அரசியல் தீர்வுக்கு இசைவான புறச்சூழலும் இரு தரப்பு அரசியல் தீர்மானமும் அவசியம்-  பி.மாணிக்கவாசகம் 

206 Views

ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அழைப்பை விடுத்துள்ளார்.

அதிகாரப் பகிர்வின் மூலம் அரசியல் தீர்வு காணப்படும் என்பது அவருடைய நிலைப்பாடாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அந்த வகையில் அதிகாரப் பகிர்வு குறித்து பேச்சுக்களை நடத்த அவர் முன்வந்திருக்கின்றார். இந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளுமாறு அவர் நாடாளுமன்றத்தில் அழைப்பு விடுத்திருக்கின்றார். இந்த அழைப்பை அநேகமாக அனைவரும் ஏற்றுக்கொண்டிருப்பதாகவே ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பேச்சுவார்த்தைகள் பேரின அரசியல் கட்சிகளையும்விட தமிழ் அரசியல், முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கு மிக முக்கியமானது. இந்தப் பேச்சுக்களில் அவர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இது நாட்டின் இன்றைய அரசியல் நிலைமையில் மிக மிக அவசியமானது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பில் நடைபெறவுள்ள சந்திப்பில் கலந்து கொள்வதற்கு முன்னர் அங்கு முன்னெடுக்கப்படவுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு இவர்கள் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டியதும் மிக முக்கியம். தயார்ப்படுத்தலின்றி பேச்சுக்களில் கலந்து கொள்வதில் எந்தவிதப் பயனுமில்லை.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காகக் கடந்த காலங்களில் பல பேச்சுவார்தைகள் நடைபெற்றிருக்கின்றன. அந்தப் பேச்சுக்களில் சில பல சுற்றுப் பேச்சுக்களாகவும் நடைபெற்றிருக்கின்றன. அவற்றில் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டு முடிவுகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அதேபோன்று சில பேச்சுவார்த்தைகள் இடை நடுவில் முறிந்து போன சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன.

ஏனைய பேச்சுவார்தைகள் ஓரளவிலேயே நடைபெற்றிருக்கின்றன. எந்தவொரு பேச்சுவார்தையும் முழுமையாக நடைபெற்று பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காணும் கட்டத்தை எட்டவே இல்லை. ஆயினும் பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு எட்டப்பட்ட விடயங்கள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. பேச்சுக்களில் மாத்திரமே இணக்கப்பாடு எட்டப்பட்டது. அந்த இணக்கப்பாட்டை எந்தவோர் அரசாங்கமும் நடைமுறைப்படுத்தி நாட்டில் உண்மையான இணக்கத்தையும் சமாதானத்தையும் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தையும் ஏற்படுத்தவில்லை.

அந்த முக்கியமான அரசியல் பணியில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் தமது பொறுபு;புக்களைச் சரிவர நிறைவேற்றவே இல்லை. இதனால் நேர விரயம் செய்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் வீணாகிப் போயின. அதேவேளை, சிறுபான்மை தேசிய இன மக்களாகிய தமிழ் மக்கள் இந்தப் பேச்சுவார்த்தைகளின் மூலம் ஏமாற்றத்தையும் தோல்வியையுமே சந்தித்தனர். பல்வேறு நிலைமைகளில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தைகளில் அரச தரப்பினர் உளப்பூர்வமாகவும் அரசியல் நேர்மையுடனும் கலந்து கொள்ளவில்லை. தேச நலனைக் கருத்திற்கொண்டு அவர்கள் இந்தப் பேச்சுக்களை முன்னின்று நடத்தவில்லை. தேச நலன்கருதி அந்தப் பேச்சுக்களில் கலந்து கொள்ளவுமில்லை. இதனால் அரசியல் நாடகங்களாக – பொழுது போக்குவதற்காக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளாகவே அந்தப் பேச்சுவார்த்தைகள் கடந்து போயிருக்கின்றன.

