சிறையில் வாடுவோருக்கு குரல் கொடுக்கின்றவர்கள் எம் மத்தியில் தேவை -மன்னார் ஆயர்

64
176 Views

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்,சிறையில் அடைபட்டு இருப்போர் என பல வகையிலும் பல துன்பங்களுக்கு மத்தியிலும் வாழ்பவர்கள் எமது சமூதாயத்தில் இருக்கின்ற நிலையில், அவர்களுக்காக குரல் கொடுக்கின்றவர்கள் எம் மத்தியில் கட்டாயமாக தேவைப்படுகின்றார்கள் என மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்தார்.

துணிச்சலுள்ள பெண்மணிக்கான சர்வதேச விருதினைப் பெற்ற மன்னாரை சேர்ந்த சட்டத்தரணி திருமதி ரனித்தா ஞானராஜா  வரவேற்கப்பட்டு கௌரவிக்கும் நிகழ்வு  மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்றது.

இதன் போது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய அவர்,

“நாங்கள் வாழும் இந்த காலத்திலே மனித உரிமைகள் எமக்கு கொடுக்கப் படுகின்றனவா? என தேடிப் பார்க்கின்ற இக்கால கட்டத்தில் பல விதமான பிரச்சினைகள் தான் எழுகின்றது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் , சிறையில் அடைபட்டு இருப்போர் என பல வகையிலும் பல துன்பங்களுக்கு மத்தியிலும் வாழ்பவர்கள் எமது சமூதாயத்தில் இருக்கின்றார்கள்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் எம்மிடம் இருந்து மறைந்த மேதகு பேரரூட் கலாநிதி இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்கள் மரணித்ததன் பின்னர் ஊடகங்களின் ஊடாக தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட பல்வேறு செய்திகள் ஊடாக ஆயர் அவர்கள் மக்களுக்காக எப்படி உரிமைகளுக்காக போராடினார்.

அவர்களுடைய பிரச்சினைகளை சொல்லிக்கொள்ள முடியாத நிலையில் அவர் அவர்களுக்காக பேசினார் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். அப்படியான நிலையில் மன்னாரில் எங்களுக்கு இருந்த ஒரு தலைவன் இரண்டு வாரங்களுக்கு முன் மறைந்து விட்டார்.

எங்கள் சமூதாயத்திலே மக்களுக்காக வாதாடுகின்றவர்கள், மக்களினுடைய பிரச்சினைகளை அறிந்து அவர்களுக்காக குரல் கொடுக்கின்றவர்கள் கட்டாயமாக தேவைப்படுகின்றார்கள்.

அந்த வகையிலே சட்டத்தரணி திருமதி ரனித்தா ஞானராஜா அவர்கள் இந்த இளம் வயதில் அவருடைய கெட்டித்தனத்தினால் இந்த மக்களுக்காக குரல் கொடுத்துத்தான் துணிச்சலுள்ள பெண்மணிக்கான சர்வதேச விருதினைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

எனவே மன்னார் மாவட்டம் குறித்த விருது தொடர்பில் மகிழ்ச்சி அடைய வேண்டும்.எங்கள் மத்தியில் ஒரு சட்டத்தரணி சமூக ரீதியிலே சிந்தித்து மக்களுக்காக குரல் கொடுத்து மக்களின் உரிமைகளை பெற்றுத்தர தயாராக இருக்கின்றார் என்பதை கண்டு நாங்கள் இறைவனுக்கு நன்றி கூறுகின்றோம்”.என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here