முஸ்லிம்களுக்கு மட்டும் தடைகள் விதிக்கப்படுவது ஏன்? -இம்ரான் மஹ்ரூப் கேள்வி

60
104 Views

கொரோனாவை காரணம் காட்டி முஸ்லிம்களுக்கு மட்டும் தடைகள் விதிக்கப்படுவது ஏன் என திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கேள்வி எழுப்பினார்.

கிண்ணியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் “இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்கள் இனவாத ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்படுவார்கள் என நாம் அன்றே எச்சரித்திருந்தோம். நாம் கூறியபடியே  நடந்து வருகிறது.

அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படும் சந்தர்ப்பங்களில் அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தை கையிலெடுத்தே அந்த அதிருப்தியை மறைக்கிறார்கள்.

உயிர்த்த ஞாயிறு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட சிங்கள அமைப்புக்கள் எதனையும் தடைசெய்யாது முஸ்லிம் அமைப்புக்களை மாத்திரம் தடை செய்துள்ளனர். ரமழான் மாதத்தை முன்னிட்டு பள்ளிவாயலில் நூறு பேருக்கு மேல் ஒன்றுகூட முடியாது. நோன்புக் கஞ்சி பகிரமுடியாது என சுகாதார அமைச்சால் முஸ்லிம்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் புத்தாண்டை முன்னிட்டு மக்கள்  ஆயிரக்கணக்கில் சமூக இடைவெளி இன்றி ஒன்று கூடியதை நாம் கண்டோம்.

ஆகவே புத்தாண்டில் தடைகளை விதிக்காத அரசு ஏன் ரமழான் மாதத்தில் முஸ்லிம்களுக்கு மாத்திரம் தடைகளை விதிக்க வேண்டும்.

இதற்கு பின்னாலும் பெரிய இனவாத நிகழ்ச்சிநிரல் உள்ளது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here