மலையகப் பகுதிகளில் குடும்ப வறுமை காரணமாகவே சிறுவர் தொழிலாளர்களாகின்றனர் – திருமதி கிருஷ்ணன் யோகேஸ்வரி

ஜூன் 12ஆம் திகதி சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது. இதனையொட்டி இலக்கு மின்னிதழ் 134  இல் வெளியான சிறப்பு நேர்காணல்

ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டு, ஆண்டு தோறும் ஜூன் மாதம் 12ஆம் திகதி, சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. சிறுவர் தொழிலாளர் முறை முற்றாக ஒழிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதே இந்தத் தினத்தின் நோக்கமாகும்.

அந்த வகையில், இலங்கையில் வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் ஏராளமான சிறுவர்கள் தொழிலாளர்களாக உள்ளனர். இலங்கையில் சிறுவர்கள் தொழிலாளர்களாக மாறுவதற்கு  பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

அதில் வடக்கு கிழக்கு பகுதிகளில் ஒரே விதமான காரணங்களும், மலையகப் பகுதிகளில் வேறு  விதமான காரணங்களும் கூறப்பட்டாலும், அடிப்படைத் தன்மை என்பது ‘வறுமை’ என்ற ஒன்றாகத்தான் இருக்கின்றது.

சிறுவர்கள் தொழிலாளர்களாக மாறுவது பற்றி கண்டி மாவட்டத்தின் உழைக்கும் பெண்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் திருமதி கிருஷ்ணன் யோகேஸ்வரி அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது,

கேள்வி: மலையகத்தில் சிறுவர்கள் தொழிலாளர்களாகும் சந்தர்ப்பங்களுக்கான காரணங்கள் எவை எனக் கருதுகிறீர்கள்?

பதில்-: எப்பொழுதும் சிறுவர்கள் எவரும் தாங்களாக விரும்பி சிறுவர் தொழிலாளர்களாக வரவில்லை. அவர்களின் குடும்ப வறுமை காரணமாக சிறுவர் தொழிலாளர்களாக மாறுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளார்கள். இதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இன்று மலையக சமூகம் என்று சொல்லும் பொழுது அதில் அதிகமானோர் தொழிலாளர் வர்க்கத்தைச் சார்ந்தவர்களாக இருக்கின்றனர். அவர்கள் தோட்டத் தொழிலாளர்களாகவும், இளம் தலைமுறையினர் ஆடை தொழிற்சாலையிலும், சிலர் தோட்டப் பகுதிகளில் இருந்து இடம் பெயர்ந்து  புலம்பெயர் தொழிலாளர்களாகவும் வேலை செய்கின்றார்கள்.

மேலும் ஒரு பிரிவினர் உள்ளூரிலேயே இடம் பெயர்ந்து கடைகள், தொழிற்சாலைகள் என்று பரந்து விரிந்து அனைத்து விதமான தொழில்களையும் செய்து வருகின்றார்கள். இவர்கள் அனைவரும் நாட்டின் தேசிய பொருளாதார வருமானத்திற்கு முக்கிய பங்கு வகித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும்  தற்போதைய பொருளாதார விலைவாசி உயர்வினால் குடும்பத்தைக் கொண்டு நடத்த முடியாத சூழலால்  இவர்களின் குடும்பங்களில் வறுமை நிரந்தரமாகவே காணப்படுகின்றது. இதன் காரணமாகத் தான் இன்று மலையகத்தில்  அதிகமான சிறுவர்கள் அவர்களது கல்வியைத் தொடர முடியாமல்  சிறுவர் தொழிலாளர்களாக மாற்றம் பெற்றுள்ளார்கள்.

நுவரேலியா பிரதேசத்தை எடுத்துக் கொண்டால், சுற்றுலாப் பயணிகளுடன் தொடர்புடைய வேலையில்  சிறுவர்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றார்கள்.

சிறுவர் தொழிலாளர்களாக பயன்படுத்தப்படும் இடங்களான கடைகள், வீட்டு வேலைகள், வீதியோர விற்பனை நிலையம் போன்ற அனைத்து இடங்களிலும் ஆண் பெண் சிறுவர்கள் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப் படுகின்றார்கள்.

