யாழ்.காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவிற்கு பயணிகள் கப்பல் சேவை

காங்கேசன்துறை – காரைக்கால் துறைமுகங்களை இணைக்கும் வகையிலும், அதேபோல் கொழும்பு – தூத்துக்குடி துறைமுகங்களை இணைக்கும் வகையிலும், இரண்டு பயணிகள் கப்பல் சேவைகளை ஆரம்பிப்பதன் மூலம், இருதரப்பு வணிக செயற்பாடுகள் மற்றும் சுற்றுலா வாய்ப்புகளை அதிகரிக்க முடியும் என சிறிலங்கா துறைமுக அதிகார சபையின் தலைவர் கவன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மேலும் பயணிகள் கப்பல் சேவையின் மூலம் சுற்றுலாத்துறைக்கும், சிறிய அளவிலான வணிகத்திற்கும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தென்னிலங்கையிலிருந்து இந்தியாவிற்கு பயணிக்கும் பௌத்த சுற்றுலாப் பயணிகளுக்கு இது சாதகமாக இருக்கும். அத்துடன் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அருகாமையில் வாழும் சமூகங்களுக்கு வணிக வாய்ப்புகளை அதிகரிக்கும்.

2011இல் தூத்துக்குடி – கொழும்பிற்கிடையில் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டது, என்றாலும் அது வணிக ரீதியாக போதிய வருமானத்தை அளிக்காததால், இந்த கப்பல் சேவையை நடத்திய தனியார் நிறுவனம் அதை நிறுத்திக் கொண்டது. தற்போது காங்கேசன்துறை துறைமுகத்தை அரசு தரமுயர்த்தி வருகின்றது. இதற்காக 45.27 மில்லியன் டொலரை இந்தியவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து பெற்றுள்ளது. கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கொள்கலன் முனையத்தை (ECT) மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முயற்சியில் இந்தியாவும் ஒரு பங்காளியாக உள்ளது. இந்த முனையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இந்த ஆண்டு மே மாதம் ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளன. இது 700 மில்லியன் டொலர் வரை மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 51% பங்கை சிறிலங்கா வைத்திருக்கும். மிகுதியை எவ்வாறு பிரிப்பது என்பது விவாதத்தில் உள்ளது.

யாழிலிருந்து மேற்கொள்ளப்படும் இந்த கப்பல் சேவை, விமான சேவை என்பனவற்றை மேற்கொள்வதில் சிறிலங்கா அரசாங்கம் அதிகளவான அக்கறை காட்டி வருகின்றது. இதற்கான அடிப்படைக் காரணம் தமிழ் மக்களின் நன்மைக்காக என்பதல்ல, தமது வியாபாரத்திற்கும் சிங்கள இனத்தவரின் போக்குவரத்திற்கு செலவு குறைவான ஒரு வழியை அமைத்துக் கொடுப்பதும் தான் என்பதை தமிழ் மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் அறிந்து கொள்ள வேண்டும்.

இப்படியான செயற்பாடுகளை விடுதலைப் புலிகள் இருந்த காலப்பகுதியில் மேற்கொள்ள முடியாது போனதால், தற்போது இவற்றை அவசர அவசரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று எண்ணுகின்றனர்.

விடுதலைப் புலிகள் இருந்த காலப்பகுதியில் இந்த அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டால், விடுதலைப் புலிகள் தம்மை பலப்படுத்திக் கொள்வர் என்ற அச்சம் அரசாங்கத்திற்கு இருந்து வந்தது. அத்துடன் எவ்வளவு பாதுகாப்பு கொடுத்தாலும் சிங்களவர்கள் இந்த போக்குவரத்தை மேற்கொள்ள நிச்சயம் சம்மதிக்க மாட்டார்கள் என்பது அரசிற்கு நன்கு தெரிந்திருந்தது.

இதனாலே தான் இப்போது இவற்றை செய்கின்றதே ஒழிய தமிழ் மக்களின் அக்கறையிலோ அல்லது வடக்கிற்கான அபிவிருத்தியோ என தவறாக மக்கள் ஏமாந்து விடக்கூடாது.