மட்டு. காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி அமலநாயகி மற்றும் அவரது மகள் மீதும் தாக்குதல்

372
130 Views

வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் துணைத்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவருமான அமலநாயகி மற்றும் அவரது மகள் மீதும் இனந்தெரியாத நபர்கள் இன்று மாலை உந்துருளியாள் மோதி தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அமல நாயகி மற்றும் அவரது மகள் ஆகியோர் காயமடைந்து மட்டக்களப்பு கரடியனாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மரண வீடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக உந்துருளியில் தனது மகளுடன் மட்டக்களப்பு உன்னிச்சை வீதியில் பயணித்துக் கொண்டிருந்த சமயம் எதிர்த்திசையில் வந்த மூன்று பேர் அடங்கிய குழுவினரால் வேண்டுமென்றே மோதி விபத்து ஏற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் அமலநாயகி தெரிவிக்கையில்.,

தாம் எதிர் திசையில் வருவதை அறிந்து வேண்டுமென்றே தனது உந்துருளியை நோக்கி எதிரே வந்தவர்கள் செலுத்தியதாகவும் அதன்போது விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்று விட்டதாகவும், இவ்வாறு எதிர்த்திசையில் வந்தவர்கள் புளொட் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான மோகன் அவர்களின் மைத்துனர் எனவும் ஏனைய இருவர் தொடர்பில் தகவல்கள் எவையும் கிடைக்கவில்லை எனவும் அமலநாயகி தெரிவித்தார்.

இவ்வாறு மோதிவிட்டு தப்பிச் சென்றவர்களில் ஒருவரை பிரதேச இளைஞர்கள் மடக்கிப்பிடித்த சமயத்தில் ஏனைய இருவரும் தப்பிச் சென்றுள்ளனர். பிடிபட்ட நபர் மட்டக்களப்பு கரடியனாறு பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

இவ்வாறு காயமடைந்த அமல நாயகி வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவராக இருப்பதுடன் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வரும் காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அங்கே போராட்டங்களை ஒழுங்கமைத்து வருகின்ற இந்த நிலையில், கடந்த காலங்களில் பல்வேறு விதமான அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகிய நிலையில் இன்றைய தினம் வேண்டுமென்றே உந்துருளியால் மோதி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை ஒருவகையிலான அச்சுறுத்தல் செயற்பாடாகவே கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here