இலங்கையில் மீண்டும் அவசர காலநிலை அமுல்!

அவசரகால நிலையை மேலும் நீடிக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது. நாட்டில் நிலவும் தற்போதைய அசாதாரண சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, அவசரகால நிலையை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் (02) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதுகுறித்து விளக்கியிருந்தார்.
டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகளைத் தொடர்ந்து பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலை, கடந்த பெப்ரவரி 28ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.

அதன் பின்னர் அது நீடிக்கப்படாததால், அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் அதிகாரங்களும் செயலிழந்திருந்தன. இந்தநிலையில் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் மற்றும் உள்நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் வரிசைகள் போன்ற சூழல்களைக் கருத்திற்கொண்டு, அவசரகால நிலையை மீண்டும் நீடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.