ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் – சம்பந்தன் சந்திப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜனநாயகம் மற்றும் தேர்தல் கண்காணிப்பு கொள்கை அதிகாரி ரிக்கார்டோ செலரி மற்றும் அரசியல் வர்த்தகம் மற்றும் தொடர்பாடல்களிற்கான பிரதி தலைவர் ஆன் வாகியர் சட்டர்ஜி தலைமயிலான குழுவினர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பு 12.08 அன்று கொழும்பில் நடைபெற்றது. இச்சந்திப்பு பற்றி கூட்டமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குழுவினருடன் பேசிய சம்பந்தன் குழுவினருக்கு சரியான விபரத்தை தெளிவுபடுத்தினார். அவர்கள் 1994ஆம் ஆண்டிலிருந்து நாட்டு மக்கள் தொடர்ச்சியாக 25 வருடங்களாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஆதரவாகவே தேர்தல்களில் தீர்ப்பளித்து வருகின்றனர். இந்த பின்னணியில் இன்னுமொரு ஜனாதிபதி தேர்தலை நடத்துவதானது மக்கள் ஆணையை மீறும் ஒரு கபடச் செயல் என தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் 90%இற்கும் அதிகமான மக்கள் ஒரு புதிய அரசியல் யாப்பிற்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்கள். அதன் விளைவாக ஒரு புதிய அரசியலமைப்பிற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

ஆனால் அவை தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. 1988ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு பிற்பாடு கடந்த 30 வருடங்களாக புதிய அரசியலமைப்பு தொடர்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக பல்வேறு தீர்வுத் திட்டங்கள் முன்மொழியப்பட்ட போதும், அவற்றுள் எதுவும் முன்னெடுத்துச் செல்லப்படவில்லை.

எனவே தற்போது நாட்டிற்குத் தேவையானது ஒரு ஜனாதிபதி தேர்தல் அல்ல. ஒரு புதிய அரசியல் யாப்பேயாகும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளிடம் தெரிவித்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.