பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் மாநகர முதல்வர் மணிவண்ணன் அதிகாலை கைது

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் மாநகர முதல்வர் மணிவண்ணன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றிரவு 8.00 மணியளவில் விசாரணைக்காக யாழ். பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட அவர், ஆறு மணி நேரமாக நடைபெற்ற விசாரணைகளின் பின்னர் இன்று அதிகாலை 2.00 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையால் அமைக்கப்பட்டுள்ள மாநகர காவல் படை மற்றும் அதன் சீருடை தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், வரதராஜன் பார்த்தீபன் மற்றும் ஆணையாளர் உள்ளிட்டோரிடம் வாக்குமூலங்களை யாழ்ப்பாணம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பதிவு செய்துள்ளனர்

யாழ். மாநகரத்தை சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருக்கும் பொருட்டு, மாநகர சபையினால் மாநகர காவல் படை ஒன்று நேற்று தமது பணியை ஆரம்பித்தது. இதற்குப் பிரத்தியேகமாக சீருடை ஒன்றும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மணிவண்ணன் கைது செய்யப்பட்டிருப்பதாக அவரது ஊடகப் பிரிவு தற்போது அறிவித்துள்ளது.