தமிழர்கள் எழுச்சி பெற வேண்டும் என்பதே இன்றை நிலை – மட்டு.நகரான்

89
156 Views

தமிழர் தாயகப் பகுதியானது பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும், அடக்குமுறைகளுக்கும் உள்ளாகிவரும் நிலையில், தாயகப் பகுதிகளில் தமிழ்த் தேசியத்தின் அடையாளங்களை பாதுகாப்பதற்கான செயற்பாடுகள் என்பது எழுச்சி பெற வேண்டும் என்பதே இன்றைய எதிர்பார்ப்பாக உள்ளது.

தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டங்களில் நாங்கள் புறக்காரணிகளில் அதிக கவனம் செலுத்திவரும் நிலையில், உள்ளக காரணிகளை வலுப்படுத்துவதற்கான செயற்றிட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படாத நிலையே இருந்து வருகின்றது.

ஆயுதப்போராட்ட காலத்தில் பெரும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஆயுதப் போராட்டத்தின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளில் புறக்காரணிகளைவிட உள்ளக காரணிகளுக்கு அதிகளவு முக்கியத்துவம் வழங்கியதன் காரணமாகவே சர்வதேச அளவில் தமிழர்களின் போராட்டம் பெருமைக்குரியதாகவும் பாராட்டிற்குரியதாகவும் பார்க்கப்பட்டது.

நான் இங்கு குறிப்பிடும் உள்ளக காரணியென்பது தமிழர்கள் மத்தியில் இன்று ஒரு கட்மைப்பில்லாத – வகையில்லாத – நிலையே காணப்படுகின்றது. தமிழ் தேசியத்தின் முதுகெலும்பாக கருதப்படும் தமிழ் மொழியை மேம்படுத்துவதற்கான செயற்பாடுகள் என்பது மிகவும் அரிதான வகையிலேயே முன்னெடுக்கப்படுகின்றது. முன்னெடுக்கப் படும் செயற்பாடுகள் தமிழ்த் தேசியத்துடன் இணைந்ததாக முன்னெடுக்கப்படும் போதே அது தமிழ் தேசியத்திற்கான பலமான படியாக இருக்கும்.

இன்று வடகிழக்கில் தமிழர்களின் பகுதிகளில் தமிழ் மொழி இரண்டாம் மொழியாகவே கருதும் நிலை காணப்படுகின்றது. தமிழ் மொழிக்கான அந்தஸ்தை அனைவரும் வழங்கும்போதே தமிழ் மொழியின்பாலும், தமிழ் தேசியத்தின்பாலும் இளம் சமூகம் திரும்பிப் பார்க்கும் நிலையேற்படும்.

தமிழ் தேசியத்தின் உள்ளக காரணிகளாக காணப்படும் தமிழர்களின் கலை, கலாசார, பண்பாட்டு அடையாளங்களை பாதுகாப்பதும் அதன் உன்னத தன்மையினை எதிர்கால தமிழ் சமூகத்திற்கு கொண்டு செல்வதும் தமிழ் தேசியத்தின் அடுத்தகட்ட நகர்வின் மிக முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாடாகும்.

நாங்கள் தமிழர்களின் மொழி, தமிழர்களின் கலை, கலாசார, பண்பாட்டு அடையாளங்களை காணாமல் செய்துவிட்டோ, அழித்துவிட்டோ அடுத்த சந்ததிக்கு தமிழ் தேசியம் என்ற ஒன்றை எழுத்து வடிவில் மட்டுமே கொண்டு செல்லும் நிலையேற்படும். அந்த தமிழ் தேசியத்தில் எழுச்சி என்பது நாவின் நுனியில் உள்ள ஒன்றாகவும் தோன்றி மறையும் உணர்வில் ஒன்றாகவுமே எதிர்கால தமிழர் இளம் சமூகம் நோக்கும்.

