கோவிட் அனர்த்தம் – பொருளாதார நெருக்கடியில் வடக்கு கிழக்கு மக்கள்

தற்போது இலங்கையில் உக்கிரமடைந்து வரும் கோவிட்-19 நெருக்கடி காரணமாக, அங்கு பயணத் தடைகளை ஏற்படுத்தி அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அன்றாடம் உழைத்து வாழும் தமிழ் மக்களை மிகுந்த நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதேச சபைகள் ஊடாக இலங்கை அரசு மேற்கொண்டு வரும் உதவித் திட்டங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையான மக்களை சென்றடைகின்றது. சமுர்த்தி நலத் திட்டங்கள் போன்ற உதவிகளை பெறாது தற்போது பொருளாதார வசதியின்றி தவிக்கும் மக்களை இந்த உதவித் திட்டங்கள் சென்றடைவதில்லை.

நாடாளுமன்ற அல்லது மாகாண சபை உறுப்பினர்கள் போன்ற தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் ஊடாக மேற்கொள்ளப்படாத, புலம் பெயர் தமிழ் மக்களின் உதவிகளை இலங்கை அரசு தனது அரச அலுவலகங்கள் மூலம் வழங்குவதால், அது அரச உதவிகளாக கருதப்படுவதுடன், பாதிக்கப்பட்ட எல்லா மக்களையும் சென்றடைவது இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய நிலையில் தமிழ் மக்களை இந்த நெருக்கடியில் இருந்து காப்பாற்றும் செயல் திட்டம் ஒன்றை தாயகத்து தமிழ் அரசியல் கட்சிகளுடன் இணைந்து புலம்பெயர் அமைப்புக்கள் முன்னெடுக்க வேண்டும் என்பதுடன், அதனை இலங்கை அரசு தனது அரசியல் நலன்களுக்காக பயன்படுத்துவதையும் அனுமதிக்கக் கூடாது என தமிழ் அவதானி ஒருவர் தெரிவித்துள்ளார்.