மாவட்ட பொது வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் கொண்டு வருவது அரசியலமைப்பை மீறும் செயல்

மாவட்ட பொது வைத்தியசாலைகளை மத்திய சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர எடுக்கப்படும் நடவடிகையானது இலங்கை சனநாயக சோசலிசக்குடியரசின் அரசியலமைப்பை அப்பட்டமாக மீறும் செயல் என முன்னாள் வட மாகாண சுகாதார அமைச்சரும் தமிழரசுக்கட்சியின் பதில் செயலாளருமான மருத்துவர் ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். 

மத்திய அரசின் கீழ் மாவட்ட பொது வைத்தியசாலைகளை பொறுப்பேற்பது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“கடந்த 14/06/2021 ம் திகதியன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளென அரசாங்க தகவல் திணைகளத்தால் அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் ஒன்பது மாவட்ட பொது வைத்தியசாலைகள் மாகாணசபை நிர்வாகத்திடம் இருந்து பலோத்காரமாக பறிக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையானது இலங்கையினுடைய அரசியலமைப்பை அப்பட்டமாக மீறும் செயலாகும். இம்மீறலுக்கு அரசாங்கமானது ஏற்கமுடியாத நகைப்பிற்கிடமான காரணத்தை கூறியுள்ளது.

அதாவது மாவட்டம்தோறும் ஒவ்வொரு வைத்தியசாலைகளை தெரிவுசெய்து மத்தியின் நிர்வாகத்தின்கீழ் கொண்டுவருவதனூடாக தேசிய வைத்தியசாலைகளில் காணப்படும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்தலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறாயின் பலவருடங்களின்முன் மத்திய சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட திரிகோணமலை மாவட்ட பொதுவைத்தியசாலையின் தரத்தை அவர்களால் ஒரு தேசிய வைத்தியசாலையின் தரத்திற்கு கொண்டுவர முடிந்ததா? இல்லை என்பதே உண்மை.

எனவே பொய்யான காரணங்களை கூறி மாகாணங்களிற்கு பகிர்ந்த அதிகாரங்களை பறிப்பதே அவர்களது நோக்கமாக உள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அரசியலமைப்பு ரீதியாக தொடர்சியாக மத்திய அரசின் நிர்வாகத்திலேயே உள்ளது, இவர்கள் கூறுவதைப்போல தெற்கில் உள்ள போதனா வைத்தியசாலையில் உள்ள வசதிகளை இவர்களால் இதுவரை யாழ் போதனா வைத்தியசாலைக்கு ஏற்படுத்திக்கொடுக்க முடிந்ததா என்றால் அதற்கும் இல்லை என்பதே பதிலாக உள்ளது. எனவே மாகாண வைத்தியசாலைகளை தம்வசப்படுத்த அவர்கள் பொய்யான காரணங்களை கூறுவது உறுதிப்படுத்தப்படுகிறது. மாகாண வைத்தியசாலைகளை இதயசுத்தியோடு பலப்படுத்த அவர்கள் விரும்பினால் இப்போது உள்ள சட்ட ஏற்பாடுகளினூடாக அவற்றை மாகாண வைத்தியசாலைகளாக வைத்துக்கொண்டே செய்யலாம்.

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்தின் ஒன்பதாம் அட்டவணை நிரல்-1 இன் 11.1 இன் பிரகாரம் போதனா வைத்தியசாலைகள் மற்றும் விசேட நோக்கங்களிற்காக தாபிக்கப்பட்ட வைத்தியசாலைகள் தவிர்ந்த பொது வைத்தியசாலைகள் மற்றும் ஏனைய அனைத்து வைத்தியசாலைகளும் மாகாணசபைகளின் ஆழுகைக்குட்பட்டவை. அதனடிப்படையில் வடக்கு மாகாணத்தின் முதலாவது மாகாணசபைனால் 12/01/2016 அன்று அங்கீகரிக்கப்பட்ட 2015ம் ஆண்டின் 1ம் இலக்க சுகாதார சேவைகள் நியதிச்சட்டத்தின் அட்டவணை 1 இல் குறிப்பிடப்பட்டவாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தவிர்ந்த ஏனைய அனைத்து வைத்தியசாலைகளும் மாகாண சுகாதார அமைச்சிற்கு உட்பட்டவை என 2016/02/23 ம் திகதிய அதிவிசேட அரச வர்த்தமானியூடாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மாகாணசபைகள் எவையுமே இல்லாத நிலையில் அரசியலமைப்பின் 13ம் திருத்தச்சட்டதினூடாக மாகாண சபைகளிற்கு பகிரப்பட்ட அதிகாரங்களை மீண்டும் பறித்தெடுப்பதென்பது முற்றிலும் சட்டவிரோதமானது.

இவ்வாறே மகிந்த ராஜபக்ஸ அவைகளது ஆட்சிக்காலத்தில் “திவிநெகும” சட்டமூலமூடாக மாகாண விவசாய அமைச்சிற்கு பகிரப்பட்ட அதிகாரங்களை பறித்ததும் தற்போதைய ஆட்சியாளர்கள் ஆயிரம் தேசியப்பாடசாலைகளை உருவாக்குதல் எனும் நிகழ்ச்சித்திட்டத்தினூடாக மாகாணங்களிற்கு பகிரப்பட்ட அதிகாரங்களை பறிக்க முற்பட்டிருப்பதும் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதனூடாக அதிகாரங்களை பகிர்ந்து இந்நாட்டில் வாழும் அனைத்தினமக்களும் சமானமாக வாழலாம் என்ற கருத்தியலுக்கு தற்போதைய அரசு முரணாக செயற்படுகிறது என்பதற்கு சான்று என்பது திண்ணம்” என்றார்.