ஆயுதப் போராட்ட காலத்தில் தமிழ் மொழியை காப்பதற்கும், தமிழர்களின் கலை கலாசாரங்களை பாதுகாப்பதற்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் முன்னெடுத்த செயற்பாடே வடக்கு கிழக்கில் இன்றும் தமிழ் தேசியம் எழுச்சி பெற்றுள்ளதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

ஆனால் இன்று அனைத்தும் சிதைவடைந்து காணாமல் போகும் நிலையினை காண முடிகின்றது. இன்று தமிழர் நகரங்களில் தமிழ் மொழிக்குரிய அந்தஸ்து என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் தேசிய கட்சிகளின் மாநகரசபைகளின் கட்டுப்பாட்டில் உள்ள நகரங்களிலேயே தமிழ் மொழிக்குரிய அந்தஸ்து இதுவரையில் வழங்கப்படவில்லை. அதேபோன்று தமிழர்களின் பாரம்பரிய, கலை, கலாசரங்களை பேணும் எந்த முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இவ்வாறான செயற்பாடுகள் காரணமாகவே வடகிழக்கில் தொடர்ச்சியாக தமிழ் தேசியம் பின்னடைவினை எதிர்நோக்கி வருவதாக உணரப்படுகின்றது. தமிழர்களின் மொழி, கலை, கலாசார, பாரம்பரியங்கள் பேணப்பட்டு அவை தொடர்பான செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் போது, அது தமிழ் தேசியத்தின் பால் கொண்டுள்ள பற்று அதிகரித்து அதன் மீதுகொண்டுள்ள உறுதிப்படும் தொடர்ந்து நிலைக்கும் சூழ்நிலை ஏற்படும்.

இன்று தமிழர் பகுதிகளில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் மறைந்து சென்றுவிட்டன. எமது பாரம்பரிய கலாசார நிகழ்வுகளும் தொன்றுதொட்டு வந்த மரபுகளும் மறைந்து வருகின்றன. இவற்றினையெல்லாம் எதிர்கால சமூகத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டுமானால், வட கிழக்கு இணைந்த தமிழ் கலை கலாசார, பண்பாட்டு கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

இன்று கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் தமிழர்கள் மத்தியில் இருந்த பல்வேறு விடயங்கள் காணமல் போயிருக்கின்றன. கிராமப்புறங்களில் ஓரளவு முன்கொண்டு செல்லப்பட்டாலும், நவீனத்துவத்தின் காரணமாக பல விடயங்கள் தொலைக்கப்பட்டுள்ளன.

கடந்த காலத்தில் தமிழ் தேசியத்தினையும் தமிழர்களின் வரலாறுகளையும் இளந்தலைமுறையினருக்கு கொண்டு சென்ற பாரம்பரிய கூத்துக்கலை அழிந்து வருகின்றது. கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித்துவமாக பேணப்பட்டு வந்த இந்த கூத்துக்கலைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அல்லது அருகி வருகின்றது. அதன் கலைஞர்கள் கண்டுகொள்ளப்படாத நிலையில் அவற்றினை முன்கொண்டு செல்லமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஒரு சில பகுதிகளில் அது தொடர்பில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும் பெரும்பாலான இடங்களில் அதன் தடயங்கள் அழிந்தே வருகின்றது. நாங்கள் எதற்காக போராடினோமோ, எதனை பாதுகாப்பதற்காக போராடினோமோ அவையெல்லாவற்றினையும் நாங்களே அழிக்கும் நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றோம். வெறும் பசப்புவார்த்தை தமிழ் தேசியம் பேசிக்கொண்டு அரசியலுக்காக வலம்வரும் அரசியல் வியாதிகள் இது தொடர்பில் சற்றும் சிந்திக்கும் நிலையிலும் இல்லை.

நாங்கள் தமிழ் தேசியத்தினைப் பெற்றாலும் அதனை கட்டமைத்துக் கொண்டு செல்ல தளம் இல்லையென்றால், நாங்கள் இழந்த இழப்புக்கும் அழிவுகளுக்கும் எந்தவித பிரயோசனமும் இல்லாத நிலையே உள்ளது.

எனவே எதிர்கால தமிழ் தேசியம் பலமானதாகவும், வடகிழக்கு இணைந்த தாயகத்தில் அனைத்து வளங்களையும் கொண்ட தமிழ் தேசிய கட்டமைப்பு உருவாக வேண்டுமானால், தமிழர் தாயகத்தில் பலமான கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

தமிழ் தேசிய அரசியலை நாங்கள் எவ்வாறு ஒருக்கிணைக்கின்றோமோ அதே போன்றதொரு கலை கலார மேம்பாட்டு கட்டமைப்பு அவசரமாக உருவாக்கப்பட்டு வடகிழக்கில் தமிழர் தாயகத்தில் தமிழ் மொழியையும் தமிழர் கலாசாரத்தினையும் மேம்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here