மூன்று கண்கள் என்ற புலனாய்வுத்துறைக் கட்டமைப்பு உருவாக்கம்

சிறீலங்கா, மாலைதீவு மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து மூன்று கண்கள் என்ற புதிய புலனாய்வுக் கட்டமைப்பு ஒன்றை அமைத்துள்ளதாகவும் அதன் முதலாவது கூட்டம் மூடிய அறைக்குள் சிறீலங்காவில் இந்த மாதத்தின் முதல் வாரம் இடம்பெற்றதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

இந்தியா தலைமையில் சிறீலங்கா மற்றும் மாலைதீவு இணைந்து பிராந்திய புலனாய்வுக்கட்டமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்தக் கட்டமைப்பின் முதலாவது கூட்டம் சிறீலங்காவில் இடம்பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளில் இருந்து வருகை தந்த புலனாய்வு அதிகாரிகள் சிறீலங்காவில் உள்ள மறைவிடம் ஒன்றில் இரண்டு நாட்கள் மூடப்பட்ட அறைக்குள் இரகசிய கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இந்த கூட்டத்தில், பயங்கரவாதத்திற்கு எதிராக இணைந்து செயற்படுவது, அதனை முறியடிப்பது, மற்றும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.

ஓவ்வொரு ஆறு மாதமும் கூட்டங்கள் மேற்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்திப்பின் பின்னர் இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு கோயம்புதூரில் வைத்து முகமட் அசாருதீன் (32) என்ற நபரை கைது செய்துள்ளதாகவும், அவர் சிறீலங்காவில் குண்டுத் தாக்குதலை தலைமை தாங்கிய சஹரானுடன் முகநூல் ஊடாக தொடர்பில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, சிறீலங்கா வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த இணைந்த பிராந்திய புலனாய்வுக்கட்டமைப்பு தொடர்பில் ரணில் விக்கிரமசிங்காவுடன் கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.