அதிகரிக்கும் கொரோனா – முற்றாக முடங்கியது மட்டக்களப்பு, திருகோணமலை

51
70 Views

மட்டக்களப்பு மாவட்டத்தில் பயணத்தடைகளை மீறிச்செயற்படுவோரை கண்டறியும் வகையில் சிறப்பு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நாடளாவிய ரீதியில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றின் வேகத்தினை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று இரவு முதல் நாடளாவிய ரீதியில் பயணத்தடை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டம் முற்றாக முடங்கியுள்ளதுடன் மக்கள் நடமாட்டம் இல்லாததை காணமுடிகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்திற்கான எந்த போக்குவரத்துகளும் நடைபெறாத நிலையில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ள நிலையினை காணமுடிகின்றது.

மருந்தகங்கள் மட்டும் இயங்கும் நிலையில் மக்கள் வருகையில்லாத காரணத்தினால் வெறிச்சோடிக்காணப்படுகின்றது.

பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக அதனை மீறுவோரை கண்டறியும் வகையில் படையினரும் காவல்துறையினர் இணைந்து விசேட வீதிச்சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

அத்தியாவசிய தேவை தவிர்ந்தவகையில் நடமாடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்திலும் மூன்றாவது அலையின் தாக்கம் அதிகமாகவுள்ள காரணத்தினால் மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுத்துவந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், திருகோணமலை நகரில் அனைத்து வர்த்தகநிலையங்களும் மூடப்பட்டு,  மத்திய பேரூந்து நிலையம் உட்பட மக்கள் நடமாட்டமின்றி திருகோணமலை நகர் வெறிச்சோடிக் காணப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here