நீதிபெறப் பலநாடுகளின் பங்களிப்புத் தேவை இதுவே ஈழத்தமிழர் அமைதிக்கான இராசதந்திரம்

ஐக்கிய நாடுகள் சபை ஏப்ரல் மாதம் 24ஆம் திகதியை  நீதிக்கான பலநாடுகளின் பங்களிப்புக்கும், அமைதிக்கான இராஜதந்திரத்திற்குமான அனைத்துலகத்தினம் (The International Day of Multilateralism and Diplomacy for Peace), என 2019 இலிருந்து கொண்டாடி வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மூன்று தூண்களாகக் கருதப்படும் 01.அமைதியும், பாதுகாப்பும், 02. வளர்ச்சிகள், 03. மனித உரிமைகள் என்பனவற்றை பலநாடுகளின் பங்களிப்புடன் நிலைநிறுத்தி, அமைதிக்கான இராஜதந்திரத்துடன் பலநாடுகளையும் செயற்பட வைத்து, மீண்டும் இரண்டாவது உலகப்போர் போன்ற அழிவுதரு யுத்தங்கள் உலகில் தோன்றாது பாதுகாத்தலைத், தனது தலையாய நோக்காக இந்த அனைத்துலக தினத்தின் மூலம் உறுதி செய்து வருகிறது. “பலநாடுகளின் பங்களிப்பு என்பது அவற்றுக்குள்ள அச்சுறுத்தல்களைப் பகிர்ந்து கொள்வதாக மட்டும் இராது, அந்நாடுகளில் பொதுப் பங்களிப்புக்கள் மக்களுக்கு மறுக்கப்படுவது அல்லது பறிக்கப்படுவது குறித்தும் கவனத்தில் எடுத்துச் செயற்படல்” என்கிற கருத்தினை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் இத்தினத்துக்கான இவ்வாண்டுச் செய்தியில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

இத்தினம் ஈழத்தமிழர்களுக்கும் தாங்கள் நீதியைப் பெற ஒரு சில நாடுகளின் பங்களிப்பை மட்டுமல்ல பலநாடுகளின் பங்களிப்பைப் பெற வேண்டும் என்கிற விழிப்புணர்வைத் தருகிறது. மேலும் ஈழத்தமிழர்கள் தங்கள் வரலாற்றுத் தாயகத்திலேயே, பொதுப்பங்களிப்பு சிறீலங்கா அரசாங்கத்தால் மறுக்கப்பட்டும், அமைதியும் பாதுகாப்பும், வளர்ச்சிகளும், மனித உரிமைகளும் இல்லாமலும் வாழ்கின்றனர்.  எனவே  இவர்களின் நீதிக்காகப் பலநாடுகளின் பங்களிப்பைப் பெறும் பொறுப்பும், இராசதந்திரத்தின் மூலம் இவர்களின் அமைதியை உறுதிப்படுத்தும் கடமையும்  உள்ள ஐக்கிய நாடுகள் சபை அதன் முன்னுரிமைச் செயற்திட்டத்தில் ஈழத்தமிழர்க்கான நீதியையும், அமைதியையும் முன்னெடுக்க ஈழத்தமிழர்களும் உலகெங்கும் புலம்பதிந்து வாழும் ஈழத்தமிழர்களும், உழைக்க உறுதி எடுக்கும் நாளாக இந்த அனைத்துலகத் தினத்தை ஈழத்தமிழ் மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

உலகெங்கும் புலம்பதிந்து வாழும் ஈழத்தமிழர்களே இவ்விடயத்தில் அதீத கவனம் செலுத்த வேண்டியவர்களாக உள்ளனர். இதனைத் தடுக்கும் நோக்கிலேயே உலகெங்கும் செயற்படும் பல்வேறு ஈழத்தமிழர் நலன்புரி அமைப்புக்களையும், ஈழத்தமிழ்ச் சமூக ஆர்வலர்களையும், பயங்கரவாதப் பட்டியல் ஒன்றில் அடக்கி வெளியிட்டுள்ளதும் அல்லாமல், இவர்களுடன் தொடர்புள்ளவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் எவரும் சிறீலங்காவுக்குள் சென்றால் கைதுசெய்யப்படுவர் எனவும், சிறீலங்காவில் உள்ளவர்கள் இவர்களுடன் எத்தகையத் தொடர்புகளை வைத்திருந்தாலும் அவர்களும் கைதுசெய்யப்படுவர் எனவும் சிறீலங்கா உத்தரவிட்டு ஈழமக்களை, பலநாடுகளினதும் குடிகளாகப் பரவி   வாழும் அவர்களின் கிட்டிய குடும்ப உறுப்பினர்களில் இருந்து தனிமைப்படுத்திட முனைந்துள்ளது.

