காஷ்மீர் விவகாரத்தில் ஆதரவு தருவதாக சொல்லவில்லை – சிறிலங்கா ஜனாதிபதி

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தர சிறிலங்கா அரசு சம்மதித்து விட்டதாக, சிறிலங்காவிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையை சிறிலங்கா அதிபர் மறுத்துள்ளார்.

அண்மையில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370ஐ இரத்துச் செய்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவிற்க தி.மு.க காங்கிரஸ் உட்பட சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க, இதர கட்சிகள் அனைத்தும் வரவேற்பு தெரிவித்ததோடு, அது தொடர்பான மசோதாவிற்கு மக்களவை மற்றும் மாநிலங்களவை யில் ஆதரவும் தெரிவித்திருந்தன. இதனால் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு, அமுல்ப்படுத்தப்பட்டது.

இம்மசோதா அமுல்ப்படுத்தப்பட்டதன் மூலம் காஷ்மீர், மாநில அந்தஸ்தை இழந்துள்ளது. அதேநேரம் சட்டப் பேரவை பிரதிநிதிகள் கொண்ட யூனியன் பிரதேசமாக காஷ்மீரும், பிரதிநிதிகள் யாருமின்றி, அதிகாரிகளின்கீழ் நிர்வாகம் கொண்ட பகுதியாக லடாக்கும் பிரிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் ஏற்கனவே அமெரிக்காவின் ஆதரவைக் கோரி பாகிஸ்தான் கடுமையாக போராடி, அது தோல்வியில் முடிந்தது. ஐ.நாவில் இது தொடர்பான விவாதங்கள் நடைபெற்ற நிலையில், அங்கும் பாகிஸ்தான் அரசால் வெற்றிபெற இயலவில்லை.

இத்தகைய சூழலில் சிறிலங்கா அரசு பாகிஸ்தான் விவகாரத்தில் தங்கள் நாட்டிற்கு ஆதரவாக இருப்பதாக உத்திரவாதம் அளித்துள்ளது என்று சிறிலங்காவிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் தரப்பில் கடந்த 20ஆம் திகதி அறிவிப்பு ஒன்று வெளியாகியது. இந்த அறிவிப்பின் மூலம் நீதியை நிலைநாட்ட சிறிலங்கா தங்களுக்கு உதவியிருப்பதாக பாகிஸ்தான் அதிபரும் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த வெற்றியும்கூட நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

சிறிலங்கா அதிபர் தரப்பில் 21ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை பாகிஸ்தான் தூதுவர் சாஹித் அகமத் கடந்த 20ஆம் திகதி சந்தித்து, இந்திய ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பற்றி பேசினார். அப்போது சட்டவிரோதமாக காஷ்மீரை சொந்தம் கொண்டாட சட்டப்பிரிவு 370 நீக்கத்தை இந்திய அரசு மேற்கொண்டிருப்பதாகவும் பாகிஸ்தான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. கடந்த 5ஆம் திகதி முதல் காஷ்மீர் பகுதியில் சட்டம் ஒழுங்கு பாதிக்க்பட்டுள்ளதாகவும், இது மனித உரிமை பறிப்புக்கு வழிவகுப்பதாகவும் எடுத்துரைத்த அவர், இது தொடர்பாக ஐ.நாவிலும் முறையிட்டுள்ளதாக தெரிவித்தார்.

அப்போது காஷ்மீர் மக்களின் விருப்பப்படி, ஐ.நாவில் தீர்மானம் நிறைவேற்றி இது தொடர்பான முடிவுகளை பாகிஸ்தானும், இந்தியாவும் எடுக்க வேண்டும் என்ற விருப்பத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளிப்படுத்தினார். அத்தோடு காஷ்மீரில் தற்போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் அமைதியை ஏற்படுத்த கட்டாயம் எடுக்கப்பட வேண்டிய ஒன்று தான் என்றும், இவ்விவகாரத்தில் இரு நாடுகளும் கலந்தாலோசித்து முடிவெடுப்பதே சிறந்தது என்றும் தெரிவித்தார்.

பாகிஸ்தானுக்கு தனிப்பட்ட முறையில் ஆதரவு தருவதாக சிறிலங்கா அதிபர் எங்கும் கூறவில்லை. பாகிஸ்தான் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்கு முறையாக மறுப்பு தெரிவிக்கப்படுகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.