உலகிற்கு விழிப்பூட்டும் நிகழ்வாக முள்ளிவாய்க்கால் கஞ்சி – பாரதி

இலங்கை அரசின் தமிழ் மக்கள் மீதான இனஅழிப்பின் உச்சக்கட்டமாக 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் சம்பபவம் நிகழ்ந்திருந்தது. இதனை தமிழ் மக்கள் பல வழிகளில் நினைவுகூர்ந்து வரும் அதேசமயம், முள்ளிவாய்க்கால் கஞ்சியை வழங்குவதன் மூலம் தமிழ் மக்களின் இனஅழிப்பை உலக மக்களின் கவனத்திற்கு கொண்டு செயற்பாட்டை மே 11 ஆம் நாள் முதல் 18 ஆம் நாள் வரை முள்ளிவாய்க்காலில் உயிர் தப்பியோர் இணைந்து முன்னெடுத்துள்ளனர். இது தொடர்பில் அதன் செயற்பாட்டாளர் திரு பாரதி அவர்கள் ‘இலக்கு’ இணையத்திற்கு வழங்கிய நேர்காணல் வருமாறு:

கேள்வி- முள்ளிவாய்க்கால் கஞ்சியை உலகெங்கும் முள்ளிவாய்க்கால் வாரத்தில் கொடுப்பதனூடாக கவனயீர்ப்பை நீங்கள் ஏற்படுத்த உள்ளதாக அறிகிறோம். அது தொடர்பான விபரங்களைத் தரமுடியுமா?

பதில் – பல தசாப்தங்களாக இலங்கை அரசினால் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இனஅழிப்பின்  உச்சக் கட்டமாக 2009 மே முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு அமைந்திருந்தது. இம் மனிதப் பேரவலத்தை நினைவு கூரும் முகமாக யுத்தத்தின் இறுதி நாளான மே 18ஆம் திகதியை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளாக பிரகடனப்படுத்தி, உலகத் தமிழர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். இருப்பினும் தற்கால சூழலில் எமக்கு முன்னால் இருக்கும் சவால்களை மனதில் கொண்டு, இந் நினைவேந்தலை வேறு பல வழிகளிலும் முன்னெடுப்பது இன்றியமையாதது என நாம் நம்புகின்றோம். அவ்வாறான பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ அல்லது ‘Congee of Hope’ என்று அழைக்கப்படும் இக் குறியீட்டுச் செயற்பாடும் ஒன்றாகும்.

இச் செயற்பாட்டில் முக்கியமாக 3 நோக்கங்கள் உள்ளது.

  1. முள்ளிவாய்க்காலில் வஞ்சிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட அனைவரையும் மனதில் நிறுத்தி அவர்களுக்கு மதிப்பளித்தல்.
  2. அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை அங்கு நிகழ்ந்த சம்பவங்களின் ஊடாக, கதைகளின் ஊடாக எமது சமூகத்திற்கும், மற்றைய சமூகத்திற்கும் முள்ளிவாய்க்கால் பற்றிய ஒரு கவனயீர்ப்பை ஏற்படுத்துவதோடு, முள்ளிவாய்க்கால் பற்றிய ஒரு உரையாடலையும் உண்டு பண்ணுதல்.
  3. முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட இனஅழிப்பின் விளைவாக விரக்தியின் விளிம்பில் துவண்டு போய் செய்வதறியாது நிற்கும் எமது சமூகத்தின் நம்பிக்கையையும், ஒற்றுமையையும், துணிவையும் கட்டியெழுப்பும் விதமாக இச்செயற்பாட்டை முன்னெடுக்கின்றோம்.

