ஜிஎஸ்பி வரிச்சலுகை விவகாரம்: மோசமான நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் இலங்கை அரசு – பி.மாணிக்கவாசகம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை தொடர்பான தீர்மானம் ஜனாதிபதி கோத்தபாய அரசாங்கத்தை மோசமானதொரு நெருக்கடிக்குள் தள்ளியிருக்கின்றது. கோவிட் 19 தொற்றுப் பரவல் காரணமாக பொருளாதாரத்தில் வீழ்ச்சியைக் கண்டுள்ள நாட்டின் நிதி நிலைமையை மேலும் மோசமாக்குவதற்கு இந்தத் தீர்மானம் அடிகோலியிருப்பதே இதற்கு முக்கிய காரணம்.

நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் ஜனநாயகம் மற்றும் சர்வதேச மனித உரிமை, அதனுடன் சார்ந்த மனிதாபிமான நியமங்களுக்கு முரணானது. அது மோசமான சர்வாதிகாரப் போக்கைக் கொண்டது என்ற காரணத்தினால், அந்தத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும். இந்தச் சட்டத்திற்குப் பதிலாக சர்வதேச நியதிகளுக்கு உட்பட்ட வகையில் பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கான புதிய சட்டத்தை உருவாக்க வேண்டும் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாடு. எனவே தனது நிலைப்பாட்டிற்கு அமைவாக இலங்கை அரசு நடந்து கொள்ள வேண்டும் என்றும், இல்லையேல் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள ஜிஎஸ்பி சலுகையை நிறுத்த வேண்டி இருக்கும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்தை எச்சரிக்கை செய்துள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் பெருமளவில் அந்நிய செலவாணியிலேயே தங்கியிருக்கின்றது. அதிலும் ஆடை உற்பத்தித் தொழிலே அந்த அந்நிய செலவாணியின் முதுகெலும்பாகத் திகழ்கின்றது. இந்த ஆடை உற்பத்திக்குரிய பிரதான சந்தை வாய்ப்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச் சலுகையிலேயே அரசுக்கு இலாபம் தரத்தக்க வகையில் அமைந்துள்ளது. இலங்கையின் 52 வீதமான அந்நிய செலவாணியை இந்த ஆடைத் தொழிலிலே ஈட்டித் தருகின்றது என அரச பொருளாதாரப் புள்ளிவிபரத் தகவல் ஒன்று கூறுகின்றது.

இதன் காரணமாகத்தான் பயணத் தடை நடைமுறையில் இருக்கின்ற நிலையிலும், நாட்டில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளை சோர்வின்றி செயற்படுத்துவதில் அரசாங்கம் கண்ணும் கருத்துமாக இருந்து செயற்படுகின்றது. ஆடைத் தொழிற்சாலைகளில் பெரும் எண்ணிக்கையில் நெருக்கமாக இருந்து செயலாற்றுகின்ற ஊழியர்கள் மத்தியில் கோவிட் 19 தொற்று அவதானிக்கப்பட்டுள்ள ஆபத்தான நிலைமையிலும், எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் ஆடை உற்பத்தித் தொழிற்துறையின் செயற்பாட்டை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.

ஆடைத் தொழிற்துறையில் சர்வதேச அளவில் போட்டியும் இருக்கத்தான் செய்கின்றது. பங்களாதேஸ் உள்ளிட்ட நாடுகளும் இந்தத் தொழிற் துறையில் ஈடுபட்டிருக்கின்றன. ஆனால் ஜிஎஸ்பி வரிச் சலுகையின் மூலம் இலங்கை இந்தத் தொழிற் துறையில் அதிக இலாபத்தை ஈட்டக் கூடியதாக உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு செயற்படா விட்டால், இந்த ஜிஎஸ்பி வரிச்சலுகை நிறுத்தப்பட்டு விடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இதற்கு முன்னரும் தற்காலிகமாக இந்த வரிச்சலுகை நிறுத்தப்பட்டிருந்தது. அதனை மீண்டும் பெறுவதற்காக முன்னைய அரசாங்கம் பெரும் பாடுபட நேர்ந்திருந்தமை கவனத்திற்கு உரியது.