அத்துடன் ஈழமக்களைப் பொருளாதார ரீதியாகவும், தனிமைப்படுத்தும் நோக்கில், ஈழத்தமிழ் மக்கள் உலகில் பரந்து வாழும் தங்கள் கிட்டிய குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்களிடமிருந்து நிதிவள உதவிகளையோ அல்லது மதிவள தொழில்நுட்ப ஆதரவுகளையோ பெறுவதைத் தடுக்க, வெளிநாட்டின் தொண்டர் அமைப்புக்களோ தனியாட்களோ நேரடியாக ஈழத்தமிழர்களுக்கு அவர்களுடைய வாழ்வுக்கான நிதி உதவிகளைச் செய்ய முடியாது, அத்தனை நிதி உதவிகளும் இராணுவ உயரதிகாரிகளால் நிர்வகிக்கப்படும் கட்டமைப்புக்கள் வழி செய்யப்பட வேண்டும் என்கிற உத்தரவைச் சிறீலங்கா பிறப்பித்துள்ளது.

இவ்வாறு சமூகநிலையிலும், பொருளாதாரநிலையிலும் உயிர் வாழ்வதற்கான நாளாந்த வாழ்வுக்கான உதவிகளைக் கூட பெற இயலாத வகையில் உள்ள ஈழத் தமிழ்மக்கள் இன்றைய உலகின் அதீத மனிதாய தேவைகளுக்கு உரிய மக்களாக உள்ளனர். இவர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை இவர்கள் வாழும் நாட்டின் இறைமையை மீறி நேரடியாக உதவலாம் என்பது குவைத் யுத்த நேரத்தில் பிரித்தானிய வெளிநாட்டுச் செயலாளர் திரு. டக்ளஸ் கியூட் அவர்களின் நெறிப்படுத்தலில் ஐக்கிய நாடுகள் சபை எடுத்த முடிபு.

எனவே ஈழமக்கள் தங்களுக்கான நீதியைப் பெற, பலநாடுகள் உடைய கூட்டு இணைப்பின் மூலம் ஐக்கிய நாடுகள் சபை முனைவது சிறீலங்காவின் இறைமையை மீறும் செயற்பாடாகாது. ஈழத்தமிழர்கள் தாயகத்திலும் உலகிலும் எல்லா நாடுகளுடனும் அந்த அந்த நாட்டு மக்களுடனும், அரசுக்களுடனும் உரையாடல்களை, உறவுகளை வளர்த்து அந்நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தின் இந்த முயற்சிக்கு உதவ உழைக்கவேண்டும். அவ்வாறே தாயகத்திலும் உலகிலும் உள்ள ஈழத்தமிழர்கள், இராசதந்திரமாக உலக அரசியல் பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப சரியானதைச் சரியாகச் செய்ய வேண்டும். இதுவே ஈழத்தமிழர்களுக்கான அமைதியை உறுதிப்படுத்த உதவும் இராசதந்திரமாகும்.

அத்துடன் எதிர்வரும் யூன் மாதம் 21ஆம் நாள் கடந்த ஆண்டு கோவிட் 19 வீரியத் தாக்கத்தால் ஓத்திவைக்கப்பட்ட  பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் சந்திப்பு,  ருவாண்டாவில், ‘பொதுவான எதிர்காலத்தை அமைத்தல், இணைத்தல், புதுப்பித்தல், உருமாற்றல்’ என்னும்  மையப்பொருளில் நடைபெறவுள்ளது. இதனைச் சிறீலங்கா ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையகத்தின் முயற்சிகளைத் தடுப்பதற்கான களமாகப் பயன்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடங்கிவிட்டது. இந்நிலையில் பொதுநலவாய நாடுகள் அனைத்துடனும் ஈழமக்கள் தங்களின் நீதிக்கான பலநாடுகளின் பங்களிப்பையும் பெறக்கூடிய அமைதிக்கான  இராசதந்திரத்துடன், எந்த நாடுகளையும் பகைக்காது, வெறுக்காது, ஓதுக்காது, அனைத்து நாடுகளுடனும் உறவுகளை உடனடியாக வளர்த்தல் முக்கியம்.

– ஆசிரியர்-