இருண்ட யுகத்தை நோக்கி நகரும் ஊடக சுதந்திரமும், கருத்து வெளிப்பாட்டு உரிமையும் – பி.மாணிக்கவாசகம்

ஊடக சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை. அது ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாகும். எங்கு ஊடக சுதந்திரம் ஒடுக்கப்படுகின்றதோ அங்கு அராஜகம் தலைதூக்கும்; அநியாயங்களே கோலோச்சும். இதற்கு உலக வரலாறுகள் அழிக்க முடியாத சான்றுகளாகத் திகழ்கின்றன.

ஜனநாயகம் நிலவுவதாகக் கூறப்படுகின்ற நாடுகளில் தொடர்ச்சியாக அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அரசியல்வாதிகள் அடிப்படை உரிமைகளையும், மனித உரிமைகளையும், ஜனநாயக உரிமைகளையும் மதிப்பதில்லை. அவற்றைப் பேணுவதில் உரிய கவனம் செலுத்துவதுமில்லை.

ஆனால் ஊடகவியலாளர்களையும், ஊடக நிறுவனங்களையும் தங்கள் கைகளுக்குள் வைத்துக் கொள்வதற்காகவும், தமது அதிகார எல்லைக்குள் பொத்திப் பேணிக் கொள்வதற்காகவும் பல்வேறு தந்திரோபாய நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

ஊடகவியலாளர்களுக்கு சலுகைகளை வழங்குவதாகவும், உரிமைகளை வழங்குவதாகவும் கூறி அவர்கள் தொடர்பிலான பல்வேறு வேலைத் திட்டங்களைத் தொடங்குவார்கள். ஆனால் அந்த வேலைத்திட்டங்களின் உள்ளே வஞ்சனை நிறைந்த நிகழ்ச்சித் திட்டங்களை அவர்கள் வகுத்திருப்பார்கள்.

அவர்களுடைய திட்டங்களை மேலோட்டமாக நோக்கும் போது, ஊடக சுதந்திரத்துக்கு உரிய மதிப்பளித்து அவர்கள் செயற்படுவதாகவே தோன்றும். ஆனால் கூர்ந்து கவனித்தாலே அவர்களுடைய வஞ்சனையான முகம்களைக் காண முடியும்.

ஊடக சுதந்திரம் பேணப்படுவதாகவும், ஜனநாயக உரிமைகள் மதிக்கப்படுவதாகவும் அவர்கள் பிரசாரங்களை முன்னெடுத்திருப்பார்கள். அதேவேளை தங்களுடைய அதிகாரப் பிடியில் அகப்பட்டுள்ள ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் பயன்படுத்தி நாட்டு மக்கள் மீது கருத்துத் திணிப்பை மேற்கொள்வார்கள். உண்மைகளை மறைத்து திரித்து தமக்கு ஏற்ற வகையில் தங்களுக்கு நன்மையளிக்கும் வகையிலான கருத்துக்களை மக்கள் மத்தியில் அவர்கள் மிகவும் நுட்பமான முறையில் பரவச் செய்வார்கள்.

உண்மைகள் மறைக்கப்படுவதையும், உண்மைகள் மறுக்கப்படுவதையும் நாட்டு மக்கள் உணரமுடியாத வகையில் தமது அரசியல் தன்னலம் கருதிய பிரசாரங்களை இலாவகமாக முன்னெடுப்பார்கள். கருத்துத் திணிப்பதையும், உண்மைகளை மறைப்பதையும் ஆட்சியாளர்கள் தமது ஆட்சி அதிகாரச் செயற்பாட்டின் முக்கிய அம்சமாகக் கொண்டிருப்பார்கள்.

ஆட்சியாளர்களுக்கு சாதகமான முறையில் கருத்துக்கள் தம்மீது திணிக்கப்படுவதையும், உண்மையான ஆட்சி மற்றும் நாட்டு நிலைமைகள் தங்களிடம் இருந்து முழுமையாக மறைக்கப்படுவதையும் நாட்டு மக்கள் அறியாதவாறு பார்த்துக் கொள்வார்கள்.

இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் நாட்டு மக்கள் உண்மைத் தகவல்களை அறிகின்ற உரிமையை இழந்து விடுவார்கள். ஏமாற்று அரசியல் ஆட்சியின் மூலம் அவர்களுடைய நியாயமான உரிமைகள் மறுக்கப்படுவதையும் அவர்கள் உணர முடியாமற் போய்விடும். அதற்காக உண்மைகளைத் தேடிக் கண்டறிந்து வெளிக் கொண்டுவர முயற்சிக்கின்ற ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் அவர்கள் தமது அதிகார பலத்தைப் பயன்படுத்தி அடக்கி விடுவார்கள். தேவையாயின் அவர்களை அழிப்பதற்கும் அவர்கள் தயங்க மாட்டார்கள்.

இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் பிழையாக வழிநடத்தப்படுகின்ற மக்கள் ஆட்சியாளர்களை நல்லவர்களாகவும், அவர்களுடைய ஆக்கிரமிப்பு ஆட்சியை நல்லாட்சியாகவும் கருதி அவர்களுக்குப் பின்னால் அணி திரண்டிருப்பார்கள். அவர்களுடைய ஆட்சியை நல்லாட்சியாகக் கருதி அவர்களுக்குத் தங்களுடைய ஆதரவை வழங்குவார்கள்.

இத்தகைய ஆட்சிப் போக்கையும் ஊடக சுதந்திர நிலைமையையும் சிறீலங்காவில் நிதர்சனமாகக் காண முடிகின்றது. இந்த வருடத்திற்கான சர்வதேச ஊடக சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மகிந்த ராஜபக்ச நாட்டு மக்களுக்கு விடுத்திருந்த செய்தியில் “நாங்கள் ஆட்சியில் இருந்த போதெல்லாம்  ஊடக சுதந்திரத்தைப் பாதுகாத்தோம். தகவல் அறியும் உரிமையையும் ஊடக சுதந்திரத்தைப் பேணுவதற்கும் நடவடிக்கை எடுத்தோம் என்பதை உங்களுக்கு நினைவூட்டுகின்றேன்” என்று தெரிவித்திருந்தார்.

“இந்த நாட்டின் ஊடக சுதந்திரம் கடுமையாகப் பாதிக்கப்பட்ட விசித்திரமான காலங்களை நாம் நினைவுபடுத்தத் தேவையில்லை. நாம் ஆட்சியில் இருந்த போதெல்லாம் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாத்தோம். முழு உலகமும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் ‘தகவல்கள் பொது மக்களின் நலனுக்கானது’ எனும் தொனிப்பொருளில் சர்வதேச ஊடக சுதந்திர தினம் கொண்டாடப்படுவது மிகப் பொருத்தமானதாகும்” என்றும் அவர் கூறியிருந்தார்.

‘தகவல்கள் பொதுமக்களின் நலனுக்கானது’ என்ற சர்வதேச தொனிப்பொருளை எடுத்துக் கூறியிருந்த அவருடைய அந்த ஊடக சுதந்திர தினத்துக்கான செய்தியின் மை காய்வதற்கு முன்னதாகவே ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்று சட்டமா அதிபர் திணைக்களம் யாழ். நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. இதனையடுத்து அந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த 6 சந்தேக நபர்களையும் விடுவிப்பதற்கு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

unnamed 3 இருண்ட யுகத்தை நோக்கி நகரும் ஊடக சுதந்திரமும், கருத்து வெளிப்பாட்டு உரிமையும் - பி.மாணிக்கவாசகம்

கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாக சட்டமா அதிபரின் ஆலோசனைகளுக்காகக் காத்துக் கிடந்த இந்தக் கொலை வழக்கில் குற்றவியல் நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்று சிறீலங்காவின் சட்டத்துறை அறிவித்திருப்பது ஊடக சுதந்திரத்தின் மீது இந்த அரசு எந்த அளவுக்கு அக்கறை கொண்டிருக்கின்றது என்பதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

கடந்த 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி இரவு ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்த வேளை, யாழ். கச்சேரியடியின் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த பகுதிக்குள்ளே தனது வீட்டில் செய்திக் கட்டுரை எழுதிக் கொண்டிருந்த நிமலராஜன் அவருடைய வீட்டிற்குள் அத்துமீறிப் பிரவேசித்த ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது அவர் எழுதிக் கொண்டிருந்த பேனையும் அவர் எழுதியிருந்த வரிகளும் குருதியில் தோய்ந்தன.

