கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த ஹக்கீம் இசைவு ;விரைவில் வர்த்தகமாணி அறிவிப்பு

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை முழுமையான நிர்வாக அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக இயங்கவைக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணக்கம் தெரிவித்துள்ளது.

மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நடத்திய சந்திப்பின்போதே இந்த இணக்கம் காணப்பட்டுள்ளது.

கல்முனை விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்திலுள்ள பிரதமர் அலுவலகத்தில் இன்று பிற்பகல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் முக்கிய சந்திப்பு நடைபெற்றது. உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தனவும் இதில் கலந்துகொண்டார். இதன்போது, கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தப்படும் என பிரதமர் உறுதியளித்தார்.

அதன்பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் பிரதமர் பேச்சு நடத்தினார். இதில் உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்தப் பேச்சில் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை முழுமையான நிர்வாக அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக இயங்கவைக்க மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீம் இணக்கம் தெரிவித்தார்.

இதற்கான முதற்கட்ட அறிவிப்பை உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சு வெளியிடவுள்ளது.

விரைவில் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் முழுமையான – தனியான பிரதேச செயலகமாக இயங்க ஆரம்பிக்கும். அதற்கான வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்படும்.