குருந்தூர்மலையில், தமிழர்கள் வழிபடுகளில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்படும் – சுமந்திரன்

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டுத்தலமான குருந்தூர்மலையில், இந்து மக்கள் வழிபடுவதற்கான முழு உரித்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக நடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர்,  குருந்தூர் மலையில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் வழக்கொன்றினைத் தொடர்வது தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தினைச் முக்கிய ஆவணங்கள் சிலவற்றினை கையளித்திருந்தனர்.

இச் சந்திப்பினையடுத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன்,

“குருந்தூர்மலை சம்மந்தமாக சில வருடங்களுக்கு முன்பிருந்தே ஒரு பிணக்கு ஏற்பட்டது. அது தொடர்பாக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றிலே வழக்கொன்று தாக்கல்செய்யப்பட்டு அதிலே ஒரு இணக்கப்பாடு எய்தப்பட்டிருக்கின்றது.

இதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொல்லியல் திணைக்களத்தினர், அமைச்சரோடு வந்து அங்கே இருந்த வழிபாட்டுச்சின்னத்தை அகற்றி ஒரு புத்தர் சிலையை வைத்து புதியதாக தொல்பொருள் ஆராட்சி என்று ஆரம்பித்துள்ளார்கள்.

ஆகையினாலே இது தொடர்பாக வழக்கு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வதற்காக, கடந்த 2018ஆம் அண்டு தாக்கல்செய்யப்பட்ட AR/673/18 என்ற வழக்கின் ஆவணப் பிரதியை முழுமையாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் என்னிடம் கையளித்திருக்கின்றார்.

அந்தவகையில் இது தொடர்பான அடுத்தடுத்த நடவடிக்கைகள், அதாவது அந்த இடத்திலே இந்து மக்கள் சென்று வழிபடுவதற்கான முழு உரித்தையும் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையினை நாங்கள் மேற்கொள்வோம்” – என்றார்.