தாயகத்திலே பௌத்த ஆக்கிரமிப்புக்களுக்கு கூட்டமைப்பினரே பொறுப்பாளிகள்;தமிழ்த் தேசிய அரசியல் அவதானிப்பு மையம் சுட்டிக்காட்டு

தமிழர் தாயகத்தை முழுமையாக பௌத்தமயமாக்கும் தொலைநோக்குடன் இலங்கை அரசு தீவிரமாக முன்னெடுத்து வரும் பௌத்த ஆக்கிரமிப்புக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பொறுப்பாளிகளாக உள்ளனர். அவர்களே அதற்கான பொறுப்புக்கூறலையும் செய்ய வேண்டும் என்று தமிழ்த் தேசிய அரசியல் அவதானிப்பு மையம் சுட்டிக்காட்டியுள்ளது. இவ்விடயம் குறித்து தமிழ்த் தேசிய அரசியல் அவதானிப்பு மையம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அநுராதபுரம் பௌத்த சமயத்தில் புனித நகரமாக அறிவிக்கப்பட்டதிலிருந்து தாயகத்தின் முகவாயிலான வவுனியாவில் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் ஊடாக பௌத்த சமயத்தின் பெயராலான ஆக்கிரமிப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வந்திருந்தன.

போரின் பின்னரான சூழலில் முல்லைத்தீவிலும், மன்னாரிலும், கிளிநொச்சியிலும், யாழ்ப்பாணத்திலும், கூட்டமைப்பின் தலைமையின் கோட்டையான திருமலையிலும், மட்டக்களப்பிலும், அம்பாறை என்று தமிழர் பிரதேசத்தின் மூலை முடுக்கெல்லாம் பௌத்த  விகாரைகளையும் உருவச் சிலைகளையும் நிர்மாணிக்கும் பணிகளை இலங்கை அரசு தீவிரப்படுத்தி வருகிறது. போர் நிறைவுக்கு வந்து பத்து ஆண்டுகளாகியிருக்கின்றன. தற்போது வரையில் சிங்கள பௌத்த மேலாதிக்க வாதிகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த நிர்மானங்களில் ஆகக்குறைந்தது ஒன்றைக் கூட தடுத்து நிறுத்தி தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை பாதுகாத்திருக்கின்றோம் என்று கூறுவதற்கு எந்தவொரு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இயலுமை அற்றவர்களாக இருக்கின்றமையானது மிக வேதனைக்குரிய விடயமாகும். இவ்வாறிருக்க இந்து அமைப்புக்களின் ஏற்பாட்டில் நல்லூர் ஆலய முன்னறலில் நடைபெற்ற கவனயீர்ப்பு பேரணியில் கலந்து கொண்ட மாவை சேனாதிராஜா, பௌத்த ஆக்கிரமிப்புக்கள் தடுக்கப்பட வேண்டும் என்றும் இந்தியா தலையீடுசெய்ய வேண்டும் என்ற பொருள்பட உரையாற்றியிருந்தார். இதேபோன்று தான் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனும்,சாந்தி சிறீஸ்கந்தராசாவும் இந்தியாவின் தலையீட்டினை கோரியிருக்கின்றார்.Jaffna Navatkuli Sammidhi Sumana Vihara Opening 1 1 தாயகத்திலே பௌத்த ஆக்கிரமிப்புக்களுக்கு கூட்டமைப்பினரே பொறுப்பாளிகள்;தமிழ்த் தேசிய அரசியல் அவதானிப்பு மையம் சுட்டிக்காட்டு

