நிலத்ததொடர்ச்சி என்ற பேச்சைப் பேசுவதற்கு அவர்களுக்கு எந்த உரிமையுமில்லை – கல்முனையில் சுரேஷ் பிரேமச்சந்திரன்

நிலத்தொடர்ச்சியற்ற மாகாணசபையை முதன்முதலில் கோரியவர் மறைந்த அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள். எனவே நிலத்ததொடர்ச்சி என்றபேச்வை பேசுவதற்கு அவர்களுக்கு எந்த உரிமையுமில்லை.இன்று த.தே.கூட்டமைப்பு கம்பெரலிய பனை சமுர்த்தி என்று அவற்றுக்குப் பின்னால் போகிறது ஆனால்  மக்களின் தேவைகளை ஏறெடுத்துப்பார்ப்பதில்லை.

இவ்வாறு கல்முனை உண்ணாவிரதப்போராட்டத்தை நிறைவுசெய்யும் வைபவத்தில் கலந்துகொண்ட முன்னாள்  யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன்  தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்:

கல்முனைப்பிரச்சினை தொடர்பாக நாம் பலதடவைகள் அரசுடன் பேசியிருக்கிறோம். இன்று அமைச்சர்கள் 03 மாதம் அவகாசம்கேட்டுள்ளனர். ஞானசார தேரர் ஒரு மாதம் கேட்டிருக்கிறார். உண்மையில் இந்தகாலஅவகாசம் என்பது அதிகம் என நினைக்கிறேன்.

ஒரே இரவில் அக்கரைப்பற்று பிரதேசசபையை மாநகரசபையாக மாற்ற தன்னை அரபுத்தமிழன் என்றழைக்கும் அதாவுல்லாவினால் முடியுமென்றால் இந்த சிறுபிரச்சினைக்கு மாதக்கணக்கில் அவகாசம் தேவையா? த.தே.கூட்டமைப்பினர் இதனைச்செய்திருக்கவேண்டும்.

மட்டக்களப்பில் நிலத்ததொடர்பற்ற ரீதியில் காத்தான்குடி ஏறாவுர் ஓட்டமாவடி போன்ற பிரதேசங்களை இணைத்து தனி மத்தி கல்வி வலயம் உருவாக்கமுடியுமென்றால் கல்முனைக்கு ஏன் முடியாது?

அசிங்கமான விடயம் என்னவென்றால் தமிழ்மக்கள் தமது தேவையை நிறைவேற்றக்கோரி உயிரைத்துச்சமென மதித்து தியாகம் செய்து உண்ணாவிரதம் செய்தவேளை அதற்கெதிராக முஸ்லிம்களைத் தூண்டி சத்தியாக்கிரகம் செய்தார்களே. அது அசிங்கம்.

அதனால் அவர்கள் சொல்கின்ற செய்தி என்னவென்றால் நீங்களும் நாங்களும் ஒருபோதும் சேர்ந்து வாழமுடியாது என்பதே.

சம்மாந்துறை நிந்தவூர் அட்டாளைச்சேனை போன்ற முஸ்லிம் பிரதேச செயலகப்பகுதிகளில் சிறுபான்மையாக தமிழ்மக்கள் வாழவில்லையா? ஏன் கல்முனை வடக்கில் தமிழ்மக்கள் செயலகத்தில் முஸ்லிம்கள் வாழமுடியாது?

முஸ்லிம் மக்களை இந்த நாட்டு முஸ்லிம் தலைவர்கள் தனிமைப்படுத்திவாழவைக்கும் போக்கில் செயற்படுகிறார்களா?

கிழக்கில்  முஸ்லிம் காங்கிரசிடம் முதலமைச்சர் பதவியை தாரைவார்க்கின்ற கட்டத்தில் பேரம் பேசியிருக்கலாம். வடக்க கிழக்கு இணைப்பிற்கான ஆதரவு கல்முனை தமிழ் பிரதெசசெலயக தரமுயர்த்தல் பற்றியேல்லாம் கூட்டமைப்பு பேசியிருக்கலாம்.

சம்பந்தருடன் ஹக்கீமிற்கு நல்ல உறவு இருக்கிறது. நல்ல நட்பு உள்ளது. ஆனால் சம்பந்தர் ஹக்கீமிடம் தோற்றுப்போய்விட்டார். இன்று கம்பெரலிய பனை சமுர்த்தி என்று அவற்றுக்குப் பின்னால் போகின்ற த.தே.கூட்டமைப்பு, மக்களின் தேவைகளை ஏறெடுத்துப்பார்ப்பதில்லை. சலுகை அரசியலின் பின்னால் சென்றால் எதிர்காலம் இதைவிட மோசமாகும்.

மாந்தை வெலிஓய பிரதேசசெயலகப்பிரிவு அமைக்கப்பட்டது எப்படியென தெரியும். எனவே இந்தக்கல்முனை வடக்கு பிரச்சினையை தீர்க்க ஒரு வார காலம் போதும். கூட்டமைப்பின் 16 எம்பிக்களும் அழுத்தம் கொடுத்து மக்களின் அபிலாசையை பூர்த்தி செய்யுங்கள் என்றார்.