வவுனியாவில் மயானத்தை உரிமை கோரும் பெரும்பான்மையினர்

வவுனியா சிதம்பரபுரத்தில் அமைந்துள்ள பொது மயானத்தை கற்குளம் படிவம் 1,2 சிதம்பரபுரம், சிதம்பரநகர் கிராம மக்கள் 1992 ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து பயன்படுத்தி வந்திருந்தனர் . இந்த மயானத்தை பெரும்பான்மையினத்தவர், தங்களுக்கு உரிமையானதெனவும், இந்தக் காணி தமக்குரியது என்றும் உரிமை கோரி வருகின்றனர்.

இந்த மயானத்தில் தமிழ் மக்கள் தங்கள் இறந்தவர்களை புதைத்ததுடன், அவர்களுக்கான கல்லறைகளையும் அமைத்துள்ளனர்.

கடந்த 09ஆம் திகதி  குறித்த பொது மயானத்தை அப்பகுதி தமிழ் மக்கள் துப்புரவு செய்து கொண்டிருக்கும் போது அங்கு வந்த பெரும்பான்மையினத்தவர்கள் குறித்த காணி தமக்குரியது என்று தடுத்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த இடத்திற்கு வருகை தந்த பெரும்பான்மையின பிரதேச சபை தலைவர், மற்றும் உறுப்பினர்கள் இந்த காணியை துப்புரவு செய்ய வேண்டாம் எனவும், இது தொடர்பாக பிரதேச சபையில்  கலந்துரையாட வேண்டியிருப்பதால் அங்கு வருமாறும் தெரிவித்து சென்றனர்.

அண்மைக்காலமாக தமிழ் மக்களின் கோவில்கள், மயானங்கள், காணிகள் போன்றவற்றை பெரும்பான்மையினத்தவர் தமக்குரியவை என்று உரிமை கோருவதுடன், அங்கு உடனேயே ஒரு குடியேற்றத்திட்டத்தையும் நிறுவுவதை காணக்கூடியதாக உள்ளது.