போர் நிறைவுக்கு வந்து பத்து வருடங்களில் தமிழ்த் தேசிய அரசியலை நீக்கமுறச்செய்ததோடு இலங்கை அரசை இந்தியா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து பாதுகாக்கும் முனைப்புடன் செயற்பட்டதோடு பிராந்திய,சர்வதேச தரப்புக்களுடனான உறவுகளை வலுவாக்குவதிலிருந்து விலகியிருந்து விட்டு தற்போது நடுக்கடலில் கப்பல் மூழ்கும் நிலையை அடைந்ததும் மூன்றாம் தரப்பின் மத்தியஸ்த்தை கோரும் கூட்டமைப்பின் தன்நலம் சார்ந்த வியூகத்தை இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் தமிழ் மக்களும் உணர்வார்கள். இதுவொருபுறமிருக்க, பௌத்த சமயத்தின் பெயரால் ஆக்கிரமிப்புக்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றபோது கூட புதிய அரசியலமைப்பு வருகிறது என்று தமிழ் மக்கள் மத்தியில் கண்கட்டு வித்தை காட்டிக்கொண்டிருந்த கூட்டமைப்பினர் ஆகக்குறைந்தது இடைக்கால அறிக்கையிலாவது பௌத்தத்திற்கு முதன்மை தானம் வழங்குவதையாவது எதிர்த்திருக்கலாம். ஆனால் அதனைச் செய்திருக்கவில்லை.

வரவு செலவுத்திட்டங்களுக்கும், நம்பிக்கையில்லாப்பிரேணை நிறைவேற்றுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களின் போதும் தயாகப்பிரதேசங்களில் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட பௌத்த நிர்மனங்களை முழுமையாக அகற்றவேண்டும் என்று ஒன்றொன்றாக கோரிக்கை வைத்திருந்தாலாவது இற்றைக்கு அரைவாசி நிர்மானங்கள் தடுக்கப்பட்டிருக்கும். ஆனால் அவ்விதமான கருமங்கள் எவற்றையுமே சம்பந்தன் ஐயா தலைமையிலான கூட்டமைப்பு முன்னெடுக்காது பின்னடித்தமைக்கான காரணம் என்ன? ஆக, பௌத்த சமய நிர்மானங்கள் தாயகத்தினை ஆக்கிரமிப்பதை நாம் எதிர்க்கவில்லை என்பது தானே பொருளாகின்றது. அவ்வாறாயின் போருக்கு பின்னரான பௌத்த ஆக்கிரமிப்புக்கள் பற்றி பேசுவதாயின் கூட்டமைப்பினரே அதற்கான பொறுப்புக்கூறலைச் செய்ய வேண்டியவர்களாகின்றனர். இதிலிருந்து இவர்கள் ஒருபோதும் விலகி நிற்க முடியாது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு முண்டுகொடுத்துக்கொண்டிருக்கும் கூட்டமைப்பு அடுத்த தேர்தல்களிலும் அதன் பக்கமே சாயவுள்ள நிலையில் தற்போது தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பௌத்த நிர்மானங்களை தடுத்து நிறுத்தி அகற்றுவதற்கான திராணி கூட்டமைப்பிடம் இருக்கின்றதா?

கன்னியா விவகாரத்தில் இளைஞர் சமூகத்தின் எழுச்சியின் அச்சத்தால் நீதிமன்றத்தினை கூட்டமைப்பு நாடியதே தவிரவும் இதய சுத்தியுடன் கூட்டமைப்பு செயற்பட்டிருக்கவில்லை என்பது திண்ணம். தமிழ் தேசிய அரசியல் தலைமையின் கோட்டைக்குள்ளேயே நிலைமை அவ்வாறு இருக்கையில் ஏனைய பகுதிகள் பறிபோனாலும் வெறும் கூக்குரல் சத்தத்துடன் அனைத்தும் நின்றுவிடும்.

இந்த யாதார்த்தத்தை தாயக உறவுகள் புரிந்துகொண்டு பௌத்தமயமாக்கல் உள்ளிட்ட கட்டமைப்பு ரீதியான இன அழிப்புக்கு எதிராக சனநாயக வீச்சுமிக்க போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் அவசியம் என்பதோடு தமிழர் தாயகத்திலே கட்டமைப்பு ரீதியான இன அழிப்பை செய்துவரும் அரசை கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக எந்தவொரு முன் நிபந்தனையும் விதிக்காமல் ஆதரித்த தமிழ் சக்திகளை தமிழ் மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.