இதில் குறிப்பாக மக்களிடம் நாம் மூன்று விடயங்களை முன்வைக்கின்றோம்.    அதாவது

  • மே 12ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரை முள்ளிவாய்க்கால் வாரமாகப் பிரகடனப்படுத்தி அவர்களின் வசதிக்கு ஏற்றவாறு முள்ளிவாய்க்காலை நினைவு கூருதல்.
  • இந்தக் காலப்பகுதியில் ஒருவேளையேனும் கஞ்சியை உணவாக்கி, முள்ளிவாய்க்கால் கதைகளையும் சேர்த்து தமது குழந்தைகளுக்கும், அயலவர்களுக்கும், நண்பர்களுக்கும் பகிர்ந்து முள்ளிவாய்க்கால் பற்றிய ஒரு உரையாடலை உண்டு பண்ணுதல்.
  • இதை ஒவ்வொரு ஆண்டும் மக்கள் மீண்டும் மீண்டும் இதே காலப் பகுதியில் அதாவது மே 12 தொடக்கம் 18 வரையான முள்ளிவாக்கால் வாரத்தில் ஒவ்வொரு ஆண்டும் இதை முன்னெடுப்பதன் மூலம் இதை முள்ளிவாய்க்கால் மாண்டவர்களுக்கு மதிப்பளிக்கும் ஒரு பண்பாட்டு நிகழ்வாக வரவிருக்கும் பல நூற்றாண்டுகளுக்கு தமிழர் வரலாற்றில் இடம் பிடிக்கும் ஒரு நிகழ்வாக மாற்ற வேண்டும். அதற்கு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை.

கேள்வி – இந்தத் திட்டம் தொடர்பான எண்ணம் எப்படி எவ்வாறு ஏற்பட்டது?

முள்ளிவாய்கால் கஞ்சி என்பது ஒரு புதிய விடயமல்ல. இது சில ஆண்டுகளுக்கு முன்பாகவே தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற ஒரு நிகழ்வு. முள்ளிவாய்கால் நினைவேந்தல் நாளான மே 18ஆம் திகதி முன்னெடுக்கப்படும் நினைவேந்தல் நிகழ்வுகளில் கஞ்சியை தயாரித்து, அங்கு வரும் மக்களுக்குப் பகிர்ந்து அதை ஒரு நினைவேந்தல் நிகழ்வாக கடைப்பிடித்து வருகின்றனர்.

இருப்பினும் இம்முறை நாம் ஒருபடி மேலே சென்று முள்ளிவாய்கால் நிகழ்வு பற்றிய உரையாடலை உருவாக்கும் ஒரு நிகழ்வாகவும், மற்றைய சமூகங்களுக்கு இதை எடுத்துச் செல்லும் ஒரு நிகழ்வாகவும், எமது மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையையும், துணிவையும் கட்டியெழுப்பும் ஒரு அடையாளமாகவும் இதை முன்னெடுப்பது  எமது நோக்கம். அவ்வாறான நோக்கங்களோடு இதை நேர்த்தியாக வடிவமைத்து, திட்டமிட்டு இதை எங்கள் மக்கள் மத்தியிலும், எமது மக்கள் சார்ந்து இயங்குகின்ற அமைப்புகள் மத்தியிலும் கொண்டு சென்று இதை ஒரு உலகளாவிய நிகழ்வாக மாற்றுவதே எமது நோக்கம்.

இனஅழிப்பின் என்பது மனிதப் பண்புகளுக்கு அப்பாற்பட்ட மிக மோசமான, மிருகத்தனமான ஒரு செயல். மாறாக மக்கள் அனைவருக்கும் இருக்கக் கூடிய மனிதப் பண்புகளில் மிக அடிப்படையான, அவசியமான மனிதப் பண்பு என்றால் அது உணவும், உணவைப் பகிர்தலும்.

Congee of Hope Remember Mullivaikkal Mullivaikkal Stories 3 உலகிற்கு விழிப்பூட்டும் நிகழ்வாக முள்ளிவாய்க்கால் கஞ்சி - பாரதி

கொடிய போரினால் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, இழக்கக் கூடாத எல்லாவற்றையும் இழந்த நிலையில் உடுக்க உடையின்றி, உறங்க இடமின்றி, அழிவின் விழிம்பில் நின்ற எங்கள் மக்கள்; உண்ட அந்த ஒருவேளை உணவே அவர்களை தொடர்ந்தும் நடைபோடும் வல்லமையை தந்த ஒரே விடயம். உணவைத் தவிர அவர்கள் அங்கு அனுபவித்த வேறு எந்தவொரு விடயமுமே அவர்கள் வேண்டி, விரும்பி அனுபவித்ததாக இருக்க முடியாது. உணவு என்றால் மட்டுமே ஒருவர் விரும்பி உண்டிருப்பார். விரும்பி அதை செய்திருப்பார் என்று நாங்கள் நம்பலாம்.

ஆகவே அந்த உணவு ஒன்று தான் அவர்களுக்கு நம்பிக்கையாகவும், அவர்களுக்கு துணிச்சலையும் தந்திருக்கக் கூடிய ஒரே விடயம். எமக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியை எமது மக்கள் மத்தியிலும், மற்றைய சமூகத்தின் மத்தியிலும் விதைப்பதற்கு அல்லது அவர்கள் மத்தியில் இதை எடுத்துச் செல்வதற்கு எல்லா மனிதர்களுக்கும் பொதுவாக இருக்கக்கூடிய இந்த உணவு ஒரு சிறந்த குறியீடாக இருக்கும் என நாம் நம்புகின்றோம்.

மிகக் கொடிய ஒரு நிகழ்வை ஒரு சாதாரண செயற்பாட்டின் மூலம் சொல்வது மிகப் பொருத்தமானதாக இருக்கும் என நாம் நம்பியதால், கஞ்சியை ஒரு குறியீடாக எடுத்து முள்ளிவாய்க்கால் பற்றிய ஒரு உரையாடலை உண்டுபண்ணுவதே இதன் நோக்கம்.

சுருக்கமாக சொல்வதானால், கஞ்சிக்கு நாங்கள் மதிப்பளிப்பது என்பதை விட கஞ்சியை ஒரு குறியீடாகப் பயன்படுத்தி, முள்ளிவாய்க்காலில் இழைக்கப்பட்ட அநீதிகளை சொல்வதும், அங்கு மாண்ட மக்களுக்கு மதிப்பளிப்பதுமே இதன் நோக்கம்.

சாதாரணமாக எமது உணவுப் பண்பாட்டில் கஞ்சி என்பது மிக எளிமையான அதேநேரம் ஏழ்மையான வாழ்வின் ஒரு அடையாளமாகும். எம்மீது திணிக்கப்பட்ட போர்  முழுமையான பொருளாதாரத் தடையோடு கூடியது. போரும், ஏழ்மையும், பொருளாதாரத் தடையும் எமது மக்களை முள்ளிவாய்க்காலுக்கு முன்னரே கஞ்சி மட்டுமே உணவு என்ற நிலைக்கு பலமுறை தள்ளி விட்டிருக்கிறது.  உதாரணமாக யாழ்ப்பாண இடப்பெயர்வு.  அதற்கு முன்னரான வலிகாமத்தில் மேற்கொள்ளப்பட்ட பல இராணுவ நடவடிக்கை மூலம் ஏற்பட்ட பல இடப்பெயர்வுகள், கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட பல இராணுவ நடவடிக்கைகளால் ஏற்பட்ட அவலங்களின் போதெல்லாம் எமது மக்கள் தமது உயிர்களை தக்கவைத்துக் கொள்வதற்கும், தமது ஏழ்மையையும், வறுமையின் காரணமாக அடுத்த நாளை நோக்கி தம்மை நகர்த்துவதற்கான ஒரே உணவு மூலமாக கஞ்சியே அமைந்திருந்தது. கஞ்சி என்பது போராட்ட காலச் சூழலில் எப்பொழுது  தமிழர்களின் ஒரு கடைசி ஆயுதமாக இருந்து வந்துள்ளது. ஆகவே கஞ்சி என்பது ஒரு அடையாளமாக மாறிப்போய் விட்டது.

போராட்டமும், அந்தப் போராட்டத்திலிருந்து எம்மை தக்க வைத்துக் கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்குமான அந்தக் கால இடைவெளியில் அந்த இடத்தை நிரப்புகின்ற ஒரு அடையாளமாக கஞ்சி எப்பொழுதுமே இருந்திருக்கிறது. அவ்வாறே அது முள்ளிவாய்க்காலிலும் எம் மக்களை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தும் ஒரு சக்தியாக இருந்திருக்கிறது.

ஆகவே கஞ்சி என்பது எமக்கு முன்னால் இதை கையிலெடுத்து செயற்படுத்திய அனைவருமே அதை சிறப்பாக, சரியாகப் புரிந்து கொண்டு செய்திருக்கிறார்கள் என்றே கூறவேண்டும். இதுவே நாம் கஞ்சியை ஒரு செயற் திட்டமாக முன்னெடுப்பதற்கு இதே காரணம்.

Congee of Hope Remember Mullivaikkal Mullivaikkal Stories 1 உலகிற்கு விழிப்பூட்டும் நிகழ்வாக முள்ளிவாய்க்கால் கஞ்சி - பாரதி

கேள்வி – இந்தத் திட்டத்தை யார் முன்னெடுக்கின்றார்கள்? அதனை எவ்வாறு எமது மக்கள் வாழும் உலகப் பரப்பெங்கும் கொண்டு போய்ச் சேர்க்கப் போகின்றீர்கள்?

பதில் – முள்ளிவாய்க்கால் கஞ்சி அல்லது ‘Congee of Hope’ என்னும் இந்த செயற் திட்டம் முள்ளிவாய்க்காலில் நேரடியாகப் பாதிக்கப்பட்டு, உயிர் தப்பி, இன்று வெளி நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் பலர் இணைந்து மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சி. இதில் பல இளைஞர்கள் ஈடுபட்டிருக்கின்றார்கள். குறிப்பாக கனடா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம், இந்தியா போன்ற நாடுகளில் இருந்து பலரும் ஈடுபட்டிருக்கின்றார்கள். இந்த இடத்தில் நாம் மக்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுக்க விரும்புகின்றோம். முள்ளிவாய்க்காலில் கொன்று புதைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களோடு சேர்த்து அவர்களது கதைகளும் புதைக்கப்பட்டு விட்டன. ஆகவே உயிர் தப்பியவர்களாகிய எமக்கு ஒரு தார்மீக கடப்பாடு உண்டு. தங்களது கதைகளையும், புதைக்கப்பட்டவர்களது கதைகளையும் சேர்த்தே எமது மக்களுக்கும், ஏனைய சமூகத்தினருக்கும் அதை கொண்டு செல்ல வேண்டிய கடமை எமக்கே உண்டு.

ஆகையால் முடிந்தவரை உங்களை இந்த செயற் திட்டத்தில் ஈடுபடுத்த முடியுமானால், ஈடுபடுத்துங்கள். உங்களது கதைகளை எமக்கு அனுப்பி வையுங்கள். எங்களோடு தொடர்பு கொண்டு சேர்ந்து பயணிக்க முடியுமானால், சேர்ந்து பயணியுங்கள் என வேண்டிக் கொள்கின்றோம்.

இச் செயற்திட்டத்தில் ஈடுபட்டு செயற்படுவதற்கு முக்கியமாக உயிர் தப்பியவராக மட்டுமே இருக்க வேண்டும் என்றில்லை. யார் வேண்டும் என்றாலும் இச் செயற்திட்டத்தில் எமக்கு உதவ முடியும் என்பதையும் இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.

முள்ளிவாய்க்கால் கஞ்சி தொடர்பான செயற்திட்டத்தை நாம் பல்வேறு வழிமுறைகளில் முன்னெடுப்பதாக ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்தோம். இருப்பினும், கோவிட் 19  பெருந்தொற்றுக் காலத்தை மனதில் கொண்டு  இவ்வருடம் பொதுவாக மக்கள் மத்தியில் இறங்கி வேலைத் திட்டங்களை முன்னெடுக்க முடியாது. ஆகையால் சமூக ஊடகங்களின் ஊடாக நேரடியாக எமது மக்களை சென்றடைந்து, அதன் மூலம் மேற்கொள்ளக் கூடிய பணிகளை செய்வதே இவ்வருடத்திற்கான திட்டம். அது தவிர நாம் உலகெங்கும் உள்ள தமிழ் அமைப்புகளுக்கு கடிதங்களை எழுதுகின்றோம். இந்த விடயத்தில் சேர்ந்து பயணிக்க முன்வருமாறு அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம். இந்த விடயத்தை தத்தமது நாடுகளில் முன்னெடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம். தவிர உங்களைப் போன்ற ஊடகங்களின் ஊடாக செவ்விகள், கலந்துரையாடல்களில் பங்கேற்று இவை பற்றிய ஒரு கவனயீர்ப்பை ஏற்படுத்தி வருகின்றோம். தவிர இதில் பங்கெடுப்பவர்களும், முள்ளிவாய்க்காலில் உயிர் தப்பி வந்த ஏனைய பல மக்களும் தங்களது கதைகளை ஏற்கனவே பரிமாறத் தொடங்கி விட்டார்கள். அவர்களது கதைகளை எமது இணையத்தளம், சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றோம். congeeofhope.org என்ற இணையத் தளத்தில் எமது செயற்பாடு தொடர்பான தகவல்களும், முள்ளிவாய்காலில் உயிர் தப்பியவர்களின் கதைகளும் பரிமாறப்பட்டு வருகின்றன. தவிர முகநூல் பக்கத்திலும் ருவிற்றர், யூரியூப் இன்ஸ்டகிராம் பக்கங்களிலும் எமது பதிவுகளை மேற்கொண்டு வருகின்றோம். மக்கள் தாராளமாக அவற்றை சென்று பார்வையிடலாம். மற்றவர்களுக்கும் பகிரலாம். பகிர்ந்து இது பற்றிய ஒரு கருத்துருவாக்கத்தை ஏற்படுத்த உதவுமாறு மக்களிடத்தில் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இது ஒரு உணவுக் குறியீடு செயற்பாடு என்பதனால், வருகின்ற காலப்பகுதிகளில் அடுத்தடுத்த வருடங்களில் புலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற எமது வியாபார நிறுவனங்கள், உணவகங்கள் ஊடாக, எமது மக்களுக்கும், மற்றைய மக்களுக்கும் எடுத்துச் செல்லலாம் எனத் திட்டமிட்டிருக்கின்றோம். உதாரணத்திற்கு உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு ஒருவேளை உணவாக இதை பரிமாறுமாறு உணவகங்களை வேண்டிக் கொள்ளுதல். வியாபார நிறுவனங்களில் கஞ்சிக்கான ஒரு சிறிய பொதியை மக்களுக்கு விநியோகித்தல். எதிர்காலத்தில் வெளிநாடுகளில் ஏழைகளுக்கு உணவு ரீதியாக உதவி செய்யும் அமைப்புக்களை அணுகி அவர்களோடு சேர்ந்து பயணித்து எமக்கு இழைக்கப்பட்ட அநீதியை அவர்கள் ஊடாக மற்றைய சமூகங்களுக்கு கொண்டு சேர்த்தல் போன்ற திட்டங்களை கையில் வைத்திருக்கின்றோம். அடுத்தடுத்த வருடங்களில் அதை செயற்படுத்த காத்திருக்கின்றோம்.

கேள்வி – உலக மக்களிடம் இது எந்தவகையான தாக்கத்தை ஏற்படுத்தும்? அது எந்த வகையில் வலிசுமந்த, சுமக்கும் எமது மக்களுக்கு வலுச் சேர்க்கும்?

பதில் – முள்ளிவாய்க்கால் கஞ்சி அல்லது ‘Congee of Hope’ என்னும் இந்த செயற் திட்டத்தின் மூலம் நாம் எமது சமூகத்தை மட்டுமல்ல மற்றைய சமூகங்களையும் சென்றடைய முடியும் என நாம் உறுதியாக நம்புகின்றோம். ஏனெனில், உணவு என்னும் ஒரு சாதாரண செயற்பாட்டின் மூலம் ஒரு செய்தியை சொல்வது என்பது மிக எளிமையான செய்கை என நாம் நம்புகின்றோம். உணவு பரிமாறும் இடத்தில் வேற்றுமைகள் களையப்பட்டு எல்லோரும் ஒரே மனநிலையில் இருக்கின்ற சூழல் அது. அந்த சூழலில் ஒரு மனிதாபிமானமானம் தொடர்பான  செய்தியை பரிமாறுதல் என்பது மிக அருமையானதாக இருக்கும். இதை தமிழர் பண்பாட்டு நிகழ்வாக நாம் மாற்றுவோமாக இருந்தால், முள்ளிவாய்காகலை நினைவுகூருகின்ற ஒரு தமிழர் பண்பாட்டு நிகழ்வாக ஒருசில வருடங்களில் நாம் இதை மாற்றுவோமாக இருந்தால், இன்று தமிழர்களின் பண்பாட்டு நிகழ்வுகள் மற்றைய சமூகங்களுக்கு எவ்வளவு வேகமாக சென்றடைகின்றதோ அதே போன்று முள்ளிவாய்க்கால் பற்றிய செய்திகளும் எமது பண்பாட்டின் ஊடாக மற்றைய சமூகங்களை சென்றடையும் என்பதே எமது நம்பிக்கை.

அது வெறும் பண்பாட்டு நிகழ்வாக மட்டும் அல்லாமல் எமக்கு இழைக்கப்பட்ட அநீதி பற்றிய முழுமையான தெளிவையும், கருத்தையும் மற்றைய சமூகங்களுக்கு மத்தியில் கொண்டு செல்லும். விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நாம் நம்புகின்றோம். தவிர முள்ளிவாய்க்காலுக்கு பிற்பாடு துவண்டு போய், விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கின்ற எமது சமூகம், இன்று யாரிடம் நீதி கேட்பது, எவ்வாறு நீதி கேட்பது என்று தெரியாத நிலையில் இருக்கின்றது. அவ்வாறான எமது சமூகத்திற்கு நம்பிக்கையையும், துணிவையும் கட்டியெழுப்பி மீழெழுச்சி பெறச் செய்து எமது இலக்கை அடைய இந்த ‘Congee of Hope’ உதவும் என நாம் நம்புகின்றோம்.

முள்ளிவாய்க்கால் கஞ்சி போன்ற இவ்வாறான நிகழ்வுகள் வரலாற்றில் வேறு சமூகங்கள் மத்தியிலும் இருக்கின்றது. உதாரணத்திற்கு யூதர்கள் மத்தியில் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் அடிமைகளாக கொண்டு செல்லப்பட்டு, துன்பங்களை அனுபவித்த போது நிகழ்ந்த அவர்களுடைய கதைகளை தமது எதிர் காலத்திற்கு கடத்த வேண்டும் என்பதற்காக Passover food என்னும் உணவு பகிரும் காலத்தைக் கடைப்பிடித்து வருகின்றார்கள். அந்தக் காலத்தில் அவர்கள் அந்த உணவை உண்ணுவதோடு அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் பரிமாறுகிற ஒரு நிகழ்வு அது.

அதேபோன்று துருக்கியின் ஆர்மேனிய பகுதிகளில் வாழும் மக்கள் பல ஆயிரக் கணக்கான வருடங்களுக்கு முன்பு பேரிடரினை சந்தித்த போது தமக்கு உணவிற்கான பஞ்சத்திலிருந்து எப்படி அவர்கள் மீண்டார்கள் என்பதை நினைவு கூரும் முகமாக  ஒரு கஞ்சியினை ஒரு நினைவு கூரும் நிகழ்வாக பகிர்வதன் மூலம் பல்லாயிரக் கணக்கான வருடங்களுக்குப் பிற்பாடும் தங்கள் வரலாற்றைக் கடத்தி மற்றைய சமூகத்தின் மத்தியிலும் அதை கொண்டு சேர்க்கிறார்கள்.

ஆகவே இவற்றை ஒரு முன்னுதாரணமாக எடுத்து எமது கலாச்சாரத்தில் கூட ஆடிக்கூழ், தைப் பொங்கல் எல்லாம் ஓர் உணவு சார்ந்த அதேநேரம் ஏதோ ஒரு விடயத்தை பறைசாற்றுகிற பண்பாடுதான். அதேபோல் நாமும் அதே வழிமுறைகளை கையாண்டு, முள்ளிவாய்க்கால் கஞ்சியை, முள்ளிவாய்க்காலில் எமக்கு இழைக்கப்பட்ட அநீதியை உலகத்திற்கு வருங்காலத்திற்கு சொல்லுகின்ற ஒரு வழிமுறையாக கையாண்டு, அதில் வெற்றி காண முடியும் என்று நாம் நம்புகின்றோம். இதற்கு மக்களாகிய நீங்கள் இதைப் பின்பற்றி, ஆதரவு தந்து இதை வெற்றி பெறச் செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றோம்.