டிசம்பர் மாத நடுப்பகுதியில் நடத்தப்படுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய பேச்சுவார்தைகளுக்கு அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலில் பழுத்த அனுபவம் வாய்ந்தவர். நாட்டின் இரு பிரதான தேசிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகிய ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராகப் பல வருடங்கள் செயற்பட்டு வருபவர். கட்சியின் தலைவராக அவர் அந்தக் கட்சியைத் தனது தலைமையின் கீழ் எந்த அளவுக்குக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கின்றார். அதனை எந்த அளவுக்கு முன்னேற்றியிருக்கின்றார் என்பது கடும் விமர்சனத்துக்கு உரியது.

ஆனால் பொருளாதார நெருக்கடியினால் நாடு பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாகியுள்ள மிக முக்கியமான கால கட்டத்தில் அவர் நாட்டின் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றிருக்கின்றார். செயற்பட்டு வருகின்றார். அந்த வகையில் அவர் தனது முதிர்ந்த அரசியல் அனுபவத்தின் ஊடாக அர்த்தமுள்ள வகையில் செயற்பட வேண்டியவராக இருக்கின்றார். ஆனால் அரசியல் தீர்வுக்கான அவரது அழைப்பு எந்த அளவுக்கு உளப்பூர்வமானது, எந்த அளவுக்கு நடைமுறைச் சாத்தியமானது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

அரசியல் தீர்வுக்கான பேச்சுக்களுக்காக தமிழ்த்தரப்பினர் தமது அரசியல் நிலைப்பாட்டில் இருந்து பல தடவைகள் இறங்கி வந்துள்ளனர். பேச்சுக்கள் பலனளிக்குமா இல்லையா என்பது குறித்து திட்டவட்டமாகத் தீர்மானிக்க முடியாத நிலையிலேயே அவர்கள் பல்வேறு பேச்சுக்களிலும் பங்கேற்றிருந்தனர். ஏனெனில் பேச்சுக்களில் எட்டப்படுகின்ற இணக்கப்பாட்டிற்கு அமைவாக அந்த விடயங்களை அரசுகள் எப்போதும் நிறைவேற்றியதில்லை. ஆகவே பேச்சுவார்த்தைகளில் எட்டப்படுகின்ற முடிவுகளும், மேற்கொள்ளப்படுகின்ற தீர்மானங்களும் நடைமுறைப்படுத்தப்படுமா என்ற சந்தேகம் தமிழ் அரசியல் தலைவர்களுக்கு மட்டுமல்ல. தமிழ் மக்களுக்கும் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

இத்தகைய சந்தேகமான அரசியல் நிலைமைகளில் பேச்சுக்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகின்றபோது, பேச்சுவார்த்தைகள் இதயசுத்தியுடன் நடத்தப்படும் என்பதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம். எனவே பேச்சுவார்த்தைகளுக்கான நம்பிக்கைக்குரிய சூழல் முதலில் உருவாக்கப்பட வேண்டும். பேச்சுவார்த்தைகளில் இயல்பாகவும் ஆர்வத்துடனும் பங்கேற்பதற்கு அரசு நம்பிக்கையூட்ட வேண்டியது முக்கியம். அதற்காக எரியும் பிரச்சினைகளாகத் தொடர்கின்ற பிரச்சினைகளைத் தீர்த்து, பேச்சுவார்த்தைகளுக்கு அவசியமான இயல்பான சூழலை உருவாக்க வேண்டும். பேச்சுக்களுக்குரிய நல்லெண்ண சமிக்ஞையை வெளிப்படுத்துபவையாகவும் அந்த நடவடிக்கைகள் அமைய வேண்டியது அவசியம்.

