30 நாட்கள் விடுப்பு வழங்கும்படி நளினி தமிழக முதல்வருக்கு மனு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி, ஆயுள் தண்டனைக் கைதியாக வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, தனக்கு 30 நாட்கள் விடுப்பு  வழங்கக் கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனு அனுப்பியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேரில் நளினி வேலூர் பெண்கள் சிறையிலும், அவரது கணவர் முருகன் வேலூர் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். சுமார் 30 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் இவர்களை விடுதலை செய்வது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் குடியரசுத் தலைவருக்கு கடிதமும் எழுதியுள்ளார். இந்நிலையில், சென்னையிலுள்ள நளினியின் தாயார் பத்மா(81) உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. அவரை உடனிருந்து கவனிக்கவும், கடந்தாண்டு முருகனின் தந்தை உயிரிழந்த நிலையில் அவருக்கு சடங்குகள் செய்யவும் தனக்கு 30 நாட்கள் விடுப்பு வழங்க  வேண்டும் எனக்கோரி நளினி வேலூர் சிறைத்துறை டிஐஜி, சிறை கண்காணிப்பாளர் மூலமாக தமிழக முதல்வர், தலைமைச் செயலர், உள்துறை செயலர் ஆகியோருக்கு புதன் கிழமை(இன்று) மனு அனுப்பியுள்ளார்.

ஏற்கெனவே 2018ஆம் ஆண்டு நளினிக்கு அவரது மகள் திருமண ஏற்பாடுகள் செய்வதற்காக தொடர்ந்து 45 நாட்கள் விடுப்பு வழங்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் தனக்கு விடுப்ப வழங்கக் கோரி அவர் மனு அளித்துள்ளார்.

இதேபோல், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு அவரது தாயார் அப்புதம்மாள் விடுத்த கோரிக்கையை ஏற்று 30 நாட்கள் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.