தீவக கப்பல் பணியில் கடற்புலிகள்

யாழ்.குறிகாட்டுவானிலிருந்து தீவகங்களுக்கு செல்லும் கப்பல்களைச் செலுத்துவதற்கு தற்போதும் கடற்படையினரே பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இளைஞர்களுக்கு போதிய பயிற்சியளிக்காமையே இதற்கான காரணமாகும்.

இந்நிலையில் கடற்புலிகள் அணியிலிருந்த கப்பலோட்டிகளை சான்றிதழ் வழங்கி பணியில் அமர்த்த முடியுமா என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சமுத்திர பல்கலைக்கழக பணிப்பாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

திங்கட்கிழமை (29) யாழ் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட வடக்கு மாகாணத்தில் உள்ள சமுத்திர பல்கலைக்கழகத்தின் உபகரணத் தேவைகள் தொடர்பாக மாணவர்களை இணைத்துக் கொள்வது பற்றியும் பணிப்பாளர் தெரிவித்த போதே பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மேற்படி கோரிக்கையை தெரிவித்தார்.

அதற்குப் பதிலளித்த சமுத்திர பல்கலைக்கழக பணிப்பாளர் சமுத்திரா பல்கலைக்கழக பயிற்சிகள் மூலம் 50 அடிக்கு உட்பட்ட படகுகளையே செலுத்த முடியும் என்றும் அதற்கு மேலாக வடதாரகை, நெடுந்தாரகை போன்ற படகுகளை செலுத்துவதற்கு பயிற்சிகள் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

கடற்புலிகளில் இருந்த பலர் கப்பலை ஓட்டும் திறமையுடன் உள்ள போதும், அவர்களிடம் அதற்கான சான்றிதழ் இல்லை எனக் காரணம் காட்டி கடற்படையினரே தீவகப் படகுகளை செலுத்துகின்றதாகவும் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.

கடற்புலிகளில் இருந்த கப்பலோட்டிகள் அணியை தந்தால், சான்றிதழ் வழங்கி தொழில் வாய்ப்பை ஏற்படுத்த முடியுமா? அவ்வாறு தொழில் வாய்ப்பை ஏற்படுத்துவீர்களானால் கடற்புலிகளில் ஒரு அணியைத் தருகின்றேன் எனவும் சிறிதரன் கூறிய போது, அதற்கு பணிப்பாளர் அமைதியாக இருந்துள்ளார்.

இச்சமயம் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா, இந்தக் குழுவிற்குத் தொடர்புபடாத விடயத்தை பேசி பிரச்சினையை ஏற்படுத்த வேண்டாம் என்று கூறி இந்தப் பேச்சை முடித்துக் கொண்டார்.