இத்தகைய நல்லெண்ண வெளிப்பாட்டின் மூலம் மாத்திரமே பேச்சுவார்த்தைகளில் தமிழ்த்தரப்பினர் நம்பிக்கையுடனும் அர்த்தமுள்ள வகையிலும் ஈடுபட முடியும். நல்லெண்ண வெளிப்பாடற்ற பேச்சுவார்த்தை முயற்சிகள் வெறுமனே சுய அரசியல் இலாப நோக்கத்தைக் கொண்டவையாகவே அமைந்துவிடும். இதற்கு இதுகால வரையில் நடைபெற்ற அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளும், பேச்சுவார்த்தைகளின் போக்கும் முன்னுதாரணங்களாக அமைந்திருக்கின்றன.

முன்னைய பேச்சுவார்த்தைகளின்போது நிலவிய அரசியல் சூழல்களைப் போன்ற சூழல் இப்போது நிலவவில்லை. இரு தரப்பினருமே – அரச தரப்பினரும்சரி தமிழ்த்தரப்பினரும்சரி இப்போது அரசியல் ரீதியாகப் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்திருக்கின்றனர். அரசாங்கம் பொருளாதார, அரசியல் சூழல்களில் நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கின்றது. ஆட்சியாளர்கள் மற்றும் பேரினவாதிகளின் இனத்துவேச அரசியல் போக்கினால் தமிழ்த்தரப்பு பொருளாதார ரீதியாகவும், அரசியல் நிலைப்பாட்டிலும், வாழ்வியல் நிலைப்பாட்டிலும்கூட மிக மோசமான இடை ஊறுகளை எதிர்கொண்டிருக்கின்றனர்.

விடுதலைப்புலிகளுடனான போர்நிறுத்தத்தின்போது முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளின்போது யுத்த களத்திலும் அரசியல் களத்திலும் பேச்சுவார்த்தைக்கு நம்பிக்கையையும் வலிமையையும் ஊட்டும் வகையில் பேச்சுக்களுக்கு இசைவான சூழல் ஒன்று பேணப்பட்டது. ஆனாலும் அத்தகைய சூழலில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுக்களும்கூட பலனளிக்கத் தக்க வகையில் வெற்றிபெறத் தவறியிருந்தன. இந்த நிலையில் பேச்சுக்களுக்கும் அரசியல் தீர்வுக்கும் நம்பிக்கை அளிக்கத்தக்க வகையிலான புறச்ஷழல் ஒன்று பேணப்படாத நிலையில், உத்தேசிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் முன்னேற்றகரமாக முன்னெடுக்கப்படும் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் கிடையாது.

அதிகாரப் பகிர்வின் மூலம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண அனைவருக்கும் சம்மதமா என நாடாளுமன்றத்தில் கேட்டு, அங்கு அளிக்கப்பட்ட ஒப்புதலை ஆதாரமாகக் கொண்டு ஆரம்பிக்கப்படுகின்ற பேச்சுக்களில் எந்தவிதத்தில் நம்பிக்கை கொள்வது என்பது தெரியவில்லை. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான அதிகாரப்பகிர்வை மேற்கொள்வதில் பேரின அரசியல் கட்சிகள் எல்லாமே தயாராக இருக்கின்றன என்று கூற முடியாது. ஏனெனில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு இனவாதத்தைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கின்ற பேரின கட்சிகள் எப்போதுமே எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருந்தன. அந்த அரசியல் நிலைப்பாட்டில் இன்னும் மாற்றம் ஏற்படவில்லை. இந்த நிலையில் வெறுமனே நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட உடனடி வாய்மொழி மூலமான இணக்கப்பாடு அரசியல் தீர்வு முயற்சிக்கு உரம் சேர்க்கும் என்று கூற முடியாது.

