மக்களுக்குச் சிக்கலை ஏற்படுத்தாது பொறுப்புடன் செயற்படவேண்டும் – புதிய சனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி

“கோவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றானது, இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்புச் செயலணியின் தலைவரான இராணுவத் தளபதியின் முடிவுகளையும், அறிவிப்புகளையும் மீறி வேகமாகப் பரவி வருகிறது. தொற்று மரணங்கள் இரண்டாயிரத்தைத் தாண்டியுள்ளன. ஒன்றுபட்டு தீர்மானங்களையும் முடிவுகளையும் எடுக்க வேண்டியவர்களான ஆளும் தரப்பினரும், சுகாதாரத் துறையினரும் ஆளுக்காள் போட்டி போட்டுக் கொண்டு, முன்னுக்குப் பின் முரணான புள்ளி விபரங்களையும், அறிவிப்புகளையும் வெளியிட்டு மக்களை அச்சுறுத்தியும், அவலப்படுத்தியும் வருகின்றனர். கொரோனாத் தொற்றினைக் கட்டுப்படுத்தவோ தடுக்கவோ முடியாதவர்களாக இவர்கள் உள்ளனர்” எனப் புதிய சனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மத்திய அரசியல் குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சி. கா. செந்திவேல் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

“நாட்டு மக்களுக்குத் தேவையான தடுப்பூசிகளைப் பெறவோ, அவற்றைப் பாகுபாடின்றி அனைத்துப் பிரதேச மக்களுக்கும் விநியோகித்துப் பயன்படுத்தவோ முடியாத கையறு நிலையிலேயே ஆட்சியாளர்கள் இருந்து வருகின்றனர். ஆனால், கொரோனாத் தொற்றின் மறைவில், ஆட்சியில் இருப்போர் தமக்குத் தேவையானவற்றை அரசியல் ரீதியாகவும், பொருளாதார அடிப்படையிலும் மக்களுக்கு விரோதமாக முன்னெடுத்து வருகின்றனர்.

நாட்டின் ஏகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் அன்றாட உணவுப் பொருட்களினதும், அத்தியாவசியப் பாவனைப் பொருட்களினதும் விலைகள் தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளன. அவற்றில் மேலும் விலை உயர்வுகளை ஏற்படுத்தும் வகையில், அரசினால் எரிபொருள் விலை அதிகரிப்பு கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறு மக்களை வாட்டி வதைக்கும் இன்றைய ஆட்சியாளர்களான ராஜபக்ச சகோதர்கள், முதலாளிகள், உயர் வர்க்கத்தினர் மற்றும் வசதி படைத்தவர்களுக்கு ஏற்றவாறு தீர்மானங்களையும், முடிவுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் நாட்டின் நில, நீர் வளங்கள் விற்கப்படும் செயல்கள் சத்தமின்றி கொரோனாத் திரைக்குப் பின்னால் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றின் மத்தியில் பாராளுமன்ற உறுப்பினர்களின் பயன்பாட்டுக்கென, முன்னூறு வரையான ஒவ்வொன்றும் ஐம்பது மில்லியன் பெறுமதியான சொகுசு வாகனங்களின் இறக்குமதிக்குரிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவை எதுவும் இந்நாட்டின் உழைக்கும் மக்களுக்கானவை அல்ல என்பதை மக்கள் உணர்ந்து வருகின்றனர். தொடரும் இம் மக்கள் விரோதச் செயற்பாடுகளை எமது புதிய சனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வன்மையாகக் கண்டிப்பதுடன், உடன் அவற்றை நிறுத்துமாறும் கோருகின்றது.

மேலும், கடந்த வாரத்திற்கு முந்திய நாட்களில் எம்.வி.எக்ஸ் – பிரஸ் பேர்ள் கப்பலை முன் யோசனையின்றியும், ஆபத்தை உணராமலும், குறுக்கு வழியில் லாபம் பெறலாம் எனும் நோக்கிலும் கொழும்புத் துறைமுகத்திற்குள் வரவழைத்து, அனர்த்தத்தையும், ஆபத்தையும் தேடிக்கொண்ட அரசின் செயல் கண்டனத்திற்கு உரியதாகும். இக் கப்பலில் ஏற்பட்ட விபத்தானது நமது கடற்பரப்பில் பிளாஸ்ரிக் மூலக்கூறுகளையும், ஆபத்தான இராசயனக் கழிவுகளையும், எண்ணைக் கசிவினையயும் ஏற்படுத்தியுள்ளது.

இதனால், கடல் வாழ் உயிரினங்களுக்கும் கடல் வளங்களுக்கும் பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ளன. இத்தகைய கடல்வளப் பாதிப்புகளால் மீன்கள் உட்பட கடல் உயிரினங்களும் கடல் உணவுகளும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நச்சுதன்மை பரவும் அபாயமும் தோன்றியுள்ளது. நாட்டைச் சூழவுள்ள கடலில் தமது கடற் தொழிலைச் செய்து வரும் பல இலட்சம் மீனவர்கள் மிகப் பெரும் வாழ்வாதாரப் பிரச்சினையை எதிர்நோக்கி நிற்கின்றனர். இவற்றுக்கு இராணுவமயமாகி வரும் இன்றைய ராஜபக்க்சக்கள் தலைமையிலான அரசாங்கம் என்ன தீர்வினைத் தரப் போகிறது? என்பதே மக்கள் கேட்கும் மிகவும் முக்கியமான கேள்வியாகும்.

இவை மட்டுமன்றி, மக்களுக்கு எதிராக இன்றைய அரசாங்கம் மேலும் திட்டங்களையும், சட்டங்களையும், முடிவுகளையும் திணித்து வருவதற்கே தயாராகிறது. இவற்றை எதிர்த்து நிற்க வேண்டியது அனைத்து உழைக்கும் மக்களுக்கும் அவசியமானதாகும். அவற்றுக்கான கொள்கை, வேலைத் திட்டத்தினை முன்னெடுக்க அனைத்து இடதுசாரிய, சனநாயக, முற்போக்கு சக்திகளும் பொது வேலைத் திட்டத்தின் கீழ் ஒன்றுபடல் வேண்டும் என்பதையும் எமது கட்சி இவ்வேளையில் சுட்டிக் காட்டுகிறது” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.