கேள்வி-: சுற்றுலாப் பயணிகள் மூலமாகவும், தொழில் செய்யும் இடங்களிலும் சிறுவர், சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கப் படுவது பற்றிய உங்கள் கருத்து என்ன?

மலையகச் சிறுமியர்களின் நிலை மிகவும் பாதுகாப்பற்றதாகவே உள்ளது. காரணம் தொடர் வீடுகளில் வசிக்கும் இச்சிறுமியர்களின் பெற்றோர்கள் கொழுந்து பறிக்கும் தொழிலில் ஈடுபடுபவர்களாக உள்ளனர்.

காலையில் 7.30 மணிக்கு வேலைக்குச் சென்றால், மாலை 5.30 மணியளவிலேயே வீடு திரும்புகின்றனர். இதற்கிடையில் பாடசாலைக் கல்வி இடைநிறுத்தப்பட்ட பெண் பிள்ளைகளே வீட்டு வேலைகள் செய்தல், தமது சகோதர சகோதரிகளைப் பராமரித்தல் போன்ற வேலைகளைச் செய்கின்றார்கள்.

மேலும் தாய் வெளிநாடு செல்வதாலும், பெண் பிள்ளைகள் அதிகமாகப்  பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகின்றனர்.   இது மலையகத்தில் சாதாரணமாக நிகழும் ஒரு சம்பவம். சில சந்தர்ப்பங்களில் ஆண் பிள்ளைகளும் பாலியல் சீண்டல்கள், பாலியல் வன்முறை மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்கள் சிறுவர்கள்  மீதான துஷ்பிரயோகங்கள், பாலியல் வன்புணர்வுகள், சிறு பிள்ளைகளை வேலைக்கமர்த்துதல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கான தண்டனைகளை கடுமையாக்க வேண்டும். அது மட்டுமன்றிப் பெண் பிள்ளைகளை கௌரவமாகவும், நன்மதிப்புடனுடம் மதிக்கும் நிலை உருவாக வேண்டும்.

கேள்வி-: புலம்பெயர் தமிழர்கள் தமிழர் தாயகப் பகுதிகளிலும், மலையகத்திலும் தொழிலாளச் சிறுவர் பிரச்சினையை மாற்ற என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

பதில் – சிறுவர் தொழிலாளர்கள் உருவாகுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அதில் குறிப்பிட்டுக் கூறும்படியாக உள்ளவை மலையகப் பகுதிகளில் காணப்படுகிற, அவர்களுடைய  லயன் என்று சொல்லப்படுகின்ற தொடர் குடியிருப்புகள்.

அந்தக் குடியிருப்புகளுக்குள் ஒரு குடும்பத்தில் அனைவரும் வசிக்கக் கூடிய அளவு இடவசதி இல்லை.  இதனால் அவர்கள் வீட்டிலிருந்து வெளியில் வந்து சிறுவர் தொழிலாளர்களாக மாறுகின்றனர்.

இவற்றை மாற்றம் செய்வதற்குப் புலம்பெயர் தமிழர்கள் வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் வருமானம் குறைந்த சிறுவர்-சிறுமிகள் வசிக்கும் குடும்பங்களை அடையாளம் கண்டு, கற்றல் செயற்பாடுகளுக்கு  தேவையான உதவிகளை செய்வதோடு, கல்வியின் பயன் தொடர்பான அதிகூடிய விழிப்புணர்வுச் செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டும்.

இனிவரும் காலங்களில் தமிழர்களின் வெற்றியை நோக்கிய எதிர்காலம் என்பது கல்வியிலேயே தங்கியுள்ளது என்பதனால், சிறுவர்கள் பெண்கள் தொடர்பான அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். சிறுவர் நலன்கருதி  அவர்களது பெற்றோர்களின் உழைப்பிற்கு உரிய ஊதியம் கிடைக்கும் வகையில் புலம்பெயர் தமிழர்கள் தங்களால் முடிந்தளவு குரல் கொடுத்து உதவிகளைச் செய்ய வேண்டும்

அவ்வாறு குடும்பங்களிலுள்ள வறுமைகள் இல்லாமல்  செய்யப்படும் பட்சத்தில் நிச்சயமாக சிறுவர்  தொழிலாளர்கள் உருவாகாமல் தடுக்க முடியும்.