பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் -ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தீர்மானம்

126
232 Views

இலங்கைக்கான ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை தற்காலிகமாக விலக்கிக்கொள்வதற்கான போதிய காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து ஆராயுமாறு கோரும் தீர்மானமொன்றை ஐரோப்பிய நாடாளுமன்றம் நேற்று நிறைவேற்றியுள்ளது. இலங்கை பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவேண்டும் எனவும் ஐரோப்பிய நாடாளுமன்றம் கோரியுள்ளது.

ஐரோப்பிய நாடாளுமன்றம் இலங்கை உட்பட மூன்று நாடுகள் குறித்த தீர்மானத்தினை நிறைவேற்றியுள்ளது. ஐக்கிய நாடுகளின் சமீபத்தைய இலங்கை குறித்த அறிக்கை தெரிவித்தது போல இலங்கை மீண்டும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் நிலைக்கு சென்றுகொண்டிருப்பது குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றம் கவலையை வெளியிடுவதாக தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கடும் எதிர்ப்பை வெளியிடுகின்றனர் எனவும் தீர்மானம் தெரிவித்துள்ளது. பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவது சித்திரவதைகள் பாலியல் துஸ்பிரயோகம் பலவந்தமாக வாக்குமூலம் பெறுதல் ஆகியவற்றிற்கு காரணமாக அமைந்துள்ளது எனவும் தீர்மானம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடுவது மறுஆய்வு செய்வது குறித்த தங்களது வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவேண்டும் சர்வதேச நடைமுறைகளை பின்பற்றும் புதிய சட்டத்தை உருவாக்கவேண்டும் எனவும் தீர்மானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவோம் மனித உரிமைகள் தொடர்பான 27சர்வதேச பிரகடனங்களை நடைமுறைப்படுத்துவோம் என்ற வாக்குறுதியின் அடிப்படையிலேயே 2017 இல் ஜிஎஸ்பி வரிச்சலுகையை மீளப்பெற்றுக்கொண்டது என தீர்மானம சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை தனது மனித உரிமைகடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு ஜிஎஸ்பி வரிச்சலுகையை ஒரு செல்வாக்கு செலுத்தும் விடயமாக ஐரோப்பிய ஆணைக்குழுவும்இஐரோப்பிய வெளிநாட்டு செயற்பாட்டு சேவையும் பயன்படுத்தவேண்டும் என நாடாளுமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இறுதிமுயற்சியாக இலங்கைக்கான ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை தற்காலிகமாக விலக்கிக்கொள்ள முடியுமா என்பது குறித்து ஆராயுமாறும் தீர்மானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here