யாழ். பல்கலைக் கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறந்து வைப்பு

இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த அப்பாவி பொதுமக்களின் நினைவாக யாழ். பல்கலைக் கழக வளாகத்தில் மீள் நிர்மானம் செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சற்று முன்னதாக பல்கலைக் கழக மாணவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Image 2021 04 23 at 7.50.43 AM யாழ். பல்கலைக் கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறந்து வைப்புWhatsApp Image 2021 04 23 at 7.50.43 AM 1 யாழ். பல்கலைக் கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறந்து வைப்பு

யாழ்ப்பாணம் பல்கலைக் கழக வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த ஜனவரி மாதம் 8மஆம் திகதி இரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து உலகளவில்  கண்டனம் வெளியிட்டதோடு பல்கலை. மாணவர்கள் 9பேர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

அவர்களுடைய போராட்டத்துக்கு சர்வதேச அளவில் ஆதரவு பெருகியது. இதனால் பல்கலை நிர்வாகத்தினருக்கும் அழுத்தம் ஏற்பட்டதையடுத்து  மீண்டும் நினைவுத் தூபியை அதே இடத்தில் அமைப்பதற்கு பல்கலை நிர்வாகம் முன்வந்தது.

இதையடுத்து கடந்த ஜனவரி 11 ஆம் திகதி அதிகாலை, யாழ். பல்கலைக் கழக உப வேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.சிறிசற்குணராசா அவர்கள் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது.

குறித்த தூபியை பல்கலைக்கழகத்துக்குள் அமைப்பதற்கு  சமாதன தூபி என்ற பெயரிலேயே அனுமதிவழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த தூபியின் வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு குறித்த புதியதூபி அமைக்கப்பட்டுள்ளது.

18 அடி கொண்ட தூண் வடக்கு பக்கமாகவும் 5 அடிகொண்ட தூண் கிழக்கு பக்கமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.  சுமார் 20 இலட்சம் பெறுமதியில் இந்த தூபி அமைக்கப்பட்டுள்ளது. குறித்த தூபிக்கான பணம் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டே கட்டப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த தூபி அமைப்பதற்கு மாணவர்களால் முள்ளிவாய்க்காலில் இருந்து மண் எடுத்துவரப்பட்டமையும்  குறிப்பிடத்தக்கது.

யாழ். பல்கலைக் கழக உப வேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.சிறிசற்குணராசா அவர்களால் திறந்து வைக்கப்பட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், உப வேந்தருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்  இன்று காலை 7 மணிக்கு மாணவர்களால் இந்த தூபிதிறந்து வைக்கப்பட்டுள்ளது.