வைத்திய கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கத்தை சந்தித்த கனேடிய தூதுவர்

இலங்கை்கான கனேடிய தூதுவர் டேவிட் மெக்மிலன் மற்றும் தூதுவராலயத்தின் அரசியல் விவகாரங்களுக்கான முதன்மைச் செயலாளர் வலேரி ஒலேற் ஆகியோருடன் ஒட்டவாவிலிருந்து வருகை தந்துள்ள சமாதானத்திற்கான நீண்டகால செயற்பாடுகளுக்கான பணியகத்தின் அதிகாரிகள் நேற்று (27.08) வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கத்தை வவுனியாவில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இச்சந்திப்பின் போது போருக்குப் பின்னர் வன்னிப் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மீள் குடியேற்றம், காணி ஆக்கிரமிப்பு மற்றும் திட்டமிடப்பட்ட குடியேற்றச் செயற்பாடுகள், அண்மையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னரான நிலைமைகள் கனடா மற்றும் புலம்பெயர் தமிழர்களால் தாயக பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் என்பன தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. வடக்கு மாகாண சுகாதார சேவைகள் மேம்பாடு தொடர்பாகவும் குறிப்பாக கனடா நாட்டினால் மேற்கொள்ளப்படக்கூடிய அனுசரணை தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

அண்மையில் நெதர்லாந்து நாட்டு நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட சுகாதாரத் திட்டங்கள் தொடர்பாகவும், மாங்குளத்தில் அமைக்கப்படும் விசேட தேவைக்குட்பட்டவர்களிற்கான மருத்துவப் புனர்வாழ்வு மற்றும் உளநல பிரிவுகளில் பணிக்கமர்த்தப்பட இருக்கின்ற ஊழியர்களிற்கான விசேட பயிற்சிகளில் கனடா நாட்டினால் நல்கக்கூடிய அனுசரணை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.