நாட்டின் மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துவதாக அந்த அரசு உறுதியளித்திருந்ததுடன், அது தொடர்பிலான சில பல நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்தது. ஆனால் 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து அதிகாரத்தைக்  கைப்பற்றிய ராஜபக்சக்கள் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக மனித உரிமை நிலைமைகளைத் தலைகீழாக்கி உள்ளனர்.

தவறு செய்தவர்களுக்குத் தண்டனை விலக்கு விசாரணையாளர்கள் கைது

மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களுக்கான பொறுப்புக் கூறும் விடயத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக மேற்கொள்ளப் பட்டிருந்த நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. அந்தப் பிரேரணைக்கு முன்னைய அரசு இணை அனுசரணை வழங்கி, அதனை நிறைவேற்றுவதாக ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால் ஜனாதிபதி கோத்தபாய அரசு அந்த இணை அனுசரணையில் இருந்து ஒருதலைப் பட்சமாக விலகியது மட்டுமல்லாமல், பொறுப்புக் கூறும் கடப்பாட்டை நிறைவேற்ற முடியாது என்றும் மறுத்துரைத்து விட்டது.

அது மட்டுமல்லாமல், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல் விடயங்களில் ஆதாரபூர்வமான சில வழக்கு விசாரணைகளையும் இடைநிறுத்தி, அவற்றில் குற்றம் சாட்டப்பட்டிருந்த படையினரையும் இந்த அரசாங்கம் விடுதலை செய்து விட்டது. அத்துடன் அந்த முக்கிய வழக்குகளில் நியாயமான முறையில் புலனாய்வு செய்து சம்பந்தப்பட்ட படை அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்த திறமை வாய்ந்த காவல்துறை உயரதிகாரிகள் பக்கச் சார்பாக நடந்து கொண்டார்கள் என்றும், வேண்டுமென்றே படை அதிகாரிகளைப் பழிவாங்கும் நோக்கத்தில் நடந்து கொண்டார்கள் என்றும் குற்றம் சாட்டி, கைது செய்து ஒரு வருட காலம் பிணை அனுமதியின்றித் தடுத்து வைத்து விசாரணைகளையும் நடத்தி உள்ளது.

இந்தக் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிரான நியாயமற்ற அரசாங்கத்தின் நடவடிக்கையை ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானம் சுட்டிக்காட்டிக் கண்டித்திருக்கின்றது.

மனித உரிமை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமை நிலைமைகளைச் சீர்செய்ய வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐ.நா மனித உரிமைப் பேரவை போன்ற அமைப்புக்களின் ஊடாக சர்வதேசம் விடுத்திருந்த கோரிக்கை அரசாங்கத்தினால் உதாசீனம் செய்யப்பட்டிருக்கின்றது. எந்தக் காரணத்தைக் கொண்டும் இராணுவத்தினரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த அனுமதிக்கப் போவதில்லை என்று பிடிவாதத்துடன் குற்றம் செய்தவர்களைத் தண்டனை பெறுவதில் இருந்து அரசு பாதுகாத்து வருகின்றது. இது மனித உரிமைகள் விடயத்தில் குளிக்கப் போய் சேறு பூசிய கதையாகவே முடிந்துள்ளது.

இத்தகையதொரு பின்புலத்தில்தான் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி வரிச்சலுகை பற்றிய இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கின்றது. இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள், நீதியும் நியாயமும் நிறைந்த முறையான சட்டவாட்சியின் சீர்குலைவு, பன்மைத் தன்மை கொண்ட ஜனநாயக நடைமுறைகள் புறந்தள்ளப் பட்டிருக்கும் நிலைமைகள் போன்ற இலங்கையின் உள் விவகாரங்கள் மட்டுமல்லாமல் வேறு காரணங்களும் இருக்கின்றன.

இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் சீன சார்புப் போக்கு அதன் அயலில் மிகப் பெரிய ஜனநாயாக நாடாகிய பாரத தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான சீனாவுடனான கலை, கலாசார, வர்த்தக, பொருளாதார நடவடிக்கைகள் என்பனவும் முக்கிய காரணங்களாக அவதானிக்கப் பட்டிருக்கின்றன.

இலங்கை ஒரு பாரம்பரிய ஜனநாயக நாடாக நோக்கப்படுகின்ற போதிலும், ராஜபக்சக்களின் அதிகாரத்தின் கீழ் இராணுவப் போக்கும் சர்வாதிகார ஆட்சி முறையும் அதன் ஜனநாயக விழுமியங்களைக் குழிதோண்டிப் புதைப்பனவாக அமைந்திருக்கின்றன. சிவில் ஆட்சியில் இராணுவத்தினருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகார பலம் வாய்ந்த முக்கியத்துவம், மத, இன சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறை மற்றும் ஒடுக்கு முறை நடவடிக்கைகள், குடும்ப ஆட்சியை மேம்படுத்துவதற்கான அதிகாரப் போக்கு என்பனவும் சர்வதேசம் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்வதற்கு முக்கிய காரணங்களாக சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் செய்தி

குறிப்பாக விடுதலைப் புலிகளுக்கு எதிரான மூன்று தசாப்தகால யுத்தம் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தமாக சித்தரிக்கப்பட்டு, சர்வதேச ஆதரவுடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. ஆனால் யுத்தம் முடிவுக்கு வந்து பன்னிரண்டு வருடங்களாகின்றன. ஆனால், உள்நாட்டு யுத்தம் ஒன்று மூள்வதற்கான காரணங்கள் சரியான முறையில் இனங் காணப்பட்டு, அரசியல் ரீதியாக அவற்றுக்குத் தீர்வு காணப்படவில்லை.

அரசியல் ரீதியாகத் தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினைகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயங்களாகத் திரித்துக் காட்டப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தேவை போலியாக ஆட்சியாளர்களினால் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. பயங்கரவாதத்தை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு அரசியல் ரீதியான மாற்றுக் கருத்துக்களைக் கொண்டிருப்பவர்களையும், அரசியல் ரீதியான எதிரிகளையும் அடக்கி ஒடுக்குவதற்கே பயங்கரவாதத் தடைச்சட்டம் பெருமளவில் பயன்படுத்தப் படுகின்றது. இந்த வகையிலேயே சிறுபான்மை இன மதத்தைச் சேர்ந்தவராகிய முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் உள்ளிட்டவர்களை அரசு கைது செய்தது.

விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியாக யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் பயங்கரவாதம் தலையெடுக்கவே இல்லை என்று அடித்துக் கூறுகின்ற அரசாங்கமே தமிழர்கள் தமது ஆட்சி உரிமைக்கான கோரிக்கைகளை முன்வைக்கும் போது அவற்றை பயங்கரவாதத்தை உயிர்ப்பிப்பதற்கான முயற்சிகள் என திரித்துக் கூறி, அவற்றை அடக்கி ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த அடாவடித்தனமான போக்கும் சர்வாதிகாரச் செயற்பாடும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும், சர்வதேசத்தினதும் ஜனநாயகக் கொள்கைகள் மற்றும் மனித உரிமை நிலைப்பாட்டிற்கு நேர் விரோதமானவை. இதனை சகித்துக் கொள்ளப் போவதில்லை என்ற இறுக்கமான செய்தியை ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான ஜிஎஸ்பி வரிச்சலுகை தொடர்பிலான தீர்மானம் தெளிவாகச் சுட்டிக்காட்டி இருக்கின்றது.

ஜிஎஸ்பி வரிச் சலுகையைத் தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால், அரசு மனித உரிமை நிலைமைகளை சீராக்குவதுடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும். ஆனால் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் ஆட்சிப் போக்கு இந்த நடவடிக்கைகள் இடம்பெறுவதற்கு இடமில்லை என்பதையே கோடி காட்டி நிற்கின்றன.