அவரைச் சுட்டுக் கொன்றவர்கள் அத்துடன் நிற்கவில்லை. அவருடைய வீட்டின் உள்ளே கைக்குண்டு ஒன்றை வீசி வெடிக்கச் செய்துவிட்டுச் சென்றார்கள். இந்தக் குண்டு வெடிப்பினால் நிமலராஜனின் தாய், தந்தை, மனைவி மற்றும் மருமகன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

கொலையாளிகள் நிமலராஜனின் வீட்டிற்கு வருவதற்காகப் பயன்படுத்தியதாகக் கருதப்பட்ட துவிச்சக்கர வண்டியொன்றும் அவருடைய வீட்டருகில் கண்டு பிடிக்கப்பட்டது. தொடர்ந்து இடம்பெற்ற விசாரணைகளில் 6 பேர் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர். இவர்களுக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்த கொலை வழக்கு விசாரணைகள் இழுபறி நிலையில் இருந்த நிலையிலேயே கிடப்பில் போடப்பட்டிருந்தது. பதினைந்து வருடங்களின் பின்னர் நாட்டின் சட்டமா அதிபர் திணைக்களம் இந்த வழக்கில் குற்றவியல் நடவடிக்கையைத் தொடர முடியாது என்று தெரிவித்துள்ளதுடன், சந்தேக நபர்களை விடுவித்து 14 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவல் துறையின் சட்டப்பிரிவினருக்கு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

நிமலராஜன் மட்டுமல்ல. இந்த நாட்டின் ஊடகத் துறைக்கும் நீதித் துறைக்கும் இருண்ட யுகமாகக் கருதப்பட்ட ராஜபக்சக்களின் ஆட்சிக் காலத்திலும் அதற்கு முன்னரும் இடம்பெற்ற முக்கிய தமிழ் ஊடகவியலாளர்களான தராக்கி என்ற தர்மரத்தினம் சிவராம், நடேசன் உள்ளிட்டவர்களின் படுகொலைகள் தொடர்பிலான நீதி விசாரணைகளும் கிடப்பில் போடப்பட்ட நிலையிலேயே இருக்கின்றன.

Capture 4 இருண்ட யுகத்தை நோக்கி நகரும் ஊடக சுதந்திரமும், கருத்து வெளிப்பாட்டு உரிமையும் - பி.மாணிக்கவாசகம்

ஊடக அடக்குமுறை தாண்டவமாடிய காரணத்தினால் நாற்பதுக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டும் காணாமல் போயும் உள்ளார்கள். ஊடகவியாளர்கள் மீதான அச்சுறுத்தலினால் பல ஊடகவியலாளர்கள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளார்கள். அவர்கள் மீண்டும் நாடு திரும்ப முடியாத நிலைமையே நிலவுகின்றது.

குறிப்பாக 2015 ஆம் ஆண்டு தேர்தல்களில் தோல்வியைத் தழுவி பின்னர் 2019 ஆம் ஆண்டு கருத்துத் திணிப்பு மற்றும் உண்மைகளை மறைத்தல் உத்திகளைக் கொண்ட பிரசாரத்தின் மூலம் மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ராஜபக்சக்களின் ஆட்சியில் ஊடகத்துறை மீண்டும் இருண்ட யுகத்திற்குள் பிரவேசித்திருப்பதாகவே ஜனநாயகவாதிகளும் ஊடக சுதந்திரத்தின் மீதும் நல்லாட்சி மீதும் பற்றுக் கொண்டுள்ளவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளார்கள்.

இராணுவ முனைப்புடனான சர்வாதிகார ஆட்சிப் போக்கைக் கொண்டுள்ள ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் நாட்டு மக்களின் கருத்துச் சுதந்திரமும், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரமும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன.

அண்மையில் சிறீலங்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சீன தேசத்தின் பாதகாப்பு அமைச்சர் பயணம் செய்த வாகனத் தொடரணிக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக முன்னறிவித்தல் எதுவுமின்றி தலைநகர் கொழும்பின் முக்கிய வீதிச் சந்தியொன்றில் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. இதனால் பொறுமை இழந்து ஆத்திரமுற்ற இளைஞன் ஒருவர் தனது வாகனத்தின் ஹோர்ன் ஒலியை எழுப்பி ஆட்சேபணை தெரிவித்ததுடன், சக வாகன சாரதிகளையும் அவ்வாறே ஒலியெழுப்புமாறு கோரியதையடுத்து வாகங்களின் ஒலி அந்தப் பிரதேசத்தையே அதிரச் செய்திருந்தது

China DM 20210427 03 இருண்ட யுகத்தை நோக்கி நகரும் ஊடக சுதந்திரமும், கருத்து வெளிப்பாட்டு உரிமையும் - பி.மாணிக்கவாசகம்

இந்தச் சம்பவத்தின் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகி பொது மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. சம்பவம் நடைபெற்று இரண்டு தினங்களின் பின்னர் கைது செய்யப்பட்ட அந்த இளைஞன் மீது சட்ட விரோதமாகக் கூட்டம் கூடி பொலிசாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டதாக காவல் துறை பேச்சாளர்  அஜித் ரோகண தெரிவித்திருந்தார்.

