தியாக தீபம் அன்னை பூபதி – மாரீசன்

இன்று தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 33ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இக்கவிதை பிரசுரமாகின்றது.
சிங்களப் படைகள் கொடுமைகள் கண்டனள்
அங்கம் நெகிழ்ந்திட வெகுண்டு எழுந்தனள்
எங்கும் எழும்பிய அவலக் குரல்களால்
பொங்கியெழுந்திடும் எரிமலையாகினள்
அகிம்சை வழியைக் காட்டிய பாரதம்
அனுப்பிய படைகள் இம்சைகள் கண்டனள்
புலிகளைத் தேடி அழித்திட அலைந்ததை
வாலிபர், இளைஞரைக் கொன்று குவித்ததை
கண்டனள், அன்னையின் விழிகள் சொரிந்தன
இதயம் குமுறிட எரிமலை வெடித்தது
சிலையெனப் பிள்ளையார் முன்றலில் அமர்ந்தனள்
முந்தையர் காந்தியார் காட்டிய நெறியினில்
முப்பது நாட்கள் நோன்பினைத் தொடர்ந்தனள்.
படையினர் போரினை நிறுத்திட வேண்டும்
புலிகளைப் பேச்சுக் கழைத்திட வேண்டும்
என்றுரை விடுத்தனள் உறுதியா யிருந்தனள்
ஆயினும் அன்னவர் இரங்கினார் அல்லர்
இரக்க மென்பது இதயத் திலில்லா
அரக்கர் கண்முன் அணைத்தவன் கலங்கிக்
கண்ணீர் வடித்துக் கையறைந்தலற
தமிழரின் விழிநீர் தாரையாயோட
அமைதியின் மூச்சோ டாவியுமடங்கச்
சரித்திரம் படைத்தனள் பூபதி அம்மா
எழுவான் திசையில் மட்டுமா நகரில்
நாவலங்கேணி ஊற்றின் றீய்ந்த
தாயாம் பூபதி முத்தாய் இலங்கும்
அன்னையே நின்னடி வணங்குகின்றோம் நாம்
தரணியே துதித்திடத் தெய்வமா யுயர்ந்தாய்
பரணியில் நிலைத்தாய் பாவையே யும்மை
நெஞ்சில் சுமந்தோம் என்றும் தொழுவோம்.