முதலமைச்சர் வேட்பாளர் சர்ச்சை! விக்கி – மாவை எதிர்பாராத சந்திப்பு

68
114 Views

யார் மீதும் நாங்கள் கோபிப்பதில்லை. அது எங்கள் வழக்கமும் அல்ல. ஆனால் உரிய சமயத்தில், உரிய இடத்தில், உரிய முறையில் பதிலடி தருவோம்” என்று விக்னேஸ்வரனுக்கு மாவை. சேனாதிராஜா பதிலடி கொடுத்திருக்கின்றார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பொது நிகழ்வு ஒன்றில் நேற்றைய தினம் இருவரும் எதிர்பாராத விதமாகச் சந்தித்துக்கொண்டனர். அப்போது “என்னுடைய பகிரங்கக் கருத்து வெளிப்பாட்டால் என் மீது கோபமாக இருப்பீர்கள் போலும்” என விக்னேஸ்வரன் கேட்டபோதே மாவை இவ்வாறு பதிலளித்திருக்கின்றார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

“நேற்றைய நிகழ்வு ஒன்றில் முன்னாள் முதல்வர் விக்கியும், முதல்வர் பதவியை முதல் தரம் பறிகொடுத்து விட்டு அதை இந்தத் தடவை எப்படியும் கைப்பற்ற வேண்டும் என்ற இலக்குடன் உள்ள மாவையும் நேரில் சந்திக்க வேண்டி நேர்ந்துவிட்டது.

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் மகளின் பூப்புனித நீராட்டு விழா நிகழ்வு ஆரம்பமான போதே நேரத்துடன் முன்வரிசையில் அமர்ந்திருந்தார் தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் எம்.பியுமான மாவை. சேனாதிராசா. பக்கத்தில் முன்னாள் மட்டக்களப்பு எம்.பி. சீனித்தம்பி யோகேஸ்வரன். யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சருமான நீதியரசர் விக்னேஸ்வரன் சற்றுப் பிந்தித்தான் வந்தார்.

இரண்டாவது வரிசையில் நேரே மாவை. சேனாதிராசாவுக்குப் பின்னால் ஆசனம் கிடைத்தது விக்னேஸ்வரனுக்கு. முதலமைச்சர் பதவிக்கு மாவை பொருத்தமேயற்றவர் என விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்து சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

மாவைக்குப் பின்னால் வந்து அமர்ந்த நீதியரசர் விக்னேஸ்வரன் மாவையின் முதுகில் தடவினார். மாவை திரும்பிப்பார்த்தார். “என்னுடைய பகிரங்கக் கருத்து வெளிப்பாட்டால் என் மீது கோபமாக இருப்பீர்கள் போலும்” என்றார் விக்னேஸ்வரன்.

“இல்லை, இல்லை. யார் மீதும் நாங்கள் கோபிப்பதில்லை. அது எங்கள் வழக்கமும் அல்ல. ஆனால் உரிய சமயத்தில், உரிய இடத்தில், உரிய முறையில் பதிலடி தருவோம்” என்று மாவை பதிலடி கொடுத்தார். அந்தப் பதிலைச் சிரித்து ஏற்றுக்கொண்டார் விக்னேஸ்வரன்.

விக்னேஸ்வரனைக் கண்டதும் மாவை. சேனாதிராசாவிற்குப் பக்கத்தில் இருந்த சீனித்தம்பி யோகேஸ்வரன் எழுந்து தனது ஆசனத்தில் இருக்கும்படி விக்னேஸ்வரனுக்கு இடம் கொடுத்தார். அதனையடுத்து மாவைக்குப் பக்கத்தில் அமர்ந்து சிரித்து உரையாடினார் விக்னேஸ்வரன். இருவரும் சிரித்து உரையாடினாலும் உள்ளுக்குள் என்ன இருந்ததோ தெரியவில்லை!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here