ஆனால் அந்த சம்பவம் பற்றிய காணொளியில் அந்த இளைஞனோ அல்லது தமது பயணத்தைத் தொடர்வதற்காகக் காத்து நின்ற வாகன சாரதிகளோ சட்ட விரோதமாகக் கூட்டம் கூடியதாகவோ அல்லது அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினருக்கு இடையூறு விளைவித்ததாகவோ காணப்படவில்லை. அவர்கள் தங்களுடைய இடங்களில் நின்றிருந்தவாறு வாகனங்களின் ஒலியை எழுப்பியதையும், இவ்வாறு வீதிகளில் முன்னறிவித்தலின்றி தடுக்கப்படுவதற்காகவோ தாங்கள் இந்த ஆட்சியாளர்களுக்கு வக்களித்தோம் என கேள்வி எழுப்பியதையுமே அந்தக் காணொளியில் காண முடிந்தது.

கைது செய்யப்பட்ட அந்த இளைஞன் பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன் காவல் துறையினரிடமும், அரசாங்கத்திடமும் மன்னிப்பு கோரியிருந்தார். ஆனால் இவ்வாறு பொது மக்கள் அரசு மீதான தமது அதிருப்தியைத் தெரிவிப்பதற்கு வேறு எவருக்கும் அந்தவித இடையூறுமின்றி சத்தம் எழுப்புவது மக்களுடைய அடிப்படை உரிமை என்றும், அதனை ஒரு குற்றச் செயலாகக் கருதி எதிர் நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் இலங்கையின் உச்ச நீதிமன்றம் 1993 ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பு ஒன்றில் கூறியிருந்ததை இந்த சம்பவம் குறித்து ஆட்சேபணை வெளியிட்டுள்ளவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இதே போன்றதொரு சம்பவத்தில் தற்போதைய நாட்டின் பிரதமராகிய மகிந்த ராஜபக்சவே அன்றைய ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாடுகளுக்கு எதிராக ஊதுகுழல் ஒன்றைப் பயன்படுத்தி பலத்த ஒலி எழுப்பி போராட்டம் நடத்தியிருந்தார். அந்த வழக்கிலேயே இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்தது.

மக்கள் கோசம் என்ற பெயரிலான அந்த ‘ஒலி எழுப்பும்’ போராட்டத்தை அன்றைய எதிரணியில் இருந்த அரசியல்வாதிகளாகிய மகிந்த ராஜபக்சவே முன்னின்று நடத்தி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே ராஜபக்சக்கள் ஆட்சி அதிகாரத்தில் கோலோச்சுகையில் முன்னெச்சரிக்கையோ, முன்னறிவித்தலோ இன்றி ஒரு முக்கிய பிரமுகருடைய வாகனப் பேரணிக்காகப் பொது மக்களை முக்கிய வீதியில் தடுத்து நிறுத்தியமைக்காகத் தமது அதிருப்தியை ‘ஒலி எழுப்பி’ வெளிப்படுத்தியதற்காக சட்ட விரோதமாகக் கூட்டம் கூடி காவல் துறையினருக்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றம் சுமத்தி நீதிமன்றத்தில் நிறுத்தி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

இந்த நடவடிக்கையானது மக்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி அடக்கி ஒடுக்கியதையே எடுத்துக்காட்டி இருக்கின்றது. அது மட்டுமல்ல. ஆட்சியாளர்களின் அராஜகப் போக்கையும் சர்வாதிகார ஆட்சி முறையையுமே வெளிப்படுத்தி உள்ளது. இதன் காரணமாகவே நாடு மீண்டும் ஓர் இருண்ட யுகத்திற்குள் பிரவேசித்திருக்கின்றது என்று அச்சம் வெளியிடப்பட்டிருக்கின்றது.