உலக வரலாற்றில் ஒரு பெண் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த வரலாறு அன்னை பூபதிக்கு மட்டுமே உண்டு! – பா.அரியநேத்திரன்

அன்னை பூபதியின் 33ஆம் ஆண்டு நினைவு 19/04/2021 இன்றாகும். ஆம்! கடந்த 33, வருடங்களுக்கு முன் வடக்கு, கிழக்கில் ஒரு அன்னிய நாட்டு படை எம்மண்ணில் நிலை கொண்டிருந்த காலம். ஆம்! இலங்கை – இந்திய ஒப்பந்தம் 1987 யூலை 29ஆம் திகதி இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்திக்கும், இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தனவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டு 13ஆவது அரசியல் அமைப்பு மூலம் மாகாணசபை சட்டமூலம் அறிமுகமான காலம். அந்தக்காலத்தில் இந்திய அமைதிப்படைகள் இலங்கையில் குறிப்பாக வடக்கு, கிழக்கு பகுதிகள் எங்கும் முகாம் அமைத்து, வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு அமைதி என்ற போர்வையில் அட்டூழியங்களையும் செய்து வந்த காலம். அப்படியான வேளையில் தான் அன்னை பூபதி அவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் ஒன்றை மேற்கொள்ளவேண்டிய நிலை உருவானது.

முதலில் யார் இந்த அன்னை பூபதி என்பதை பார்ப்போம். மட்டக்களப்பு – அம்பாறை அன்னையர் முன்னணியின் செயற்பாட்டாளர். 1932ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 03ஆம் திகதி மட்டக்களப்பில் பிறந்த தாயார். அவர் தனது 56ஆவது வயதில் இந்த தியாகத்தில் தன்னை ஈர்த்தார்.

ஆம்! விடுதலைப்புலிகளுக்கும், இந்திய அமைதிப் படைக்கும் சண்டை நடந்து கொண்டிருந்த காலம். அந்தக் காலத்தில் இந்தியப் படைக்கு எதிராக குரல் கொடுக்க, அறப் போராட்டங்களை நடத்த மட்டு-அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி முடிவு செய்தது. அவர்கள் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து இந்திய அரசுக்கெதிராக உண்ணாநோன்புப் போராட்டத்தைத் தொடங்கினர்.

அந்த இரண்டு கோரிக்கைகளும் இதுதான்..

  1. உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
  2. புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காண வேண்டும்.

இந்த கோரிக்கைகளை முன்வைத்தே மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்தில் குருந்தை மரநிழலில் 1988, மார்ச்,19ஆம் திகதி சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை அன்னை பூபதி ஆரம்பித்தார்.

மகாத்மா காந்தியின் அகிம்சை போராட்டாத்தால் விடுதலை பெற்ற பாரத நாடு என வரலாறு கூறப்படும் இந்திய நாடு, அன்னை பூபதியின் அகிம்சைவழி போராட்டத்தை கணக்கில் எடுக்கவில்லை.

போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னமே இந்தியப் படை அதிகாரிகளுடன் பல பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. அன்னையர் முன்னணியின் கோரிக்கைகள் எதுவுமே இந்தியப்படையினரின் கவனத்தை ஈர்க்கவில்லை. ஆனால் தமிழ்ப் பெண்கள் அடையாள உண்ணாநோன்புப் போராட்டத்தில் அணி திரண்ட நிலையில், 1988ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் திகதி அன்னையர் முன்னணியைத் திருமலைக்குப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. போராட்டம் தொடர்ந்து நடந்தது. 1988 ஆம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் திகதி அன்னையர் முன்னணியின் நிர்வாகக் குழுவினர் கொழும்பில் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை முறியவே சாகும் வரை உண்ணாநோன்புப் போராட்டத்தைத் தொடங்க முடிவு எடுத்தனர்.

அன்னை பூபதி போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னமே அப்போது பலர் சாகும் வரை உண்ணாநோன்புப் போராட்டத்தில் குதிப்பதற்காக முன்வந்தனர். இறுதியில் குலுக்கல் முறையில் தேர்வு இடம் பெற்றது. முதலில் அன்னம்மா டேவிட் தெரிவு செய்யப்பட்டார். 1988ஆம் ஆண்டு பெப்ரவரி 16 ஆம் நாள் அமிர்தகழி மாமாங்கேஸ்வர் கோயிலில் அன்னம்மாவின் உண்ணாநோன்புப் போராட்டம் தொடங்கியது. ஆனால் படையினர் உண்ணாவிரத மேடையில் இருந்தவரைக் கடத்திச் சென்றதில் அவரால் தனது போராட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.

