சட்ட வைத்திய அதிகாரி சிவரூபன் தொடர்பான விசாரணை; சிறி.காவல்துறை தலைமையகம் விளக்கம்

பளை வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபன் தொடர்பான விசாரணை தொடர்பில் பொலிஸ் தலைமையகம் நேற்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இராணுவ அதிகாரிகளினால் கடந்த 18 ஆம் திகதி பளை அரச வைத்தியசாலை வைத்தியராக பணியாற்றிய சின்னையா சிவரூபன் என்பவர் பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு அன்றைய தினமே யாழ்ப்பாணம் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவில் ஒப்படைக்கப்பட்டார்.

இந்த சந்தேக நபர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வெளியான தகவல்களின் அடிப்படையில் கீழ்கண்ட பெயரைக்கொண்ட சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் விசாரணைப்பிரிவினால் கைது செய்யப்பட்டனர்.

1. சின்னமணி தனேஸ்வரன்
2. இரத்தினம் கிருஷ்ணராஜா
3. மோகனசுந்தரம் சின்னத்துரை
4. விநாயகமூர்த்தி நெஜிலன்

இந்த சந்தேக நபர்கள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்வதற்காக கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவின் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு ஒன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளது. இந்த முக்கிய சந்தேக நபரான சின்னையா சிவரூபனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட போது வெளியான தகவல்களின் அடிப்படையில் ஆயுதம் வெடிபொருட்கள், கைக்குண்டுகள் சில கைப்பற்றப்பட்டுள்ளன. இதேபோன்று மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கடந்த 28 ஆம் திகதி கீழ் கண்ட 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

01. ரீ.நிமலராஜ்
02. ரூபன் யதுஷன்

மேற்குறிப்பிட்ட சம்பவத்தை அடிப்படையாக கொண்டு 29 ஆம் திகதி அன்றும் (2019.08.29) மற்றும் கடந்த சில தினங்களாக ஊடகங்களினூடாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ  ஆகியோரை கொலை செய்வதற்கு திட்டம் இடப்பட்டமை தொடர்பில் பயங்கரவாக தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவிற்கு மேற்குறிப்பிட்ட சந்தேக நபர்கள் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியிருந்ததாக செய்தி வெளியாகி இருந்தது.

இந்த செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும். இவ்வாறான கூற்று அல்லது ஒப்புதல் வாக்கு மூலம் ஒன்று இது வரையில் சின்னைய சிவரூபன் உள்ளிட்ட 7 சந்தேக நபர்களினால் பொலிஸாருக்கோ அல்லது ஏனை அதிகாரிகளுக்கோ வழங்கப்படவில்லை எனபதை இதன்மூலம் தெரிவித்துக்கொள்கின்றோம் என்று அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருதாக ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ள பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகரும், சட்டத்தரணியுமான ருவான் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.