எனது வீட்டை சோதனையிட்டது சிறப்புரிமை மீறல் மட்டுமல்ல அச்சுறுத்தலும் கூட – சிறிதரன்

வட்டக்கச்சியிலுள்ள தனது வீட்டை பாதுகாப்புத் தரப்பினர் சுற்றிவளைத்து சோதனை நடத்தியதன் மூலம் பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் சபாநாயகரிடம் முறையிட்டார்.

பாதுகாப்புத் தரப்பினரால் தான் பல தடவைகள் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும், சுதந்திரமாக கருத்துக்களை முன்வைக்கவோ, சுதந்திரமாக வாழவோ முடியாத நிலை இருப்பதாகவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று சிறப்புரிமைப் பிரச்சினையொன்றை முன்வைத்து உரையாற்றும்போதே அவர் இந்த முறைப்பாட்டை சபாநாயகரிடம் முன்வைத்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 882 ஆறுமுகம் வீதி,வட்டக்கச்சியில் உள்ள எனது சொந்தக்காணியிலுள்ள வீட்டில் (நேற்று) அதிகாலை இராணுவத்தினர், பொலிஸார், பயங்கரவாத தடுப்பு பிரிவினர் என நூற்றுக்கு மேற்பட்டவர்கள் குவிந்து காணியையும் வீட்டையும் சுற்றிவளைத்ததுடன், காணிக்குள் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதற்காக எனது காணியைத் திறக்குமாறு கூறியதுடன், காணியைப் பராமரிக்கும் சண்முகநாதன் என்பவரை கிராம அலுவலரின் உதவியோடு அழைத்துவந்து எனது வீட்டின் கதவுகளையும் திறக்கக் கோரியுள்ளனர். இது பற்றி எனக்கு எந்தத் தகவலும் தெரியப்படுத்தப்படவில்லை. இதற்கு முன்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நான் இவ்வாறு அச்சுறுத்தப்பட்டுள்ளேன்.

இந்த சோதனை நடவடிக்கையானது என்னுடைய பாராளுமன்ற சிறப்புரிமையை மீறுகின்ற செயலாகவே உள்ளது. இதுவும் என் மீதான அச்சுறுத்தலாகவே உள்ளது. உடனடியாகவே இது தொடர்பில் சபையிலிருந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவின் கவனத்துக்கு சபாநாயகர் கொண்டுவந்தபோது, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.