அது மட்டுமல்லாமல், சீனச் சார்பு கொள்கைகளிலும் அரசு விடாப்பிடியான போக்கையே கடைப்பிடித்து வருகின்றது. கொழும்புத் துறைமுக நகரத்தை நாட்டின் அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு முரணான வகையில் சீனாவுக்குத் தாரை வார்த்துக் கொடுத்திருக்கின்றது.

இந்தத் துறைமுக நகரத்தின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்ற கனவில் சஞ்சரிக்கின்ற அரசு, சீன ஆதிக்கத்தின் பின்விளைவுகள் குறித்து கவனம் செலுத்தியிருப்பதாகவோ அல்லது அது குறித்து அக்கறை கொண்டிருப்பதாகவோ தெரியவில்லை.

வெறுப்பாக மாறிவரும் மக்களின் அதிருப்தி

இந்த நிலையில் தறி கெட்டதொரு வழியில் செல்கின்ற ஆட்சிப் போக்கின் விளைவாக ஐரோப்பிய ஒன்றியம் ஜிஎஸ்பி வரிச்சலுகையை நிறுத்துமேயானால், பாரிய விளைவுகளுக்கு நாடு முகம் கொடுக்க நேரிடும்.

கோவிட் 19 பெருந் தொற்றுப் பரவி, பல நாடுகளையும் பதகளிக்கச் செய்துள்ள இந்த வேளையில், ஜிஎஸ்பி வரிச்சலுகை நிறுத்தம் காரணமாக ஆடை உற்பத்தித் தொழில் துறை பாதிக்கப்படும் போது, அதில் முதலீடு செய்துள்ள வர்த்தக நிறுவனங்கள், தமது முதலீட்டை இலங்கையில் இருந்து நகர்த்தி வர்த்தக வாய்ப்புள்ள நாடுகளுக்கு மாற்றுகின்ற நிலைமை நிச்சயம் உருவாகும்.

அவ்வாறு முதலீட்டாளர்களை இழந்தால், நாடு பெரும் வேலையில்லாத் திண்டாட்டப் பிரச்சினைக்கு முகம் கொடுக்க நேரிடும். ஏனெனில் இன்று ஆடைத் தொழில் உற்பத்தியிலேயே நாடு கணிசமான தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் கொண்டிருக்கின்றது. இவர்கள் தொழில் இழப்பார்களேயானால், கோவிட் 19 இன் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதார நிலையில் நாடு மிக மோசமான நிலைமைக்குள் தள்ளப்படும் என்பதில் சந்தேகமில்லை.

அது மட்டுமன்றி, அரசாங்கம் தனது போக்கில் மாற்றங்களை ஏற்படுத்தா விட்டால், ஆட்சி மாற்றம் ஒன்றிற்கு முகம் கொடுக்க வேண்டிய புறச்சூழல் ஒன்றும் வலிந்து உருவாகும் என்பதையும் ஆட்சியாளர்கள் கவனத்திற் கொள்ள வேண்டியது அவசியம். ஏற்கனவே கோவிட் 19 ஐக் கட்டுப்படுத்துவதில் தடுமாற்றத்திற்கு உள்ளாகியிருக்கின்ற அரச நடவடிக்கைகளில் சிங்கள மக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளார்கள். இந்த அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்த பௌத்தமதத் தலைவர்களும் அரசு மீது பெரும் அதிருப்தியைக் கொண்டிருக்கின்றார்கள்.

அதிகாரங்களைத் தன்னகத்தே குவித்து வைத்துக் கொண்டுள்ள நிலையிலும், கொரோனா பெருந்தொற்றை சமயோசிதமாக எதிர்கொள்ள முடியாமல் திண்டாடும் அரசு மீதான அதிருப்தி வெறுப்பாக மாறிக் கொண்டிருக்கின்றது என்பதையும் கவனத்தில் எடுத்துச் செயற்பட வேண்டிய நிலைமைக்கு அரசு தள்ளப்பட்டிருக்கின்றது.