இந்த நிலையில் தான் பூபதியம்மாள் தன் போராட்டத்தை 19மார்ச்  1988 இல் தொடங்கினார். முன்னெச்சரிக்கையாக “சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமாயிருக்கிறேன். எனக்கு சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனோ, அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது” எனக் கடிதம் எழுதி வைத்தார். பத்துப் பிள்ளைகளுக்கு, தாயார் இவர். நீர் மட்டும் அருந்தி சாகும் வரை உண்ணாநோன்பு இருந்தார். இடையில் பல தடங்கல்கள் வந்தன. உண்ணாவிரதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களையும், அன்னை பூபதியின் பிள்ளைகள் சிலரையும், இந்திய இராணுவம் கைது செய்தது. ஆயினும் போராட்டம் நிறுத்தப்படவில்லை. அவர் உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தார். கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் சரியாக ஒரு மாதத்தின் பின் 19.04.1988 அன்று காலை 8.45, மணிக்கு அவர் உயிர் நீத்தார்.

மட்டக்களப்பு மண்ணே கண்ணீரில் மூழ்கியது அன்னையர் முன்னணியினர் அன்னைபூபதியின் உடலத்தை சூழ்ந்து ஒப்பாரி வைத்து அழுதனர். அவரின் திருவுடல் முகத்துவாரம் வீதியில் உள்ள சீலாமுனை விளையாட்டு மைதானத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.  மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து மலர் மாலை, மலரஞ்சலி செலுத்தி வழிபட்டவண்ணம் இருந்தனர்.

என்றாலும் மக்கள் மனதில் ஒரு அச்ச உணர்வும் தென்பட்டது. இந்திய அமைதிப்படையினரின் அச்சுறுத்தலை தாண்டியே மக்கள் இறுதி வணக்கத்தை செலுத்தினர்.

பதாதைகளும், அஞ்சலி துண்டுப்பிரசுரங்களும், தமிழ் ஊடகங்களில் முதன்மை செய்தியாகவும் அன்னை பூபதியின் தியாக மரணம் வெளிக்கொணரப்பட்டன.

1988, எப்ரல் 19ஆம் திகதி செவ்வாய்கிழமை காலை 8.45, மணிக்கு உயிர் பிரிந்த அன்னைபூபதியின் வித்துடல் 1988, ஏப்ரல், 22 வெள்ளிக்கிழமை வரை முகத்துவாரவீதி சீலாமுனை விளையாட்டு மைதானத்தில் மக்கள் அஞ்சலிக்காக மூன்று நாட்கள் தொடராக வைக்கப்பட்டு 22ஆம் திகதி பி.ப: 2.15, மணிக்கு ஈமைக்கிரியைகள் இடம்பெற்று அலங்கரிக்கப்பட்ட வாகன ஊர்தியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

சர்வமத பெரியார்கள், பொதுமக்கள், அன்னையர் முன்னணி உறுப்பினர்கள் என பல நூற்றுக்கணக்கானோர் முகத்துவார வீதி ஊடாக அரசடி சந்தி கல்முனை வீதியால் கல்லடிப் பாலத்தை கடந்து கடற்கரை வீதி வழியாக நாவலடியை அடைந்து அங்கு மாலை வேளையில் அன்னைபூபதியின் வித்துடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஆயிரக்கணக்கான மக்கள் மண்போட்டு இறுதி மரியாதையை செலுத்தினர் நாவலடியில் இன்றும் அன்னைபூபதியின் நல்லடக்க நினைவிடம் அப்படியே உள்ளது.

கடந்த 2004,டிசம்பர், 26இல் ஏற்பட்ட கடல்கோள் அனர்த்தம் சுனாமி தாக்கத்தால் நாவலடி ஊர் முழுமையாக பாதிக்கப்பட்டு பல கட்டங்கள் ஆலயங்கள் சேமக்காலை கல்லறைகள் சேதமாக்கப்பட்டபோதும், அன்னை பூபதியின் கல்லறையில் எந்த சேதங்களும் ஏற்படவில்லை என்பதை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இன்று 33, ஆண்டுகள் அன்னை பூபதி மறைந்தாலும் அவர் தியாகம் எம்மைவிட டு பிரியாது, உலக வரலாற்றில் ஒரு பெண் உண்ணாநோன்பு இருந்து உயிர்த்தியாகம் செய்த வரலாறு வேறு எந்த நாட்டிலும் இல்லை ஈழமணித் திருநாட்டில் மட்டக்களப்பு மண்ணின் 56, வயது நிரம்பிய தாய் தியாகி அன்னை பூபதிக்கு மட்டுமே உண்டு என்பதை அனைவரும் புரிந்து கொள்வோம்.

“எழில் கொஞ்சும் மட்டக்களப்பிலே

எதிரியின் முகத்திரை கிழித்த ஏக தலைவி

எதற்கும் அஞ்சா தாயகத்தாய் அன்னைபூபதி

என்றும் அழியாது அன்னாரின் தியாகம்”