சுயலாப அரசியலை கைவிடுவாரா சம்பந்தன்? – தமிழ்த் தேசிய அரசியல் அவதானிப்பு மையம் கேள்வி

தமிழ் மக்களின் தலைமகன் என்று மார்பு தட்டும் சம்பந்தனின் கோட்டைக்குள் ளேயே சிங்கள, பௌத்த பேரினவாதம் தலைவிரித்தாடுகின்ற நிலையிலாவது அவர் சுயலாப அரசியலை கைவிடுவாரா என்று தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது.

இவ்விடயம் குறித்து மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது…

தமிழ் மக்களின் வரலாற்றுப் பொக்கிஷங்கள் நிறைந்த கன்னியா பகுதியை வில்கம் விகாரை வஹாராதிபதி அமபிட்டிய சீல வன்ச திஸ்ஸ ஸ்திர தேரர் திட்டமிட்ட வகையில் ஆக்கிமிப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து நகர்வுகளைச் செய்து வருகின்றார். இவ்வளவு நாளும் அரசல்புரசலாக சென்றுகொண்டிருந்த இந்த விடயம் தொடர்பாக உரிய கவனத்தினை திருமலை மாவட்ட மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் சம்பந்தன் செலுத்தியிருந்தால் இப்பிரச்சினை இவ்வளவு தூரம் விஸ்வரூபம் எடுத்திருக்காது.

எதிர்க்கட்சித்தலைவர் பதவியை கையில் வைத்திருந்த தருணத்திலோ அல்லது அரசாங்கத்திற்கு வரவு செலவுத்திட்டங்களிலும், நெருக்கடிகளிலும் அரசை பாதுகாக்கின்றபோதோ தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்குங்கள் என்று நிபந்தனை விதிப்பதற்கு திராணியற்றிருந்தாலும் ஆகக்குறைந்தது தனது சொந்த மாவட்டத்தில் நடைபெறும் இந்த ஆக்கிரமிப்புக்களை உடன் நிறுத்துங்கள் என்றாவது நிபந்தனை விதித்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்திருக்கலாம். ஆனால் சம்பந்தன் அதனைச் செய்திருக்கவில்லை.

கன்னியா பிள்ளையார் ஆலயம் உள்ளிட்ட முக்கிய தமிழர்களின் அடையாளங்களைக் கொண்டிருக்கும் 8 ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரியான கோகில ரமணி அம்மா குறித்த விகாராதிபதியின் திட்டத்தில் அவ்விடத்தினை தொல்பொருள் திணைக்களம் சுவீகரித்துள்ளது என்பது உள்ளிட்ட விடயங்களை எத்தனையோ தடவைகள் சம்பந்தனைச் சந்தித்தும் தொலைபேசியிலும் கூறியபோதும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

இப்பிரதேசத்தில் சுனாமியின் பின்னர் பிள்ளையார் ஆலயத்தினை அமைப்பதற்கான அடிக்கல்லை சம்பந்தன் நாட்டிய போதும் ஆலயத்திற்கான மேடை மட்டுமே அமைக்கப்பட்டது. அதற்கு அப்பால் நிர்மாணப்பணிகளை முன்னெடுப்பதற்கு சம்பந்தன் உதவியிருக்கவில்லை. தற்போது அவர் அடிக்கல் நாட்டி அமைக்கப்பட்ட மேடையும் அழிக்கப்பட்டுள்ளது.

இப்படியிருக்க, கடந்த 11ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக வந்த நம்பிக்கையில்லாத பிரேரணையைத் தோற்கடித்து மீண்டும் அரசாங்கத்தினை கூட்டமைப்பு காப்பாற்றிவிட்டு மூச்சுவிடுவதற்குள் கல்லாவில் பெரும்பான்மை இனத்தவரும், தேரர்களும் இணைந்து கைவைத்து விட்டார்கள்.

அதன் பின்னர் கடந்த 16ஆம் திகதி இன, மத, பிரதேச பேதமின்றி மக்கள் ஜனநாயக போராட்டங்களை முன்னெடுத்தபோது ஆகக் குறைந்தது அந்ததொகுதியில் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்றாவது சம்பந்தன் சமூகமளிப்பதை விரும்பி யிருக்கவில்லை. மேலும் தனது மாவட்ட முகவராக செயற்படுவதற்காகவே தேசியப் பட்டியல் ஆசனத்தில் உள்ளீர்க்கப்பட்ட துரை ரட்ணசிங்கமும் குறித்த பகுதிக்கு சமூக மளித்திருக்கவில்லை.

இதன் பின்னர் நிலைமைகள் மோசமடையவும்,  சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு முண்டு கொடுக்கும் அரசாங்கத்தின் மற்றொரு பங்காளிக்கட்சி தலைவரும் அமைச்சருமான மனோகணேசன் இந்தவியடம் தொடர்பில் சனாதிபதியுடன் சந்தித்து பேச்சுவார்த்தையை முன்னெடுத்தபோது கூட சம்பந்தனோ அல்லது வேறு கூட்டமைப்பு உறுப்பினர்களோ பங்கேற்றிருக் கவில்லை.

இவ்வாறான செயற்பாடு, தமிழ் மக்களுக்கு என்ன அநீதிகள் இடம்பெற்றாலும் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்தினை நோகாது பாதுகாப்பதே தமது நிலைப்பாடு என்பதை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர். சம்பந்தன் உட்பட அனைத்து கூட்டமைப்பு உறுப்பினர்களும் கன்னியா உட்பட எந்தவிடமாக இருந்தாலும் அதனைப்பயன்படுத்தி அடுத்த தேர்தலில் தமது வாக்குவங்கியை நிரப்புவதை மட்டுமே மையப்படுத்தி செயற்படுகின்றார்களே தவிரவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விரும்பவில்லை.

சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு கொள்கைகளை, கோட்பாடுகளை அணுகு முறைகளை என அனைத்தையுமே கைவிட்டு அரசாங்கத்திடம் சரணாகதி அடைந்துள்ள நிலையில் கன்னியா விடயத்தில் இதய சுத்தியுடன் செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்றுள்ளது.