இலங்கை வரும் சீன கப்பலால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல்?

68 Views

யுவான் வாங் 5 என்ற சீனாவின் கண்காணிப்பு கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கான வருகை,  இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்ததோடு தென் இந்திய அரசியல்வாதிகளும்  எச்சரிக்கை செய்கின்றனர்.

குறித்த கப்பல் இலங்கைக்கு வரப்போவதில்லை என இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு பல சந்தர்ப்பங்களில் மறுத்த போதிலும், தற்போது கப்பல் வந்ததை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த கப்பல் ஓகஸ்ட் 11 மற்றும் 17ம் திகதிக்கு இடையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டு, வசதிகளை பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேர்ணல் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் உள்ளிட்ட சேவைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே, இந்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகைத் தரவுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

”இது முதல் முறையாக வருகைத் தருகின்ற கப்பல் கிடையாது. சீனா, இந்தியா, தென் கொரியா, ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து இதற்கு முன்னர் இவ்வாறான கப்பல்கள் வருகைத் தந்துள்ளன. வணிக கப்பலை போன்று, கடற்படைக்கு சொந்தமான கப்பல்களும் வருகைத் தருகின்றன” என அவர் குறிப்பிடுகின்றார்.

யுவான் வாங் 5 (IMO: 9413054) என்ற கப்பலானது, 2007ம் ஆண்டு (15 வருடங்களுக்கு முன்பு) சீனாவின் தேசிய கொடியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆய்வு மற்றும் கண்காணப்பு கப்பலாகும்.

இந்த கப்பலில் 11000 மெற்றிக் தொன் எடையுடைய பொருட்களை கொண்டு செல்ல முடியும் என்பதுடன், கப்பல் 222 மீட்டர் நீளமும், 25.2 மீட்டர் அகலமும் கொண்டமைக்கப்பட்டுள்ளது.

சீனாவின் விண்கல கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5, நாட்டின் Long March-5B ரொக்கெட்டை ஏவுவதற்கான கடல் சார் கண்காணிப்பு மற்றும் அளவீட்டு பணிக்கு பயன்படுத்தப்படுகின்றது.

2000ம் ஆண்டு ஆரம்ப காலத்தில் இருந்து, சர்வதேச விண்வெளி நிலையததில் உறுப்பு நாடாக சீனா ஆர்வம் காட்டியது. எனினும், சீனாவின் உறுப்புரிமைக்கான கோரிக்கை பல முறை நிராகரிக்கப்பட்டது. இந்த பின்னணியிலேயே, யுவான் வாங் 5 போன்ற அறிவியல் ஆராய்ச்சி கப்பல் சீனாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.

இந்நிலையில்,விண்வெளி மற்றும் செயற்கை கோள் கண்காணிப்பு தொழில்நுட்பத்தை கொண்டமைக்கப்பட்டுள்ள யுவான் வாங் 5 ஆய்வு மற்றும் கண்காணப்பு கப்பலானது, சீனாவின் உளவு கப்பலாவே இந்திய ஊடகங்கள் அடையாளப்படுத்துகின்றன.

இந்த கப்பலின் வான் வழி 750 கிலோமீற்றருக்கு அதிகமாக உள்ளமையினால், தென்னிந்தியாவின் கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் போன்ற இந்திய எல்லைக்குள் காணப்படுகின்ற அணு ஆராய்ச்சி மையங்களை மறைமுகமாக இந்த கப்பலினால் கண்காணிக்க முடியும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் சீனாவின் சியாங் துறைமுகத்திலிருந்து கடந்த 13 ஆம் திகதி பயணத்தை ஆரம்பித்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தந்து, தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொண்டதன் பின்னர் இந்திய பெருங்கடலில் ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply