புர்கா தடை உத்தரவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரிக்க வேண்டும்- சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு

புர்கா மற்றும் நிகாப் உள்ளடங்களாக முகத்தை முழுமையாக மூடும் வகையிலான ஆடைகளை அணிவதற்குத் தடைவிதிப்பதென்பது ஒருவர் விரும்பிய மதம் அல்லது நம்பிக்கைகளைப் பின்பற்றுவதற்கு அனுமதியளிக்கின்ற சர்வதேச சட்டக்கட்டுப்பாடுகளுக்கு முரணானதாகவே அமையும் என சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் பொது மக்களின் உரிமையை மறுக்கும் வகையிலான இந்த மோசமான யோசனையை இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரிக்க வேண்டும் எனவும்  சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக் குதலில் 250க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு, 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.  இந்த தாக்குதல் தொடர்பாக ஆராய   ஜனாதிபதி ஆணைக்குழு  அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து 11 இஸ்லாமிய அமைப்புகளை தடைசெய்வதாக தெரிவித்து, வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை கடந்த 13ம் திகதி இலங்கை அரசு வெளியிட்டது.

மேற்குறிதத தாக்குதலில் தற்கொலை குண்டுத்தாரிகளுக்கு ஆதரவு வழங்கியதாக    குற்றம் சுமத்தி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியூதீன் ஆகியோர்  கடந்த 24ம் திகதி அதிகாலை கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது நிகாப், புர்கா மற்றும் முகத்தை மறைக்கும் ஆடைகளுக்குத் தடைவிதிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது மக்களின் உரிமையை மறுக்கும் வகையிலான  புர்கா மற்றும் நிகாப் உள்ளடங்களாக முகத்தை முழுமையாக மூடும் வகையிலான ஆடைகளை அணிவதற்குத் தடைவிதிப்பு போன்ற மோசமான யோசனையை இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரிக்க வேண்டும் என  வலியுறுத்தப்பட்டுள்ளது.