தலைவர் பிரபாகரனின் படத்துடன் பிரதமரின் படத்தையும் இணைத்து வெளியிட்டால், பிரதமரை கைது செய்வார்களா?

“நான் தலைவர் பிரபாகரனின் படத்தினை முகநூலில் பிரசுரித்து அதில் பிரதமரையும் இணைத்து பிரசுரித்தால் பிரதமரையும் இந்த அரசாங்கம் கைதுசெய்யுமா என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்  கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று முன்தினம் ஏறாவூர்  காவல்துறையினரால் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் க.மோகனை காவல் நிலையத்திற்கு சென்று நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பார்வையிட்டார்.

அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு  சாணக்கியன் கருத்து தெரிவிக்கையில்,    “போலியான முகநூல் ஊடாக மோகனின் பெயரையும் இணைத்து(ரக்)பிரசுரித்த காரணத்தினால் கைதுசெய்து விசாரணைசெய்வதாக சொல்லப்பட்டுள்ளது.

முகநூலில் ஒருவரை ஒருவர் இணைத்து(ரக் செய்து)பிரசுரித்தது என்பதற்காக கைதுசெய்யப்பட்ட விடயம் என்பது இந்த அரசாங்கத்தின் மிகவும் கேவலமான விடயமாகவே பார்க்கவேண்டியுள்ளது.

இந்த நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் நடைபெருக்கிறது. நாட்டில் குண்டு வெடிப்பிக்கு காரணமாய் இருந்த சஹாரா என்ற பெண்மணியை கூட இது வரை கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும் இந்த காவல்துறை, முகநூலில் ஒருவர் டக் செய்தார் என்று கூறி ஒருவரை கைது செய்து விசாரணை செய்வது என்பது மிகவும் கீழ்தனமான விடயம். இது இந்த அரசின் இயலாமையை மறைக்க செய்யப்படும் வேலைத்திட்டம்.

நான் நாளைய தினம் தலைவர் பிரபாகரனின் படத்தை முகநூலில் பிரசுரித்து பிரதமருக்கு டக் செய்தால் நீங்கள் பிரதமரை கைது செய்வீர்களா?

இது தமிழ் மக்களை அடக்கும் ஒரு செயத்திட்டமாகத்தான் நான் பார்க்கிறேன்.அரசியல் ரீதிகாக தமிழ் பேசும் மக்களை அடக்கும் வேலைத்திட்டமாக நான் இதை பார்க்கிறேன்” என்றார்.