பொலிசாருக்கு எதிரான முறைப்பாடுகளுக்கு இணையதள வசதி

பொலிசாருக்கு எதிரான முறைப்பாடுகளைப் பெற்றுக் கொள்வதற்கான இணையதள ஒழுங்கினை தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கமைவாக பொலிசாருக்கு எதிரான முறைப்பாடுகளை எழுத்து மூலமாகவும், வாய் மூலமாகவும், காணொளி மூலமாகவும் இணையத்தளம் ஊடாக அனுப்பி வைக்கலாம் என அறிய முடிகின்றது.

இதன் ஆரம்ப நிகழ்வு சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் எதிர்வரும் 28ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேபோன்று பொலிசார் தொடர்பான சிறு தவறுகளைக்கூட தமது கையடக்கத் தொலைபேசி ஊடாக பதிவு செய்து தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அனுப்ப முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் தாம் செய்த முறைப்பாட்டிற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையையும் பொது மக்கள் அறிய முடியும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

முறைப்பாடு சமர்ப்பிக்கும் போது வழங்கப்படும் குறியீட்டை 1960 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு இதனை அறிந்து கொள்ளலாம் என அந்த அதிகாரி தெரிவித்தார்.

வடபகுதியில் சிறீலங்கா காவல்துறையினர் தமிழ் மக்கள் மீது வன்முறைகளை மேற்கொள்வதும்இ தமிழ் சாரதிகளிடம் பணம் பறிப்பதும் அன்றாட நிகழ்வாக இருக்கின்றது. இது தொடர்பில் தமிழ் மக்கள் மேற்கொள்ளும் முறைப்பாடுகளை சிறீலங்கா காவல்துறை உயர் அதிகாரிகள் கருத்தில் கொள்வார்களா என்பதே தற்போதைய முக்கிய கேள்வி.