கறுப்பு யூலை இனப்படுகொலை இன்றும் தொடர்கின்றது -ஆர்த்திகன்

468
131 Views

பிரித்தானியாவிடம் இருந்து சிறீலங்கா சுதந்திரம் பெற்ற பின்னர் சிறுபான்மை தமிழ் மக்களுக்கு எதிராக பெரும்பான்மை சிங்கள மக்களும் அதன் அரசுகளும் மேற்கொண்டு வரும் தொடர் இனஅழிப்புக்களில் மிகப்பெருமளவில் வெளிப்படையாக அரசின் ஆதரவுடன் உலகம் அறிய சிறீலங்காவின் தலைநகர் தொடக்கம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டதே

1983ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு யூலை இனப்படுகொலை.

அன்று பல ஆயிரம் தமிழ் மக்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதுடன், பெருமளவான தமிழ் மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு விரட்டியடிக்கப்பட்டனர், தமிழ் மக்களின் சொத்துக்களும் சூறையாடப்பட்டன. சிங்கள அரசின் பாதுகாப்பில் சிறையில் இருந்தவர்களும் சிறைக்காவலர்கள் மற்றும் சிங்களக் காவல்துறையின் உதவியுடன் படுகொலைசெய்யப்பட்டனர்.

அதனை கலவரமாக சித்தரித்தது சிறீலங்கா அரசு. உலகநாடுகள் அனுதாபம் தெரிவித்தன. அகதிகளாக ஓடிய தமிழ் மக்களுக்கு புகலிடத் தஞ்சம் வழங்கின, ஆனால் இனப் படுகொலையாளிகள் தண்டிக்கப் படவில்லை.

தாம் வெளிப்படையாக மேற்கொண்ட இனப் படுகொலையை கூட உலகம் கேட்கத் தவறியது சிங்கள அரசுகளுக்கு புதிய உற்சாகத்தையும், சிங்களக் காடையர்களுக்கு அதிக துணிச்சலையும் வழங்கியது. எந்த உயிர்களுக்கும் தீங்கு விளைவிக்க கூடாது என்ற தத்துவத்துடன் துறவறம் புகுந்து கௌதம புத்தரின் வழியை பின்பற்றிய பௌத்த துறவிகளும் எதற்கும் துணிந்த காடையர்களாக மாறினார்கள். இனப்படுகொலைகள் தொடர்ந்தன, வடக்கிலும், கிழக்கிலும் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்டனர். படுகொலை செய்யப்பட்ட பெண்களையும், குழந்தைகளையும், வயோதிபர்களையும் பயங்கரவாதிகள் என சிங்கள அரசு கூறியதை அனைத்துலக சமூகமும், ஐ.நாவும் கேட்டு அமைதியாக இருந்தன.

அதனால் சிறீலங்கா அரசின் இனப்படுகொலை மூழு வீச்சுடன் தொடர்ந்தது. அது முள்ளிவாய்க்கால் அவலம் வரை சென்றது. மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களை இராணுவம் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியது, அங்கு இடம்பெற்ற இனப்படுகொலையை சாட்சியப்படுத்தக் கூட ஐ.நா விரும்பவில்லை. சிங்கள அரசின் சொற்படி மக்களை கொலைக் களத்திற்குள் தள்ளிவிட்டு ஐ.நா வெளியேறியது. தம்மை விட்டுவிட்டு செல்லவேண்டாம் என ஐ.நாவிடம் உயிர்ப்பிச்சை கேட்ட அப்பாவி மக்களில் ஆயிரக்கணக்கானோர் தற்போது உயிருடன் இல்லை. அவர்களுக்கான நீதியும் வழங்கப்படவில்லை. 36 ஆண்டுகள் கடந்தும் கறுப்பு ஜுலை இனப்படுகொலைக்கான நீதி இன்றுவரை கிட்டவில்லை. 10 ஆண்டுகள் சென்றும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான நீதி கிட்டவில்லை.

இவை எல்லாவற்றிற்கும் காரணம் என்ன? ஒரு பெரும் இனம் சிறுபான்மை இனத்தின் மீது மேற்கொண்ட இனப்படுகொலையை தமது பூகோள மற்றும் வர்த்தக நலன்கருதி புறக்கணித்த மேற்குலகமும் அனைத்துலக சமூகமும், அவர்களுக்கு சார்பாக இயங்கும் ஐ.நாவும்தான் இதற்கான பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இவர்கள் மீது அழுத்தங்களை பிரேயோகிக்கத் தவறிய தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் அதில் பங்குகள் உண்டு. ஒரு இனஅழிப்பை தடுக்கத் தவறிய அல்லது அதனை மேற்கொண்டவர்களுக்கு தண்டனையை வழங்கத் தவறிய இவர்களால் தான் சிங்கள அரசு இன்றும் தனது இனப்படுகொலையை தொடர்ந்து மேற்கொள்கின்றது.

வடிவங்கள் மாற்றமடைந்துள்ளதே தவிர சிங்கள அரசின் இனவிரோதமும், இனஅழிப்புச் சிந்தனையும் மாற்றமடையவில்லை. எனவே தான் தமது காலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த தாயகப் பிரதேசத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பதற்காக அமைதியான வழிகளில் போராடிய தமிழ் மக்கள் மீது கொதிநீரை ஊற்றுகின்றனர் பெரும்பான்மை சிங்கள மக்கள். அதனை ஊக்குவிக்கின்றனர் பௌத்த மதகுருக்கள். இன்று கறுப்பு யூலை இனப்படுகொலையயின் 36 ஆவது ஆண்டை நினைவுகூரும் தமிழ் இனம் தற்போதும் ஒரு கட்டமைக்கப்பட்ட இனஅழிப்புக்குள் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மறந்துவிடலாகாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here