின் சமகால நிலைமைக்கு முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவே பொறுப்பு கூற வேண்டியவராக இருக்கின்றார்.தூரநோக்கற்ற தீர்மானங்கள், ஏனையோரின் கருத்துக்களை உரியவாறு செவிமடுக்காமை, தன்னிச்சையான முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் என்பவற்றின் காரணமாக நாடு இன்று இக்கட்டான நிலைமையினை எதிர்கொண்டுள்ளது.

சகல துறைகளும் முடக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு வேளை சோற்றுக்கே மக்கள் அல்லாடும் நிலை மேலெழுந்து வருகின்றது.அத்தியாவசியப் பொருட்களின் விலைகள்‌ கணிசமாக அதிகரித்துவரும் நிலையில் மக்கள் வருமான மார்க்கமின்றி திண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் உதவியினை இலங்கை எதிர்பார்த்திருக்கும் நிலையில் வரிவிதிப்புக்கு மத்தியில் மேலும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகின்றது.இது ” தாழியில் வெந்தவனை அடுப்பில் தூக்கிப்போடுவதற்கு ” சமமான ஒரு செயற்பாடாகும் என்பதே உண்மையாகும்.

கோட்டாபய ராஜபக்ச மக்களால் துரத்தப்பட்டவர். மக்கள் ராஜபக்ஷாக்களின் ஆட்சியில் முற்றாகக் கொண்ட வெறுப்பு கோத்தபாய நாட்டை விட்டு வெளியேறுவதற்கு உந்துசக்தியாகி இருந்தது. ராஜபக்ஷாக்களின் ஆட்சியில்   பசி பட்டினியோடு கண்ணீரும் கம்பலையுமாக வாழ்வதற்கு நாட்டு மக்கள் விரும்பவில்லை.

இதன் எதிரொலியே மக்கள் கிளர்ந்தெழுவதற்கு அடிப்படையானது.இந்நிலையில் கோட்டாபய ராஜபக்ச இலங்கையில் இருந்து சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்துக்கு சென்றபின் தற்போது மீண்டும் இலங்கை திரும்பி இருக்கின்றார்.

கோட்டாபய நாடு திரும்புவதற்கு இது பொருத்தமான தருணம் அல்ல என்று தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அணாமையில் ஒரு சந்தர்ப்பத்தில் தெரிவித்திருந்தார்.எனினும் இதற்கும் மத்தியில் கோட்டாபய நாட்டை இப்போது வந்தடைத்திருக்கின்றார்.இதனிடையே கோத்தபாய மீண்டும் அரசியலுக்கு வருவாரா? அல்லது வரமாட்டாரா? என்ற கேள்விகள் மக்களிடையே இருந்து வருவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.கோட்டாபய பாராளுமன்றத்தில் பிரவேசித்து பிரதமர் பதவியை ஏற்கவிருப்பதாகவும் கூட சிலர் பேசிக் கொண்டனர்.எனினும் அரசியலில் அவரது ஆதிக்கம் இனி எந்தளவுக்கு சாத்தியமாகும்? கோட்டாபயவின் அரசியல் பிரவேசத்தினை எந்தளவுக்கு மக்கள் அங்கீகரித்து ஆதரவு செலுத்துவார்கள் என்றெல்லாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

இதேவேளை நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளி 55 இலட்சம் மக்களை உணவுக்காக போராட வைத்துள்ள அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்திய ராஜபக்ஷாக்களை நாட்டு மக்கள் புறக்கணித்தார்கள்.ஆனால் தற்போது ராஜபக்ஷாக்களை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வரும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்று இலங்கையின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவும் குற்றம் சுமத்தி இருக்கின்றார்.இத்தகைய கருத்து வெளிப்பாடுகளுக்கு மத்தியில் கோட்டாபயவோ அல்லது ஏனைய ராஜபக்ஷாக்களோ மீண்டும் ஆட்சிபீடமேறுவதை போராட்டக்காரர்களோ அல்லது நாட்டு மக்களோ விரும்பவில்லை.நாடு மீண்டும் இக்கட்டான ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்படுவதை யாரும் விரும்பமாட்டார்கள் அல்லவா!

இது இவ்வாறிருக்க கோத்தபாய அரசியலில் ஈடுபடுவாரா? இல்லையா? என்ற கேள்விகளுக்கும் மத்தியில் அவருக்கு மீண்டும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் காணப்படவில்லை என்றும் தனது எதிர்கால அரசியல் தொடர்பில் எந்தவொரு கருத்தையும் அவர் வெளிப்படுத்தவில்லை என்றும் செய்திகள் வலியுறுத்துகின்றன.

கேள்வி :-

முன்னாள் ஜனாதிபதிக்குரிய உரிமைகளை அனுபவிக்க கோட்டாவுக்குஉரிமை கிடையாது என்று பிரதான எதிர்க்கட்சி தெரிவித்துள்ளதே! இதுபற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்…

 பதில் :-

உண்மைதான்.நாட்டின் சட்டத்துக்கமைய முன்னாள் ஜனாதிபதிக்கு சிறப்புரிமைகள் மற்றும் சலுகைகளை அரசாங்கம் வழங்கினாலும் அவற்றை அனுபவிக்கக் கூடிய தார்மீக உரிமை முன்னாள் ஜனாதிபதி  கோத்தபாய ராஜபக்ஷவுக்கு கிடையாது.நாட்டின் பொருளாதாரத்தை பாரதூரமாக வீழ்ச்சியடையச் செய்துள்ள அவருக்கு மக்களின் வரிப்பணத்தில் எந்தவிதமான சுகபோக வசதிகளும் செய்து கொடுக்கப்படக்கூடாது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்திருக்கின்றது. இதில் மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லை என்றே கருதுகின்றேன்.

நாடு பொருளாதார ரீதியில் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில் அனைத்து செலவீனங்களும் குறைக்கப்பட வேண்டிய தேவை காணப்படுகின்றது. இதனடிப்படையில் அரச அலுவலகங்களிலும் செலவுகளை கணிசமாக குறைக்கப்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.அத்தோடு அரசியல்வாதிகள், வெளிநாடுகளுக்கான இலங்கையின் தூதுவர்கள் உள்ளிட்ட பலருக்கான செலவுகளையும்  உடனடியாக குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எதிர்கட்சிகள் வேண்டுகோள் விடுத்து வருவதனை அவதானிகக முடிகின்றது.இதேவேளை அரச ஊழியர்களின் எண்ணிக்கையை  குறைப்பது தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் புதிதாக அரச நியமனங்கள் வழங்குவதை பிற்போடுதல் போன்றன குறித்தும் ஆராயப்பட்டு வருகின்றது.நிலைமைகள் இவ்வாறு இருக்கும்போது முன்னாள் ஜனாதிபதிக்கான செலவுகள் மட்டுமல்லாது அனைவருக்கான ஆடம்பர செலவுகளும் குறைக்கப்படுதல் வேண்டும் என்பதோடு இது குறித்து அனைவரதும் ஒத்துழைப்பும் அவசியமாகின்றது என்பதனை நினைவுபடுத்த விரும்புகின்றேன் என்றார்.