கூட்டமைப்புடனான சந்திப்பின்போது மைத்திரி அநாகரிகமாக நடந்து கொண்டார் – சாந்தி

தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அநாகரிகமாக நடந்துகொண்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் காணி விடுவிப்பு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினருக்கும் இடையில் நடைபெற சந்திப்பின் போதே இவ்வாறு இடம்பெற்றதாக அவர்
கூறினார்.

இந்த சந்திப்பு தொடர்பாக முல்லைத்தீவில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் பேசிய சாந்தி சிறிஸ்கந்தராஜா;

“காணி விடுவிப்பு தொடர்பாக கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி அழைத்ததற்கமைய பெரும் எதிர்பார்ப்புடன் அவரை சந்திக்க சென்றோம்.

எனினும் அவர் எங்களை ஏமாற்றிவிட்டதோடு, அநாகரிகமான முறையிலும் நடந்துகொண்டார். அவர் எங்களிடம் கையகப்படுத்தியுள்ள காணிகளின் விபரங்களை தருமாறு கோரினார்.

நாங்கள் எத்தனை தடவைகள் இந்த விடயங்களை அவருக்கு எழுத்துமூலம் வழங்கியுள்ளோம். இன்னும் ஒரு அரச தலைவருக்கு இந்த விடயங்கள் தெரியவில்லையென்பது எங்களை ஏமாற்றும் செயற்பாடே ஆகும்” என தெரிவித்தார்.