அதேவேளை, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் விடயத்தில் பேரின அரசியல் கட்சிகளைவிட முக்கியமாக பௌத்த மத பீடங்களின் இணக்கப்பாடு முக்கியம். பயனுள்ள வகையில் அரசியல் தீர்வுக்கான முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டுமானால் பௌத்த மத பீடங்களின் இணக்கப்பாடும், அவர்களின் ஒட்டுமொத்த ஒப்புதலும் முதலில் அவசியம். ஏனெனில் தேசிய அளவில் முன்னெடுக்கப்படுகின்ற முயற்சிகளில் பௌத்த மத பீடத் தலைவர்களே அரசியல் கட்சிகளிலும்பார்க்க அதிக செல்வாக்குடையவர்களாகத் திகழ்கின்றனர். அரசியல் தலைவர்கள் எடுக்கின்ற தீர்மானங்களை செயலற்றதாக்கும் வல்லமை அரவ்களிடமே காணப்படுகின்றது. குறிப்பாக இனப்பிரச்சினை விவகாரத்தில் இறுதி முடிவெடுக்கத்தக்க வல்லமை நிறைவேற்றதிகாரத்தைக் கொண்டுள்ள அரசியல் தலைவராகிய ஜனாதிபதியிலும் பார்க்க பௌத்த மத பீடத் தலைவர்களிடமே மையம் கொண்டிருக்கின்றது.

எனவே, பௌத்த மத பீடத்தினரின் ஒப்புதல் இன்றி வெறும் வாய்ப்பேச்சளவிலான பேரின அரசியல் தலைவர்களின் ஒப்புதலை ஆதாரமாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற பேச்சுக்கள் ஆக்கபூர்வமான நடவடிக்கையாக அமையும் என்று கூற முடியாது. முதலில் பேரின அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல்வாதிகளின் உறுதியான இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும். அதேபோன்று அரசியல் தீர்வுக்கு பௌத்த மத பீடத் தலைவர்களின் ஒப்புதல் அல்லது இணக்கப்பாடும் உறுதியாகப் பெறப்பட வேண்டும். அத்தகைய ஒப்புதலின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்ற பேச்சுக்களே ஆக்கபூர்வமாக அமையும்.

அதேபோன்று பேச்சுவார்ததைகளில் கலந்து கொளவதற்கு முன்னர் தமிழ்த்தரப்பின் அரசியல் கட்சிகளும் எத்தகைய அரசியல் தீர்வுக்குச் செல்வது என்பது குறித்துத் தங்களுக்குள் பேசி ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டியதும் அவசியம். ஏற்கனவே தீவுகளாகத் திகழ்கின்ற தமிழ்க்கட்சிகள் பேச்சுக்களில் கலந்து கொள்ளும்போது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் குறித்து ஒரு குரலில் பேசுவார்கள். அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்த இணக்கப்பாட்டுடன் பேச்சுக்களில் ஆக்கபூர்வமாக நடந்து கொள்வார்கள் என்று கூற முடியாது. ஆகவே தமிழ்த்தரப்பு அரசியல் கட்சித் தலைவர்களும் ஒன்றுகூடி தங்களுக்குள் எத்தகைய அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் தீர்க்கமான ஒரு முடிவை எட்டி,  பேச்சுக்களில் ஒரு குரலில் பேசுவதற்குத் தயாராக வேண்டியதும் முக்கியம்.

எனவே, பேச்சுவார்த்தைகளுக்கு இயல்பான புறச்சூழல் உருவாக்கப்பட வேண்டும். பேச்சுக்களில் எத்தகைய அரசியல்; தீர்வுக்குச் செல்வது என்பது குறித்து இது தரப்பினரும் முதலில் தங்களுக்குள் ஒரு முடிவுக்கு வரவேண்டும். அத்தகைய முறையில் மேற்கொள்ளப்படுகின்றற பேச்சுக்களே ஆக்கபூர்வமானதாக அமையும். இல்லையேல் பேச்சுவார்த்தை முயற்சி என்பது ஓர் அரசியல் நாடகமாகவே நடந்தேறும் என்பதில் சந்தேகமில்லை.

Leave a Reply